Published:Updated:

தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸின் தோல்வி உறுதி : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Vikatan Correspondent

மதுரை டிசம் 26

##~~##

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸின் தோல்வி உறுதி என மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியது :

தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸின் தோல்வி உறுதி : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் காங்கிரஸாரின் கருத்துகளைக் கேட்டுள்ளார். அப்போது திமுக கூட்டணி வேண்டாம் என இளைஞர் காங்கிரஸார் கூறியுள்ளனர். இதைக் கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக ராகுல் உறுதியளித்துச் சென்றுள்ளார். கட்சி மேலிடமும் நல்லதொரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன். மேலிடத்தின் முடிவே எங்களது முடிவும்.

திமுகவுடன் கூட்டணி தொடரும் என சோனியா காந்தி எந்தக் கூட்டத்திலும் அண்மையில் கூறவில்லை. இந்த நிமிடம் வரை திமுகவுடன் கூட்டணியில்தான் உள்ளோம். ஆனால், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது கட்சி மேலிடம் அறிவிக்கும்போதுதான் தெரியும். திமுக கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூறவில்லை. கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை என தங்கபாலு கூறினார். ராகுல்காந்தி வருகையின்போது, திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என இளைஞர் காங்கிரஸார் கூறியுள்ளனர். அவர்கள் மீது தங்கபாலு நடவடிக்கை எடுப்பாரா?

சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி அடைகிற வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என கருத்தைத் தெரிவித்தோம். மேலும் திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியே அடையும் என்று இப்போது கூறுகிறேன்.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும். இதன் மூலம் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கலாம். இலவச வண்ணத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டங்களைவிட அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்புவது சிறந்ததாகும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தனியார் சொத்துகளை போலி ஆவணம் மூலம் கும்பலாகச் சிலர் அபகரித்து வருகின்றனர். இந்தக் கும்பல் ஆளும் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க போலீஸாரை அரசு முடுக்கிவிட வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வரும் பிப்ரவரியில் அறிக்கை தாக்கல் செய்யவும், அதைக் கண்காணிக்கவும் சிறப்புக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறப்பு மக்களவைக் கூட்டத்தை கூட்டத் தயார் எனக் கூறியுள்ளார். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோருவது அர்த்தமற்றது. ஜனநாயகத்துக்கு எதிரானது.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் காங்கிரஸுக்கு சரிவு இல்லை. ஊழல் குற்றச்சாட்டு வந்த காங்கிரஸார் மீது முடிவுக்காகக் காத்திராமல் நடவடிக்கை எடுத்த கட்சி காங்கிரஸ். ஆனால், கர்நாடக முதல்வர் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தும் பாஜக அவர்களைக் காப்பாற்றவே முயற்சிக்கிறது. காங்கிரஸப் போல ஊழலை ஒழிக்க மற்ற கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை.

பெரியார் தனது சொத்துகளை அரசும், மக்களும் காப்பாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது சொத்துகளைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் மறைந்து வருகிறது. சோனியா தலைமையின் கீழ் அனைவரும் செயல்படுகிறோம் என்று கூறினார்