Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

'Hannah Montanaஎன்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாகத் தெரியவந்த மைலி சைரஸ், குழந்தைப் பாடகியாக அறிமுகமானவர். திரைப்பட நடிகையான பின்பு பாப் பாடகியாக வெற்றிகரமான பல ஆல்பங்களை வெளியிட்டும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தும், ஹாலிவுட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அதிக பணம் சம்பாதித்தவர்.

'குழந்தைப் பாடகி’ என்ற விதத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மைலி, சென்ற மாதத்தில் நடந்த 'எம்’ டி.வி-யின் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச அசைவுகளுடன் ஆடிய குலுக்கு நடனத்தால் அவரது ரசிகர்களுக்குப் பலத்த அதிர்ச்சி அளித்திருக்கிறார். 'உடல் அங்கங்களை மறைக்கும்படியாக உடைகளை அணிந்துகொள்’ என தன்னிடம் பொது இடத்தில் சொன்ன அப்பாவை, பழிவாங்கத்தான் இப்படிச் செய்தார் மைலி; இல்லை, போதைப் பொருள் உட்கொண்டு நிலைதெரியாமல் செய்துவிட்டார்... என்றெல்லாம், இணையம் முழுக்க உலவும் வதந்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தச் செய்தியை எதற்குச் சொல்ல வந்தேனோ, அதற்கு வருகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

மைலி, பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்பாக நேரிலும், பல மில்லியன் மக்கள் பார்க்க தொலைக் காட்சியிலும் போட்ட இந்த குத்தாட்டத்தை 'Twerking’ என்று அழைக்கிறார்கள். பேச்சுவழக்கில் மட்டுமே புழங்கும் இந்த வார்த்தையை, மைலியின் அதிர்ச்சி வைத்தியத்துக்குப் பின், ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அதிகாரபூர்வ ஆங்கில வார்த்தையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

Twerking நடனம் எப்படித்தான் இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் இருந்தால், அருகில் ஆளில்லாத சமயம் கூகுளிட்டுப் பாருங்கள்.

மைலியின் குத்தாட்டம் போன்ற நிகழ்வுகள் பிரபலமாகும்போது, அதை சீரியஸாகவோ, கிண்டலாகவோ காப்பி அடித்துப் பிரபலமாகிக் கொள்ளும் முயற்சிகள் நடப்பது வழக்கம். மைலியின் Twerking பிரபலமானதும், குத்தாட்ட வீடியோக்களுக்குக் குறைவில்லை. அதில் குறிப்பாக ஒரு வீடியோ ரொம்பவே பிரபலமாகிவிட்டது. இளம்பெண் ஒருவர் மைலி ஸ்டைலிலேயே குத்தாட்டம் போடுகிறார். அறையின் கதவில் தலைகீழாக நின்றபடி நடன அசைவுகள் செய்தபடி இருக்கும்போது வேறொருவர் கதவைத் திறக்க, தடாலடியாக கீழே விழும் நடனப் பெண்ணின் உடை அருகில் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியில் பட்டு தீப்பற்றிக்கொள்ள, இருவரும் பதறியடித்து ஓடுகிறார்கள். பதிவேற்றப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஒன்பது மில்லியன் தடவை பார்க்கப்பட்டது. இந்த வீடியோவை, 'இட்டுக்கட்டி தயாரித்தது நாங்கள்தான். வீடியோவில் இருக்கும் இளம்பெண் ஒரு ஸ்டன்ட் நடிகை’ என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் ஜிம்மி கிம்மெல் தனது நிகழ்ச்சியில் சென்ற வாரம் போட்டுடைக்க, இப்போது அந்த நிகழ்ச்சியின் யூ டியூப் வீடியோ 15 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சென்றபடி இருக்கிறது. வீடியோவின் உரலி.... www.youtube.com/watch?v=HSJMoH7tnvw

அறிவிழி

ணையத்தில் பிரபலமாவதற்காக சிலர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பார்த்தால் திகிலாக இருக்கிறது. டிவிட்டரால் சென்ற வருடம் வாங்கப்பட்ட 'Vine’ அலைபேசி வீடியோ மென்பொருள், தொடர்ந்து பிரபலமாகி வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு தயாரிப்பதை, 'வீடியோ’ என்பதைவிட 'துண்டுப்படத் தொகுப்பு’ என்று சொல்லலாம். அதிகபட்சம் ஆறு நொடிகளுக்குள் முடிகிற தொகுப்பைத் தயாரிக்க நீங்கள் Vine அலைபொருளைத் திறந்து, அலைபேசி திரையில் விரலை வைக்கும் சமயத்தில் கேமரா தன் கண்களில் படுவதைப் பதிந்துகொள்ளும். விரல் எடுத்ததும் பதிவாவது நின்றுவிடும். ஆக, பல மணி நேர இடைவெளியில் நடப்பதை ஆறு நொடிகளுக்குள் அடங்கும்படி பல ஃப்ரேம்களில் பதிந்து அவற்றை வீடியோவாகக் கொடுத்துவிடும். இந்த ஆறு நொடிகள் தொகுப்பு தொடர்ந்து சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால், Vine மென்பொருளால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் செம காமெடியாக இருக்கும். உதாரணத்துக்கு, ஜேக்சன் ஹாலண்ட் என்கிற மாணவர் துடைப்பம் சகிதமாக தான் பறப்பது போல் எடுத்த வீடியோ அட்டகாசம். உரலி.... https://vine.co/v/bpj7Km0T3d5

இப்படியான சில வீடியோக்கள் ஆபத்திலும் முடியும். லேட்டஸ்ட் உதாரணம்... ஓபி நோசு. பிரபலமாகும் ஆசையிலும் Vine வீடியோ தயாரிக்க வேண்டும் என்ற அசட்டு ஆர்வத்திலும், ஓடும் காரைத் தாண்டிவிட எடுத்த முயற்சி நடக்காமல், காரில் அடிபட்டு விழும் ஓபி-யின் வீடியோ டெரர். அதன் உரலி  http://youtu.be/JwEs02VKyK4. அடிபட்ட ஓபி-யை ஆம்புலன்ஸில் வைத்து எடுத்துச் செல்லும்போதும் 'Vine' வீடியோவுக்காக இப்படி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கக் கூடாது’ என்று அறிவுரை சொல்லும் வீடியோவையும் பதிவேற்றியிருக்கிறார் ஓபி. உரலி  https://vine.co/v/hnthtuIrVbz

இந்த வாரக் கட்டுரையின் இந்த வரிகளைப் படிக்கும்போது பகலாகவோ, இரவாகவோ இருக்கலாம். உங்கள் மனநிலை உற்சாகமாகவோ, சோர்வாகவோ இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், கம்பீரமாக உணர வேண்டுமா? இந்த வீடியோவைப் பாருங்கள்... போதும். GoPro கேமராவை கழுகு ஒன்றின் முதுகில் வைத்து, அது பறக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ அட அருமை. வீடியோவின் உரலி http://youtu.be/G3QrhdfLCO8

- விழிப்போம்...