Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

'குலசேகரப்பட்டினம்’ என்ற ஊரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இங்கு, வருடாவருடம் புரட்டாசி மாதம் தசரா திருவிழா நடக்கும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்றபடி தங்கள் கனவில் தோன்றிய, தங்களுக்குப் பிடித்த தெய்வங்களின் வேடத்தை அணிந்தபடி 'சாமி’களாக விரதம் இருந்து 10 நாட்கள் தெருத்தெருவாக... ஊர் ஊராக அலைந்து திரிந்து பிச்சை எடுத்து, 'பிச்சை’ என்று சொல்லக் கூடாது 'தர்மம்’ எடுத்து, அதில் கிடைக்கும் காசை வைத்தோ அரிசியை வைத்தோ இரவில் சமைத்து விரதம் முடிப்பார்கள். தசராவின் கடைசி நாளில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குப் போய் மிச்சம் இருக்கும் காசுகளையும் அரிசியையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு வெறி பிடிக்க நாக்கைத் துருத்தி ஓடி ஆடி உருண்டு எரிந்து கொண்டிருக்கும் சூடத்தை அப்படியே லபக்கென்று வாய்க்குள் விழுங்கி, மாலையைக் கழட்டி அங்கேயே கடற்கரையில் நல்ல துடிக்கிற மீன்களாக வாங்கி, பொறித்து குடும்பத்தோடு தின்று விரதத்தை முடித்துவிட்டு ஊர் திரும்புவார்கள்.

'வீட்டில் எல்லோருக்கும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும்’ என்று அம்மா, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கடைக்குட்டிப் பையனான எனக்கு மாலை போட்டு ஊர் சுற்றி தர்மம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவதாக வேண்டிக்கொண்டது, முதலில் எனக்கு அதிர்ச்சிதான். ஆனால், அந்தப் பத்து நாட்களில் என்னை வீட்டில் உள்ளவர்கள் நடத்திய விதம், கொடுத்த மரியாதை, எப்போதும் என்னை அடித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்தப் பத்து நாட்கள் நான் கடவுளாக இருப்பது எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது.

அம்மா, முதலில் எனக்கு குரங்கு வேஷம் போட்டு தர்மம் எடுக்கத்தான் வேண்டிக் கொண்டாள். ஆனால், குரங்கு வேஷம் போட்டுக்கொண்டு தெருவில் அலைந்தால் அவ்வளவுதான். ஆண்-பெண் என ஒரு கும்பலே இருக்கிறது, என் வாலைப் பிடித்து 'ஏலேய்..! குரங்கு சாமி, குரங்கு சாமி’ என்று கேலி செய்யும். அதனால் நான், 'அம்மா... மாடு மேய்க்கிற ஒருத்தர் தினமும் என் கனவுல வந்து புல்லாங்குழல் வாசிக்கிறார்மா’ என்று ஒரு பொய்யைச் சொன்னேன். 'யப்பா... நீ மாடு மேய்ச்சுக்கிட்டுத் திரியிறதால கிருஷ்ணர்தான் உன்கூட இருக்கார் போல!’ என்று அம்மா கிருஷ்ணர் வேடத்துக்குச் சம்மதித்து, அதற்குத் தேவையான பட்டு அங்கவஸ்திரம், புல்லாங்குழல், சலங்கை, காதில் அணியும் குண்டலம், அட்டை யால் செய்யப்பட்ட கிரீடம், இவற்றையெல்லாம்விட கறுப்பான என் உடம்பு முழுவதும் பூச நீலக் கலர் பொடி... எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தாள்.

மறக்கவே நினைக்கிறேன்

அந்தப் பத்து நாட்களும் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் என் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். அப்படியே உடம்பை முறுக்கி எழுந்தால், அம்மா பக்கத்தில் உட்காந்துகொண்டு, 'பழுந்தரப்பா... சாமி எந்திச்சிட்டு...’ என்று நாக்கைச் சுழட்டி குலவை இடுவாள். நல்ல குளிர்ந்த நீரில் வேப்ப இலைகளைப் போட்டு அம்மாவும் அப்பாவும் சேர்ந்தே என்னைக் குளிப்பாட்டுவார்கள். குளித்து முடித்துவிட்டு அப்படியே உள்ளே வந்தால், ஆப்பிள் பழத்தையோ, ஆரஞ்சு பழத்தையோ நன்றாகக் கழுவி அழகாக நறுக்கித் தருவார்கள். வீட்டுக்குள் இருந்து என்னைப் பார்த்து அண்ணன், அக்கா எல்லோரும் பெருமூச்சு விடுவார்கள்.  

