Published:Updated:

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?
உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

உழவர் என்பவர் யார்?

நமக்காக உழைத்து, உணவளித்து அதே கையால் தூக்கு மாட்டிக்கொள்பவரே உழவர் என்று சொல்லும் அளவிற்கு உழவரின் தற்கொலை அதிகரித்து வருகின்றன. உழவுத் தொழிலா அல்லது உயிர் எடுக்கும் தொழிலா என்று சந்தேகம் கொள்ளும் வகையில் உள்ளது விவசாய நிலைமை.

உலகில் யார் வேலை நிறுத்தம் செய்தாலும், உலகிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், உணவளித்து, உயிர் கொடுக்கும் உழவுத் தொழில் செய்யும் விவசாயப் பெரும் மக்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலகமே முடங்கிப்போகும். அப்படிப்பட்ட விவசாய மக்கள் அன்றாடம் தற்கொலை செய்வதும், ஊரை விட்டு காலி செய்து நிரந்தர வருமானத்திற்கு வாட்ச்மேன் வேலையாவது கிடைக்குமா என நகரில் தஞ்சம் புகுவதும் 'விவசாய வீழ்ச்சி' என்று சொல்வதைவிட  உயிர் கொடுக்கும் உணவுத் தொழில், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொல்லப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். விவசாயிகள் ஒவ்வொருவரின்  தற்கொலையும்  மத்திய, மாநில அரசுகள் விவசாயம் மீது நடத்தும் 'தற்கொலைத் தாக்குதலாகவே' கருத வேண்டும்.

உலகிலேயே தொழில் சார்ந்த ஒரு பிரிவில் அதிக தற்கொலை நிகழ்வது இந்திய விவசாய தொழிலில் தான். சுமார் 30 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  'விவசாயிகளே! நாங்கள் உங்களோடு' என்று அரசியல்வாதி சொல்லும் போது விவசாயி கடனில் இருப்பார், தூக்கில் தொங்குவார், இல்லை தேர்தல் வருகிறது என்பதே உண்மை. வெள்ளமும், வறட்சியும் வருவதற்கு முன் கண்டுகொள்ளாத அரசு வெள்ள, வறட்சி நிவாரண நிதிக்கு வேகம் காட்டுவது ஏன்?

வெள்ளமும், வறட்சியும் விவசாயிகளை அழித்து விடுகிறது. ஆனால், அரசியல்வாதிகளை 'வாழ' வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். செம்மரம் வெட்டியதாக என்கவுண்டர் செய்யப்பட ஆந்திராவில், ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது எந்த அரசியல்வாதியை என்கவுண்டர் செய்வதோ? மரத்திற்கு உள்ள மதிப்பு கூட   விவசாயிகளுக்கு இல்லை.

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

உலகிலேயே மற்ற தொழில்களை விட விவசாயம் மாறுபட்டது. விவசாயம் மட்டுமே பஞ்ச பூதங்களோடு போராடி, உள்ளூர் அரசியல்வாதி உத்தரவிட்டால் பெறும் நீருக்கும், அண்டை வருண பகவான் மனம் வைத்தாலும், அண்டை மாநில 'அரசியல் பகவான்கள்'  மனம் குளிர்ந்து கொடுக்கும் நீரைப் பெற்று, இரவு, பகல் பாராமல் எந்தப்பாம்பு எங்கிருக்குமோ எனத் தெரியாமல், பயந்து தொழில்  செய்வது விவசாயம் மட்டும் தான்.

ஏற்கனவே கிராமத்தின் அடையாளமாக இருந்த கண்மாய்கள், குளங்கள் எல்லாம் அரசு, தனியார் நிறுவனங்கள் முடித்த வரை காலி செய்து விட்டது. ஏரிப் பாசனத்தை அழித்து, கிணற்றுப்பாசனத்திற்கு விவசாயிகளை மாற்றி மின் தேவைக்கு அரசிடம் பிச்சை எடுக்கும் நிலையில் வைத்துள்ளது. கண்மாய்கள் எல்லாம் அரசு குடியிருப்பாகவும், தொழில் நிறுவனமாகவும், கண்மாய் கரை சாமிகள் இருந்த இடமெல்லாம் அரசு சாராயம் குடிக்கும் இடமாகவும் மாற்றி விட்டது அரசின் 'விவசாய அழிவுப் புரட்சி'.

