Published:Updated:

“நடிப்பில் காமெடி செய்வதுதான் கஷ்டம்!”

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

##~##

 பார்த்தசாரதி தங்கவேல், காளையார்கோயில்.

''தங்கள் பெயருக்கு முன் பட்டம் சூடிக்கொள்ளும் நடிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

'' 'நடிகர் திலகம்’, 'கலைவாணர்’, 'சூப்பர் ஸ்டார்’... இதெல்லாம் வெறும் பட்டங்கள் இல்லை. மக்கள் தந்த அங்கீகாரங்கள். இவங்கள்லாம் தன்னோட முதல் படம் ரிலீஸ் ஆகும்போதே, இந்தப் பட்டங்களைப் போட்டுக்கல. தன் திறமையை நிரூபிச்சு, மக்கள் அதை ஏத்துக்கிட்டு கொண்டாடி கொடுத்த பட்டங்கள். 'நடிகர் திலகம்’ என்ற பட்டத்துக்குப் பெருமை சேர்ப்பது 'சிவாஜி கணேசன்’ என்ற பேர்தான். அந்தப் பட்டத்தால் சிவாஜிக்குப் பெருமை இல்லை.

ஆனா, இப்பெல்லாம் முதல் படம் ரிலீஸ் ஆகும்போதே பட்டப்பேர் போட்டுக்கிறவங்களைப் பார்த்தா, சிரிப்புதான் வருது. வகை வகையா, விதவிதமா நம்ம ஹீரோக்கள் பட்டம் பிடிச்சுட்டாங்க. 'பாரத ரத்னா’, 'பத்ம பூஷண்’ மாதிரியான பட்டங்களைத்தான் இன்னும் விட்டு வெச்சிருக்காங்க!''  

மு.தனகோபாலன், திருவாரூர்.  

 '' 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் சூர்யா... பிரகாஷ்ராஜ்... யார் பெஸ்ட்? ஒரு பார்வையாளராக கருத்துச் சொல்லவும்!''

''சூர்யா நிகழ்ச்சிக்கு நான் பார்வையாளரா இருக்கலாம். ஆனா, என் நிகழ்ச்சிக்கு நானே எப்படி பார்வையாளரா இருக்க முடியும்? 'எதை சரிபண்ணிக்கணும்’னு உங்களை மாதிரி பார்வையாளர்கள் பார்த்துட்டுச் சொல்றதை வெச்சுதான், நாங்க தப்புகளைத் திருத்திக்க முடியுது. இன்னோர் உண்மையைச் சொல்லட்டுமா... சில நிகழ்ச்சிகளைத் தவிர, டி.வி- யில வேற எதையும் என்னால பார்க்க முடியலை!''

 “நடிப்பில் காமெடி செய்வதுதான் கஷ்டம்!”

அ.குணசேகரன், புவனகிரி.

''தங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் சொல்லுங்களேன்?''

''என் கல்லூரி காலத்தில் நடந்த சம்பவம். இதை ஏற்கெனவே 'சொல்லாததும் உண்மை’ல சொல்லி இருக்கேன். ஆனா, இன்னொரு முறை சொன்னாலும் தப்பில்லை.

பாரம்பரியமிக்க பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவன் நான். படிக்கிறதுக்காக கல்லூரிக்குப் போன நாட்களைவிட, நடிக்கிறதுக்காகப் போன நாட்கள்தான் அதிகம். படிச்சி உருப்படலைன்னாலும், நடிச்சி உருப்பட்டுரலாம்னு நம்பிக்கை இருந்த காலம் அது. தன்னம்பிக்கை, தலைக்கனமா மாறுச்சு.

பேராசிரியர் கோவிந்த ராவ் இங்கிலீஷ் நாடகம் எழுதி, எங்களுக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்து, மேடை ஏத்தி அழகு பார்ப்பார். ரிகர்சலுக்கு சரியா வரலைன்னா, உடனே நாடகத்துல இருந்து தூக்கிடுவார். இன்னும் ரெண்டு நாள்ல நடக்கப்போற கல்லூரி ஆண்டு விழா நாடகத்துல நான் முக்கியமான ரோல். நான் நல்லா நடிப்பேன்னு காலேஜ்ல எல்லோருக்கும் தெரியும். அந்த மிதப்புல, 'ஒரு நாள் ரிகர்சலுக்குப் போகலைனா, நாடகத்துல இருந்து தூக்கிடவாபோறாங்க?’னு நான் ஒரு தடவை ரிகர்சலுக்குப் போகலை. திமிர்லதான் நான் வரலைனு பேராசிரியருக்குத் தெரியும். அடுத்த நாள் ரிகர்சலுக்குப் போனா, என் ரோல்ல இன்னொருத்தன் நடிச்சுட்டு இருந்தான். ஆண்டு விழாவுல அவன் சரியா நடிக்கலை. அந்த நாடகம் ஃப்ளாப்னு எல்லோரும் சொன்னாங்க. நானும் அதைத்தான் விரும்பினேன்.