கிருஷ்ணருக்கான அரிதாரங்கள் முடிந்து சலங்கையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது வாசலில் என்னிடம் ஆசீர்வாதம் வாங்க ஒரு கூட்டமே நிற்கும். ஒவ்வொருத்தராக என் காலில் விழுவார்கள், மூர்த்தி, காலில் விழும்போது மெதுவாக காலைச் சுரண்டுவான். அண்ணன் ஊசியை வைத்துக் குத்துவான். எனக்குச் சிரிப்பாக வரும். ஆனால், அதையெல்லாம் அடக்கிக்கொண்டு கம்பீரமாக நின்றுகொண்டிருப்பேன். 'சாமி எல்லாத்துக்கும் அப்படியே திருநீறு பூசி விடுங்க’ என்று எல்லோரும் என் முன் குனிந்து நிற்பார்கள். இடுப்பில் இருக்கும் திருநீறு பையிலிருந்து திருநீறை எடுத்து எல்லோருக்கும் பூசிவிடுவேன். எல்லோரும் குலவையிட, நானும் அம்மாவும் தர்மம் எடுக்க, பக்கத்து ஊரைப் பார்த்து நடந்து போவோம்.

ந்த ஊருக்குப் போனாலும், 'டேய் சாமி வந்துருக்குடா, சாமிடா!’ என்று முதலில் அந்த ஊரில் உள்ள சிறுசுகள் கூட்டம்தான் வந்து எங்களைச் சூழ்ந்து கதை பேசிக்கொண்டே வரும். இவர்கள் போதாதென்று அந்த ஊரில் இருக்கும் நாய்கள் வேறு. சலங்கை சத்தத்தைக் கேட்டதும் வாயைப் பிளந்துகொண்டு வரும். பயந்து உடல் பதறும்போது பின்னாடி இருந்து எதாவது ஒரு வில்லங்கம் பிடிச்ச சிறுசு, 'சாமி பயப்படாதீங்க... அந்தச் சங்கு சக்கரத்தைக் கழட்டி நாயப் பார்த்து விடுங்க. நாயோட கழுத்து துண்டாப் போகட்டும்’ என்று கத்துவான். கோபம் அப்படி வரும் எனக்கு. அம்மாதான் கம்பை எடுத்து நாயை விரட்டிக்கொண்டு வருவாள்.

ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் போய் தர்மம் கேட்கும்போதும், அந்த வீட்டில் உள்ளவர்கள் எதாவது காரணத்தைச் சொல்லி, காலில் விழுந்து திருநீறு கேட்பார்கள். 'சாமி இந்தப் பய, வாய தொறந்தா பொய்யாச் சொல்லுதான் சாமி. கொஞ்சம் திருநீறு போட்டுவிடுங்க சாமி. இன்னையோட பயலுக்கு நல்ல புத்தி வரட்டும்’ என்று சின்னப்பையன்களை அம்மாக்கள் காலில் விழச்செய்யும்போது, என் அம்மா என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாள். அந்தச் சிரிப்புக்கு 'எங்க சாமியே பொய் மட்டும்தான் பேசும்’ என்று அர்த்தம்.

இப்படி ஒவ்வொரு வீடாக அலைந்து திரிந்து வீட்டுக்குத் திரும்ப இரவாகிவிடும். வீட்டுக்கு வந்துதான் விரத சாப்பாடு, அதுவரை வெறும் பழங்களும் பச்சைத்தண்ணீரும்தான் உணவு.

முதல் எட்டு நாட்கள் வெளியூர்களுக்கு தர்மம் எடுக்கச் சென்றால், கடைசி இரண்டு நாட்கள் உள்ளூரில்தான் தர்மம். உள்ளூர் சுற்றி தர்மம் எடுக்கப் போகும்போது, அம்மாவோடு மூர்த்தியும் என் பின்னாடி வருவான். அம்மா முன்னாடி போவாள். அம்மாவுக்கு பின்னாடி நான் நடந்து போவேன். எங்களுக்கு கொஞ்சம் தள்ளி அரிசி சாக்கோடு மூர்த்தி வருவான். அப்படி வந்துகொண்டு இருக்கும்போதே, 'கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்று பாடுவான். நான் என் தாம்பூலத்தட்டில் இருக்கும் காணிக்கைகளில் இருந்து 10 ரூபாயையோ, அல்லது 20 ரூபாயையோ எடுத்து அம்மாவுக்குத் தெரியாமல் கீழே போடுவேன். அதை மூர்த்தி படக்கென்று எடுத்து அவன் சட்டைப் பைக்குள் வைத்தபடி, 'கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்பான். நடந்தது எதுவும் தெரியாமல் திரும்பிப் பார்த்து அம்மா ஒரு சிரிப்பு சிரிப்பாள்.