நாளொன்றுக்கு சுமார் 38 பேர் தற்கொலை செய்து நமக்காக சாகிறார்கள் என்றால் அது உழவர்கள் இனம் மட்டும் தான். நமக்காக போராடி, கடன் பட்டு, அலைந்து உற்பத்தி செய்து கடைசியில் மண்ணோடு மண்ணாவது உழவர்கள் வாங்கி வந்த வரமா இல்லை அரசு கொடுக்கும் சாபமா எனத் தெரியவில்லை. ஆண்டுக்காண்டு அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் உயர்வதைப் போல அதிக அளவில் விவசாயிகள் தற்கொலைச் சாவு விகிதம் உயர்கிறது.

விவசாயிகளிடம் தற்கொலை எண்ணம் ஏன்?

பயிர்களின் வறட்சி, கடுமையான மழைச் சேதம், அரசின் நிரந்தரமற்ற நீர் வழங்கல் பிரச்னைகள், நிலத்தடி நீர்மட்ட அழிவு, மின் பற்றாக்குறை, அதிகப்படியான உற்பத்தி செலவு, விலை இல்லாமை, விளைச்சல் இல்லாமை போன்றவையே முக்கிய காரணம். எருவையும், வேம்பு புண்ணாக்கையும் சுமந்த விவசாயி, இயற்கை விவசாயத்தை மறந்து அரசு சொன்ன யூரியா, பொட்டாஷ் என சுமக்கும் போது கடனையும் சுமக்க ஆரம்பித்தான் என்பதே உண்மை.

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைப்பீர்கள் என மருத்துவமனையில் பணம் பிடுங்க மருத்துவர் சொல்லும் அதே வசனம் விவசாயத்தில் தினமும் கேட்கும். ஆம், விவசாயத்திலும் உழைப்பை விட அதிர்ஷ்டம் இருந்தால் தான் பிழைக்க முடியும்.

போராட்டமே வாழ்க்கை!

அரசியல்வாதிகளின் போராட்டம், சம்பள உயர்வுக்கு வங்கிகள் போராட்டம் என்றால் ஒரு மணி நேரம் ரோட்டில் நின்று கத்தி விட்டு வீட்டுக்கு போவதா போராட்டம்? போராட்டம் என்றால் என்ன என்பதை விவசாயம் செய்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மழை பெய்கிறதா, ஐயோ அதிகம் பெய்தால் நெல் மிதந்து விடுமே என்றும், விளைச்சல் அதிகமா, ஐயோ விலை இருக்காதே,  இறக்குமதி செய்கிறார்களா, விலை போச்சே என்றும், அண்டை மாநிலத்தவர் விவசாயிக்கும் சேர்த்து கர்நாடகாவிலும், கேரளாவிலும் மழை பெய்ய வேண்டுமே என போராடும் விவசாயின் வாழ்க்கையே போராட்டம் தான். புமழை பெய்யுமா? என்று ஏங்கி நிற்கும்  நேரத்தில் புயல் வந்து ஒட்டுமொத்தமாக விளை நிலத்தை கடலாக மாற்றி விடும். புயல் கரையைக் கடந்தாலும், விவசாயிகளின் வாழ்க்கை புயல் சேதத்தில் கரை சேராது. அதில் இருந்து மனம் அமைதியை அடையாது.