அப்போ என்னைக் கூப்பிட்டாரு கோவிந்த ராவ். 'நீ திறமைசாலிதான். ஆனா, முக்கியமான ஒரு பாடத்தை  கத்துக்கணும். நீ இல்லைங்கிறதுக்காக எதுவும் நின்னுடாது. யார் இல்லேன்னாலும் வாழ்க்கை நடக்கும்’னு சொன்னாரு. அப்ப எனக்கு அது புரியலை. சினிமாவுக்கு வந்து ஜெயிச்ச பிறகு, அதே கல்லூரி விழாவுக்கு நான் சிறப்பு விருந்தினராப் போனேன். அப்போ நான் நடிச்ச அதே நாடகத்துல புது மாணவர்கள் நடிச்சாங்க. திரைக்குப் பின்னால இருந்து, கோவிந்த ராவ் வசனங்களை எடுத்துக் கொடுத்துட்டு இருந்தாரு. என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு. பேராசிரியர் நடத்தின பாடங்களிலேயே மறக்கமுடியாத, என் மனசுல ஆழமாப் பதிஞ்ச பாடம் இதுதான்...

'யார் இல்லேன்னாலும் வாழ்க்கை நடக்கும்!’ ''

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

 ''உங்கள் நடிப்பை விமர்சிக்கும் ரசிகர்கள்... பத்திரிகையாளர்கள்... எவர் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள்?''

''சரியான விமர்சனம் எங்கிருந்து வந்தாலும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும். 'அதெல்லாம் இல்லை. இந்த உலகத்துலயே நான்தான் சூப்பர்’னு சொல்லிட்டு இருக்க முடியாது. ஒரு படத்துல என் பங்களிப்பு சரியா இல்லைன்னா, விமர்சனம் வரத்தான் செய்யும். நீங்க படத்துல பார்க்கிற காட்சி, நல்லா இருக்கிறதுக்கும், நல்லா இல்லாமப் போறதுக்கும் பின்னால ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனா, படம் வெளியான பிறகு, அந்தக் காரணங்களை விளக்கிக்கிட்டு இருக்க முடியாது. எந்த விமர்சனமும் தப்பை அடுத்தமுறை சரிபண்ணிக்கதான் உதவும். சொல்லப்படுற விமர்சனம், சரியா... இல்லையானு மட்டும்தான் மனசுல ஓட்டிப் பார்ப்பேன். சரியா இருந்தா... யார் சொன்னாலும் ஏத்துக்குவேன்!''  

 “நடிப்பில் காமெடி செய்வதுதான் கஷ்டம்!”

ஆர்.அப்துல் சலாம், திருச்சி-21.

''ஹீரோ, வில்லன், காமெடியன்... எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சிரமம்?''

''வெளிப்படையாச் சொல்லணும்னா, காமெடியன் கதாபாத்திரம்தான் ரொம்பச் சிரமம். ஒருத்தரை சுலபமா அழ வெச்சுடலாம். அவங்களோட பிரச்னையைச் சின்னதாத் தூண்டிவிட்டாலும் அழத் தயாராகிடுவாங்க. மெகா சீரியல்கள் சக்கைப் போடு போடுறதுக்கு இந்த சைக்காலஜிதான் காரணம். ஆனா சிரிப்பு, நினைச்ச நேரத்துல வராது. பார்வையாளர்களின் பிரச்னைகளைத் தாண்டி அவங்களைச் சிரிக்க வெக்கணும்.

ஹீரோவா நடிக்க, நடிப்புத் திறனைவிட தோற்றப்பொலிவுதான் முக்கியம். வில்லனா நடிக்க, நடைமுறை வாழ்க்கையில் யாரும் செய்யத் தயங்குற கொடூரமான விஷயங்களைச் செஞ்சா, மக்கள் அவங்களை வில்லனா ஏத்துக்குவாங்க. ஆனா, நகைச்சுவை கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்குத்தான் நிறைய 'ஹோம் ஒர்க்’ பண்ணணும்!''

  எம்.ஜி.சுகுமார், புனே.

''சினிமா மீதும், நடிகர்-நடிகைகள் மீதும் மோகம் குறைந்து வருகிறதே... கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா?''  