இது மூர்த்திக்கும் எனக்குமான திருட்டு ஒப்பந்தம். கடைசி நாள் குலசேகரப்பட்டினம் தசராவுக்குச் சென்று மாலையைக் கழட்டி வேடத்தைக் கலைத்த பின், இப்படிச் சேகரித்த பணத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து திருவிழாவில் எங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வோம்!

மறக்கவே நினைக்கிறேன்

டைசி நாள். தசராவின் 10-வது நாள். குலசை முத்தாரம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நாள் அது. குலசேகரப்பட்டினம் ஊர் முழுவதும் மக்கள் வெள்ளம், மேளதாளத்தோடு முண்டியடித்துக்கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் விதவிதமான காளிகள், முருகன்கள், பிள்ளையார்கள், சிவன்கள், கிருஷ்ணர்கள், குரங்குகள், கரடிகள், மாடுகள்... என வேஷம் போட்டவர்கள், நாக்கைத் துருத்தி ஆடியபடியும் கோயிலைச் சுற்றி வந்தபடியும் இருந்தார்கள்.

கோயிலுக்குப் போனால் எனக்கொரு சிக்கல் காத்திருந்தது. வேஷம் போட்டுச் செல்கிறவர்களை கோயிலுக்கு முன் நிற்க வைத்து, மேளம் அடித்து அவர்களுக்கு சாமி அருள் வர வைப்பார்கள். அருள் வந்து அவர்கள் வெறிகொண்டு சாமி ஆடியபடியே கோயிலைச் சுற்றி வந்த பின்னர்தான் மாலையைக் கழட்டுவார்கள். என்னை கோயிலின் வாசலில் நிறுத்திவைத்துக்கொண்டு மேளத்தை அடித்து அருள் வருவதற்காக என் மூக்குக்கு நேராக அப்பாவும் அம்மாவும் சூடத்தைக் கொளுத்திக் காட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், நானோ சிறு அசைவுகூட இல்லாமல் கோயிலில் என்னைப்போல வேஷம் போட்டுப் போகிறவர்களை வேடிக்கைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

'என்ன... நம்ம சாமி இப்படி அசையாம நிக்கு. மேளத்த நல்லா அடிங்கப்பா’ என்றார்கள். மேளம் அடிக்க அடிக்க எனக்கு ஆட வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால், நான் மேளத்துக்கு... அதன் அடிக்கு ஏற்றவாறுதான் ஆடுவேன். எனக்கு சாமி அருள் வந்தால் எப்படி ஆட வேண்டும் என்பதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. நேரம் ஆக ஆக, அம்மா, அப்பா சென்று காளி வேஷம் அணிந்தவர்களைக் கூட்டிவந்து வேப்பிலையால் என் உச்சந்தலையில் அடித்து, கொஞ்சம் வேப்பிலையை உருவி என் வாய்க்குள்ளும் திணித்தார்கள். வேப்பிலையின் கசப்பு தாங்காமல் படக்கென்று துப்பினால், 'அப்படி என்ன உனக்கு அவ்வளவு கோபம்? ஏன் இனிமத்த துப்புற ஆங்!’ என்று அந்தக் காளி வேஷம் போட்டவர்கள் மறுபடியும் உச்சந்தலையில் வேப்பிலையால் அடிக்க, 'இப்படிக் கசக்குது. இதுவாடா உங்களுக்கு இனிமம்?’ என்று அவர்களை முறைத்துக் கொண்டிருந்தேன்.

'எம்மா தாயி, வேறு வழியில்லாம, விளையாட்டுப் பிள்ளைக்கு மாலையப் போட்டு வேஷம் போட்டுட்டேன். எங்களுக்குத் தெரியாம அது எதாவது திருட்டுத்தனம் பண்ணியிருந்தா, நீதாம்மா மன்னிக்கணும். அதவுட்டுட்டு இப்படி நீ இறங்கி வந்து ஆடாம உன் மக்களக் கண் கலங்க விடலாமா?’ என்று அம்மா கண்ணீர் வடித்து என் காலில் விழுந்தபோதுதான் எனக்கு திக்கென்று இருந்தது.