மத்திய அரசின் கொள்கை

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கிய பயிர்க் கடன்களுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் என்பதை 11 சதவீதமாக மாற்றியும், நிலப்பறிப்பு என்ற திட்டத்தின் மூலம் மக்களை (சிரிப்பு) சிறப்பு  பொருளாதார முன்னேற்றத்திற்கும் அழைத்துச் செல்வதாக மத்திய  அரசு சபதம் எடுத்துள்ளது. யார் சிறக்க இந்தத் திட்டம் என்று தான் புரியவில்லை. அறுபது சதவீதத்திற்கு மேல் உள்ள விவசாய மக்களை அழித்தும் எதிர்கால இந்தியர்களின் உணவிற்கும் உத்தரவாதம் இல்லாத செயலை மத்திய அரசு செய்கிறது. தங்கத்தில் தவிடு வாங்க காசில்லாத புருஷன், தங்கத்தில் செருப்பு வாங்கித்தர்றேன்னு சொன்னானாம். அப்படி ஒரு கதையை மத்திய அரசு சொல்லி வருகிறது.

பொருளாதார மண்டலம், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய விளை நிலங்களைப் பறிக்கும் மத்திய அரசு முதலில் ஏற்கனவே சென்ற ஆட்சியில் கையகப்படுத்திய விளை நிலங்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த முடியுமா? இதுவரை மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இருக்கிறார்களா? சாலை வசதிக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க, பேருந்து நிறுத்த, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் 'பஸ் பே' உருவாக்க அரசால் நிலம் கையகப்படுத்த முடியுமா? நிலத்தை பறிக்கும் அரசே, உழவருக்காக புகழ் பெற்ற வணிக வளாகத்தில் வாடகைக்கு இடம் வாங்கித் தர முடியுமா? விவசாயிகளின் வேட்டியை உருவுவதில் தான் அரசு தீவிரமாக இருக்கிறது.

உயிர் கொடுப்பவரின் உயிரை எடுக்கலாமா?

பொதுமக்களின் மன நிலை

அரசு மட்டும் தான் என்றில்லை, பொதுமக்களும் விவசாய எதிரிகளாகவே உள்ளார்கள். புடவைக் கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு புடவை எடுக்கவும், நகை கடையில் 'ஆதாரமில்லாத சேதாரத்திற்கு' பணம் இழந்தும், தலையோ, தளபதியோ இந்தா ரூ.500 என டிக்கெட்டுக்கு பணத்தை வீசி விடும் நாம், வீட்டு வாசலில் வந்து நிற்கும் ஏழை விவசாய கூலியிடம் பேரம் பேசி, நோகடித்து குறைத்து வாங்கி லாபம் பார்ப்பது, விவசாயத்திற்கு எதிரி அரசு மட்டுமல்ல, நாமும் தான் என்பதை சொல்லாமல் சொல்ல வைக்கும். ஆறு ரூபாய் தோசை மாவை ஊற்றி ரூ.60க்கு தோசை விற்கும் உணவகத்தில் யாரும் பேரம் பேசுவதில்லை. நேரம் காலம் பார்க்காமல், விவசாய நிலத்தில் உழைத்து உருவாக்கப்பட்டு, சுமந்து கொண்டு வரப்படும் கீரைக்கு பேரம் பேசுவது அந்நியாயம் தான்.

உயிரற்ற உழவுத் தொழில்

ரூ. பத்தாயிரம் முதல் போட்ட ஐம்பது சதுர அடி கொண்ட பெட்டி கடை நாளொன்றுக்கு ரூ.300க்கு மேல் சம்பாதிக்க முடியும். அதை விட 871 மடங்கு பெரிய ஒரு ஏக்கர் விளை நிலத்தில் ஒரு  ஏக்கருக்கு ரூ.10,000 வரை செலவழித்தும், நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைப்பு என பாடுபட்டு உழைக்கும் விவசாயிக்கு 90 நாட்கள் கழித்து ரூ.6,000 லாபம் கிடைப்பது அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது. ஆக நாளொன்றுக்கு ரூ.66 மட்டுமே லாபம்(?) பார்க்க முடியும். இதனால், மாதம் ரூ.5000 கொடுத்தாலும் நிம்மதி என்ற அளவிற்கு, ஏ.டி.எம் காவலுக்கு போன விவசாயிகள் அதிகம்.

