Published:Updated:

ஜன.1 முதல் இலவச பொங்கல் பை வழங்கும் திட்டம்

Vikatan Correspondent

சென்னை,  டிச. 26, 2010

ரேஷன் கடைகளில் இலவசப் பொங்கல் பை வழங்கும் திட்டம் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. ##~~##

இந்தத் திட்டத்தை, சென்னை பல்லாவரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலவசப் பொங்கல் பை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்தப் பை அளிக்கப்படுகிறது.

ஜனவரி 1ம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை இந்த பைகளை ரேஷன் பொருட்கள் வாங்கும் கடைகளிலே பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பையில் அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசிப்பயிறு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் ஆகியன அடங்கியுள்ளன. ஜனவரி 1ம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் விழாவில், இலவசப் பொங்கல் பை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இந்த நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலை வகிக்கிறார். இதே போன்று, இலவச வேட்டிசேலை வழங்கும் திட்டமும் அன்றே தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.265 கோடி ஒதுக்கப்பட்டது.

நடப்பாண்டில் பருத்தி விலை உயர்ந்துள்ளதால், இலவச வேட்டிசேலைக்கான செலவு ரூ. 300 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் 1.59 கோடி சேலைகளும், 1.59 கோடி வேட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த ஆண்டு சேலை, வேட்டியின் அடர்த்தி அதிகமாக இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தறித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.