'ஆஹா... நாம அருள் வந்து ஆடாமலே இப்படி நின்னோம்னா, நாம ஏதோ பெரிய சாமிக்குத்தம் பண்ணிருக்கோம்னு நினைச்சுக்குவாங்க போலிருக்கே!’ என்று சுற்றிப் பார்த்தேன், சாமி அருள் வந்தவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று! நாக்கைத் துருத்தி, கண்களைப் பெருசாக உருட்டி கீழே விழுந்து உருண்டு புரண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்படியே கொஞ்ச நேரம் என் இரண்டு கண்களையும் மூடினேன். இப்போது மேளச் சத்தம் மண்டைக்குள் கேட்டது. உடம்பை சும்மா முன்னுக்கும் பின்னுக்கும் நகர்த்தினேன். அம்மா, அக்கா எல்லோரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குலவையிட நாக்கைத் துருத்திக்கொண்டு கண்களை உருட்டி 'ஓய்..!’ என்ற சத்தத்தோடு உருண்டு புரண்டு எழுந்து யாராலும் பிடிக்க முடியாத அளவுக்குத் திமிறினேன்.

மறக்கவே நினைக்கிறேன்

அப்போது அம்மா, 'யம்மா தாயி பச்சப்புள்ளம்மா... இவ்வளவு ஆவேசம் வேண்டாம்மா. கொஞ்சம் மெதுவா நின்னு ஆடும்மா’ என்று அழுதாள். அண்ணனைப் பார்த்து, அக்காவைப் பார்த்து, மூர்த்தியைப் பார்த்து எல்லோரையும் பார்த்து நாக்கைத் துருத்தி கண்களை உருட்டினேன். அப்படியே கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து குலவையிட்டு எனக்கு வேஷத்தைக் கலைத்தார்கள்.

'அப்பாடா... ஒருவழியா வேஷத்தைக் கலைச்சாச்சுப்பா’ என்று மூர்த்தியை யாருக்கும் தெரியாமல் குலசேகரப்பட்டினம் கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு போய், 'எடுடா, அவ்வளவு பணத்தையும்!’ என்றேன்.

அவனோ சாதாரணமாக, 'எந்தப் பணம்?’ என்றான்.

'டேய் என்ன விளையாடுறியா? நான் கொடுத்து வெச்ச காணிக்கைப் பணத்தையெல்லாம் எடுடா!’

'அந்தப் பணமா, அந்தப் பணத்தைதான் நான் கோயில் உண்டியல்ல போட்டுட்டேனே!’

'என்னது... உண்டியல்ல போட்டுட்டியா? உனக்கு என்ன லூஸாடா... எதுக்குடா போட்ட?’

'உனக்கு சாமி அருள் எப்படி வந்துச்சுன்னு  தெரியுமா? அடிக்கடி என்னியப் பாத்தே நாக்கத் துருத்தி கண்ண உருட்டுன. ஐயையோ, சாமிக்கு நாம பண்ற தப்பு எல்லாம் தெரிஞ்சுபோச்சு போலன்னு பயந்துபோய் யாருக்கும் தெரியாம அவ்வளவு பணத்தையும் உண்டியல்ல போட்டுட்டேன்’ என்று அவன் சொல்லி முடிக்க, வந்த கோபத்தில் அந்தக் கடற்கரை மணலில் கொஞ்ச நேரம் அவனைப் புரட்டி எடுத்துவிட்டுத் திரும்பி வந்தால், இங்கே அம்மா அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டிருந்தாள்.

'என்னப்பா அம்மா கோயிலைச் சுத்தி உருள்றா?’

'அதுவா நாம பிரிச்ச, தர்மக்காசு உண்டியல்ல போடுறதுக்குக் கம்மியா இருக்குல்லா, அதுக்கு மன்னிப்புக் கேட்டுத்தான் உங்க அம்மா உருள்றா’ என்று அப்பா சொன்னபோது, எதுவும் யோசிக்காமல் நானும் அம்மாவின் பின்னால் படுத்து உருளத் தொடங்கினேன்!

- இன்னும் மறக்கலாம்...