Published:Updated:

வெங்காய விலை கட்டுக்குள் வரும்: பிரணாப்

கொல்கத்தா, டிச.26, 2010

வெங்காய விலை கட்டுக்குள் வரும்: பிரணாப்

வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதிபடத் தெரிவித்தார்.  ##~~##

கோல்கத்தாவுக்கு வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கும் சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம் விரைவில் சந்தையை அடையும். எனவே, வெங்காயம் விலை கட்டுக்குள் வந்துவிடும்," என்றார்.
 
மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ள நடவடிக்கையின் மூலம் வெங்காயத்தின் விலை குறைய தொடங்கி விட்டது என்ற அவர், "தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சில நேரங்களில் இடைவெளி ஏற்பட்டு விடுவதால் சில பழ வகைகள், காயகறிகள் மற்றும் பால் போன்ற உணவுப் பொருட்கள் சில சீசன்களில் விலை அதிகரித்துவிடுகிறது," என்றார் பிரணாப்.

தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி வெகுவாக பாதித்தது.

இதனால், கடந்த வாரத்தில் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.85 அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.