Published:Updated:

நானும் விகடனும்!

அறிவுமதிபடங்கள் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்கம்!

##~##

ருக்கு நடுவே மிகப் பிரமாண்டமாய் நின்றுகொண்டு இருந்த அந்த அரச மரத்தின் நிழல், சில மாலைகளில் என் வீட்டைத் தாண்டியும் நீளும். அந்த அரச மரத்தின் கீழ் என் அப்பா கட்டிய கழகக் கொட்டாயில் அவர் ஏற்படுத்திய திருவள்ளுவர் படிப்பகத்தில் இருந்து தொடங்கிய படிப்புப் பழக்கம்தான் இன்று வரை நீள்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒற்றைச் சிம்னி விளக்கில் அண்ணனும் நானும் பாடங்கள் படித்துக்கொண்டு இருக்க... ஒருக்களித்துத் தூங்கும் அம்மாவின் பக்கத்தில் படுத்தபடியே... உயர்ந்த பித்தளை சிம்னி விளக்கின் ஒளியில் அப்பா அவரது இயக்கத்தைச் சேர்ந்த வார ஏடுகளைப் படித்துக்கொண்டு இருப்பார்.

நானும் விகடனும்!

அவர் படித்துப் போட்ட இதழ்களை எடுத்துப் புரட்டத் தொடங்கிய விரல்களில் இருந்துதான் எழுத்துகள் என்னுள் இருந்து இறங்கத் தொடங்கின.

அம்மாவின் கழுத்துச் சங்கிலி அடமானத்துக்குப் போன பிறகுதான் நான் விருத்தாசலம் கல்லூரிக்குப் படிக்கப் போனேன். அப்போதுதான் ஆனந்த விகடன் எனக்கு அறிமுகம் ஆனது.

ஓவியம் வரைவதில் ஈடுபாடு உள்ள எனக்கு ஆனந்த விகடனில் வருகிற ஓவியங்களே முன்மாதிரிகளாய் அமைந்தன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத் தமிழ் படிக்கப் போன பிறகுதான் விகடன் எனக்கு மிக நெருக்கமானது. அதில் வருகிற சிறுகதைகள் என்னையும் சிறுகதைகள் எழுத விரல் பிடித்து இழுத்தன.

அன்று முதல் இன்று வரை... விகடன்... தன் பக்கங்களை... படிக்கும் வாசகர்களின் விழிகளுக்குத் தூண்டிலிடுகிற வடிவமைப்பின் ஈர்ப்பில்... மரபையும் நவீனத்தையும் குழைத்துச் செய்கிற முயற்சிகளைத்தாம் முதலில் வியந்து பாராட்டுவேன்.

பாக்யராஜ், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோரிடம் உதவி, இணை இயக்குநராக திரைத் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில் இருந்தே... விகடனில் வருகிற திரை விமர்சனங்களின் மீதான கவனிப்பு... எனக்கான ரசனையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை உருவாக்கியது.

கவிதை, சிறுகதை, ஓவியம், இசை, ஆடல், விளையாட்டு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் முன்னத்தி ஏராக... புதிய புதிய முகங்களை அறிமுகம் செய்துவைப்பதிலும்... அவர்களின் ஆற்றல்களை இளமைத் தமிழில் வெளிப்படுத்துவதிலும்... விகடனை வெல்வது விகடன்தான். கலைத்தன்மை குறையாத எல்லாத் தள வாசகர்களுக்குமான இளமை சூடிய இலக்கிய ஏடாகத் தொடர்ந்து விகடனே முன் நிற்கிறது. வெளியூர் எனில் வியாழன்... சென்னை எனில் வெள்ளி அதிகாலைகளில் என்னை விழிக்கச் செய்வதும் விகடன்தான். சில கருத்துகளில் முரண்பட்டு, நான் கடுமை யாக மடல்கள் எழுதி இருக்கிறேன். அதற்காக என் எழுத்துகளை நிராகரித்தது இல்லை விகடன்.

நீண்ட நெடுங்காலம் வாசகத் தன்மை அளவிலேயே என்னை வசீகரித்திருந்த விகடனில்... 'காதல் படிக்கட்டுகள்’ தொடரில் பங்குபெற்ற வாய்ப்புதான் பளிச்சென வெளிச்சம் பாய்ச்சியது.

சுபமங்களா, புதிய பார்வைக்குப் பிறகு... என் இரண்டு சிறுகதைகளை வெளியிட்டு அழகு பார்த்ததும் விகடன்தான்.

இது வாசகனுக்கு என்று எழுதுகிற பழக்கம் எப்போதும் எனக்குள் இருந்தது இல்லை. நள்ளிரவைத் தாண்டிய தூக்கத்தை விலக்கிக்கொண்டு எனக்குள் ஏதோ ஒன்று நுழைந்து பிறாண்டுகிற நேரம்தான் என் எழுத்து நேரம். எழுதி முடித்துவிட்டுச் சேகரித்துப் பார்க்கையில் கிடைப்பது மகிழ்ச்சி செய்தால்... எழுதிய ஈரம் உலர்வதற்கு முன் என் தம்பி ரா.கண்ணனுக்கே முதலில் படிக்கக் கொடுப்பேன். படிக்கையில் தம்பியின் புன்னகை கூடினால், அதனை... ஆனந்த விகடனில் நீங்களும் பார்ப்பீர்கள்.