அன்றாடம் செய்திகளில் விலை இல்லாமல் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் கொட்டப்படும் செய்தி வரும் போதெல்லாம் கொட்டப்படுவது விவசாயப் பொருள் மட்டுமல்ல, விவசாயிகளின் ரத்தம் என்றே நினைக்கத் தோன்றும்.

விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.60 வழங்கி மத்திய அரசு சாதனைகளில் சேர்ந்து கொள்ளும் (கொல்லும்).  இதே அரசு ஊழியர்களின் ஒரு நாள் காபி, சமோசா செலவுக்கு கூட ரூ.60 பத்தாது. ஆனால், பயிர் இழப்பீட்டிற்கு ரூ.60 வழங்கி விவசாயிகளின் கஷ்டத்தை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். விவசாயி தற்கொலை செய்த பின்பு நீயா? நானா? என பட்டிமன்றம் நடத்துகின்றனர்.

உழவர்கள் உயிர் வாழ என்ன செய்ய வேண்டும்?

1. 'பசுமை விகடனின்  நம்மாழ்வார்' அவர்களின் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.

2. நீர், மின் தேவை சரியான நேரத்தில் வழங்கிட வேண்டும். இலவசமாக இயற்கை இடு பொருட்கள் வழங்க வேண்டும். பல லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கிறர்கள். அவர்களுடன் இந்திய அரசு நேரடியாக உழவர்களின் விளை பொருளை ஏற்றுமதி சந்தைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

3. கண்மாய் முழுவதும் இயற்கை உரப்பயிர்களை, மாட்டு தீவனங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

4. குறு நில விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடனாக நகைகடன், பயிர்க் கடன் வழங்க வேண்டும்.

5. விவசாயிகள் ஐம்பது பேர் கொண்ட குழுவை உருவாக்கி (மகளிர் குழு போல) ட்ராக்டர், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் போன்ற பண்ணைக் கருவிகளை விவசாயிகளின் நிலங்களை அடமானமாக பெற்று வட்டி இல்லாக் கடனாக வழங்கினால் உற்பத்தி செலவு பெருமளவு குறையும்.

6. பொருளுக்குரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். அனைத்து விளைபொருளுக்கும் இந்த மாதம், இந்த விலை என அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

7. உணவுப்பொருளை பாதுகாக்க மாவட்ட அளவில் குளிர்பதன வசதி கிடங்கு நிறுவ வேண்டும்.

8. மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுடன், விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் இலவச பயிற்சி அளிக்க வேண்டும். நகரின் வணிக பகுதியில் உழவர்களுக்கு அரசே நேரடியாக குத்தகை/வாடகை ஒப்பந்தம் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். பேருந்து, திரை அரங்கில் விவசாய விலை பொருள்கள் விளம்பரம் செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

9. மாநில அரசின் கீழ் உள்ள கோவில் நிலங்களை உண்மையான விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். கோவில் கடைகளில் விவசாய உணவுபொருள்கள் விற்க கடைகள் ஒதுக்க வேண்டும். பேருந்து நிலையத்தின் உட்புறம் உழவர்களின் நேரடி காய்கறி கடைகள் திறக்க அரசு முன் வர வேண்டும்.

மண்ணுக்கு உயிர் கொடுத்த உழவர்கள் உயிரோடு இல்லை என காலம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் உழவு நிலம் வேண்டுமானால் அரசுக்கு சொந்தமாகளாம். உழவரின் உயிரும் அரசுக்கு சொந்தமாக வேண்டுமா? அவர்களுக்கும் குடும்பம் உண்டு, பிழைத்துப்போகட்டும் என மனது வையுங்கள் அரசியல்வாதிகளே!

  எஸ். அசோக்

அடுத்த கட்டுரைக்கு