'துளியே கடல் என்கிறது
காமம்
கடலும் துளி என்கிறது
நட்பு’

போன்ற நட்புக் காலக் கவிதைகளைத் தம் பக்கங்களில் ஆங்காங்கே தெளித்து, இளைஞர்களுக்கு அப்படித்தான் விகடன் அறிமுகம் செய்துவைத்தது.

நானும் விகடனும்!

குலதெய்வங்கள் - என் தமிழினத்தின் நடுகல் வழிபாட்டு மரபின் மாவீரர்கள். இவர்கள் சூழலியற் சார்ந்த கோயிற் காடுகளைத் தம் துயிலும் இடங்களாய்க்கொண்டு இருப்போர். 'இது எங்க சாமி’ என்கிற தொடரில் இந்தக் கருத்துகள் சார்ந்த என் சிந்தனைகளைப் பதிவுசெய்வதற்கு வாய்ப்பு தந்தது விகடன்.

எங்கெங்கு இருந்தோ தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பாடல்கள் எழுதுகிற ஆவல்களோடு வந்த தம்பி, தங்கைகளுக்கான ஒரு படத்தில் அய்ந்து பாடலாசிரியர்கள் எழுதுகிற சனநாயகத் தன்மையை வெற்றியாக்கிக் காட்டிய வித்யாசாகரோடு என்னையும் என் தம்பிகளையும்... எங்கள் பாடல் வரிகளையும் வெளியிட்டு மகிழ்ச்சி செய்ததும் விகடன் தான்.

'73, அபிபுல்லா சாலை’ என்கிற தாய்க் கூட்டில் இருந்து வெளிச்சச் சிறகுகளோடு பறந்து சென்ற... சுந்தர்.சி, சீமான், செல்வபாரதி, பழநிபாரதி, தபூசங்கர், நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி, ஜெயா, சரவணன், அஜயன் பாலா போன்ற தம்பிகளை மீளவும் ஒன்றுகூடச் செய்து... அதனை நிழற்படங்களாக எடுத்துக் கட்டுரை செய்து நெகிழவைத்ததும் விகடன்தான்.

ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, திரை இசைப் பாடல்கள் எழுதாமல் இருந்த என்னை மறுபடியும் அழைத்து வந்து எழுதவைத்த தம்பி கரு.பழனியப்பனின் கண்ணன் பாடலை அண்ணன் பாடலாக அறிமுகம் செய்து ஆறுதல் தந்ததும் விகடன்தான்.

தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் இதுவரையில் இவரைப்போல் ஒரு தலைவன் கிடைத்திருப்பானா என்று இறும்பூதடையவைக்கும் தமிழீழத் தேசியத் தலைவரின் தாயாரைப்பற்றிய என் கண்ணீர்த் தமிழை வெளியிட்டு, உலகத் தமிழர்களை உருகவைத்ததும் விகடன்தான். அந்தக் கவிதைக்கு தம்பி இளையராஜா என்கிற ஓவியர் வரைந்த உயிரோட்டமான ஓவியம்தான் எம் தாய்க்கு... பல்வேறு இடங்களில் அஞ்சலி செய்வதற்குப் பயன்பட்டது என்பதும் மறக்க முடியாதது.

இன்று வரையிலும் பலராலும் துவட்டிக்கொள்ள விரும்பாத... என் 'மழைப் பேச்சை’ வெளியிட்டு... ஒரு தொடருக்கு... இவ்வளவு வாசகர்களா என்று வியக்கவைத்ததும் விகடன்தான். ஓவியர்கள் மணியம் செல்வனும், இளையராஜாவும் மழைப் பேச்சுக்கான ஈர்ப்பை மேலும் மிகுதிப்படுத்தினார்கள்.

நானும் விகடனும்!

கஃபார் என்கிற அண்ணனால் கை பிடித்து என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஒல்லியான தம்பியை... ஒரு படம் முழுக்க அதன் இயக்குநருக்கே தெரியாமல் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றவைத்து... (வீடு) அவரிடமே ஒப்படைத்து... இன்று தேசிய விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநராக மாறியும்கூட... கடந்த சில நாள்களுக்கு முன் என்னை அழைத்து, கொடைக்கானல் மலையடிவார ஓடைகளில் மீன்கள் கடிக்கக் கடிக்கக் கால்கள் நனைக்கவைத்து... நான்கு நாள்கள் தன்னைவிட்டுப் பிரியவிடாமல் ஆழத்து அன்பால் கட்டிப்போட்டான் தம்பி இயக்குநர் பாலா. 'இவன்தான் பாலா’வில் என்னைப்பற்றி 'என் தாயுமானவன் அறிவுமதி’ என்று எழுதி இருந்த சில வரிகள்... விகடனில் நான் எழுதிய பல வரிகளைவிட என்னைப் பெருமை செய்துவைத்தவை என்பதுதான் உண்மை.

நன்றி மறக்காத தம்பி பாலாவின் ஈரத்தைக் குழைத்து, என் எழுத்துகளுக்குத் தொடர்ந்து மேடை தருகிற விகடனுக்கு நன்றி செய்கிறேன்!