''நல்ல விஷயம்தானே! 'ஆட்டுக்கார அலமேலு’ படம், 100 நாள் ஓடுச்சாம். அந்தப் படத்துல 'நடிச்ச’ ஆடு மக்கள் மத்தியில ரொம்பப் பிரபலமாகிடுச்சாம். அந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமா, அந்த ஆட்டை வண்டியில் ஏத்தி ஊர் ஊரா கூட்டிட்டுப் போனாங்களாம். பல ஊர்களில் இருந்து வண்டி கட்டிட்டு வந்து, அந்த ஆட்டை கூட்டம் கூட்டமா பார்த்தாங்களாம் மக்கள். 'ஆடு என்னவோ கம்பீரமாக இருந்தது. மக்கள்தான் மந்தைகளாகிப் போனார்கள்’னு அப்போ ஒரு கவிஞர் எழுதினதா படிச்சேன். சினிமா மேல மட்டுமில்ல, எது மேலவும் மோகம் இருக்கக் கூடாது. அது எப்பவும் ஆபத்துதான். காதல் இருக்கலாம். கண்டிப்பா இருக்கணும். எனக்கு அடையாளமா இருக்கிற சினிமாவாக இருந்தாலும், அதன் மீது மக்கள் மோகமா இருக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லைதான்!''

 “நடிப்பில் காமெடி செய்வதுதான் கஷ்டம்!”

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்-1.

 ''உங்களைப் பற்றிய கிசுகிசுக்களைப் படிக்கும்போது கோபம் வருமா... சிரிப்பு வருமா?''

''கிசுகிசுக்களைப் பொறுத்தது அது. நிறைய கிசுகிசுக்களைப் படிச்சுட்டு சிரிக்கத்தான் செஞ்சிருக்கேன். ஆறு மாசத்துக்கு முன்னால என்னைப் பத்தி வந்த கிசுகிசு அந்த ரகம்தான். டெல்லியில் ஒரு இந்தி படத்தோட ஷூட்டிங். என் மனைவியோட அவங்க குடும்பமும் வந்திருந்தாங்க. எல்லோரும் சேர்ந்து தாஜ்மஹாலுக்குப் போயிருந்தோம். மனைவியோட அண்ணன் குழந்தை என் மேல ப்ரியமா இருப்பான். என்னைப் பார்த்துட்டான்னா, எல்லாரையும் மறந்துட்டு என்கூடவே ஒட்டிக்குவான். தாஜ் மஹால் முன்னால நான் அவனைத் தூக்கி வெச்சுக்கிட்டு போட்டோ எடுத்தேன். மறுநாள் பத்திரிகைகள்ல அந்த போட்டோவைப் போட்டு, 'பிரகாஷ்ராஜ் மகன்’னு நியூஸ் வருது. பல நண்பர்கள் போன் பண்ணி, 'அஞ்சு வயசுக் குழந்தைக்கு அப்பாவாடா நீ’னு வாழ்த்து வேற சொன்னாங்க. இதுக்கெல்லாம் கோபப்பட்டா வாழ முடியுமா? சிரிக்கிறதுதான் பெஸ்ட் ரியாக்ஷன்!''

ஜெகநாதன், புனல்வாசல்.

''ஒரு மனிதனை மாற்றுவது எது - பணமா... பாசமா... பெண்ணா?''

''காட்டுல இருக்கும்போது, 'இது புலி... இது சிங்கம்... இது கரடி’னு சுலபமா கண்டுபிடிச்சிடலாம். நாட்டுக்குள்ளயும் புலி, சிங்கம், கரடி, பாம்பு எல்லாமே இருக்கு. ஆனா, கண்டுபிடிக்கிறது கஷ்டம். எல்லாருமே மனுஷ ரூபத்துல இருப்பாங்க. மனுஷன் எதுக்கு வேணும்னாலும் மாறுவான். மாறிக்கிட்டே இருக்கிறதுதான் அவனோட இயல்பு. பதவி, புகழ், ஆசை, பசினு மனிதன் மாறுவதற்கு நீங்க சொல்லாமவிட்ட இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு!''  

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்

''உங்களுக்கு 'வினோத வில்லன்’னு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கேன். ஏத்துக்குறீங்களா?''

''ஹலோ மிக்கேல்ராஜ்... இப்பத்தான் பார்த்தசாரதிக்கு இந்த பாணியிலான ஒரு கேள்விக்குப் பதில் சொன்னேன். இப்போ நீங்க... சரி நான் ஒண்ணு கேக்குறேன்... நீங்க எனக்குக் கொடுக்குற இந்தப் பட்டத்தால, நாட்டுல மழை பெய்யும்னு சொல்லுங்க ஏத்துக்கிறேன். இல்லை, எனக்கு சம்பளம் ஏத்துவாங்கனு சொல்லுங்க... உடனே ஏத்துக்கிறேன். 'வினோத வில்லன் பிரகாஷ்ராஜ் கலக்கும்’னு அடுத்தப் படத்துல டைட்டில் போட்டுடலாம்!''

ரியாஸ் அகமது, காயல்பட்டிணம்.

 ''சினிமாவில் நீங்கள் வாங்கிய முதல் சம்பளத்தில் என்ன செலவு செய்தீர்கள்?''

''முதல் படத்துக்குப் பேசின சம்பளத்துல ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாங்க. 'பாலசந்தர் படத்துல நான்தான் மெயின் வில்லன்’கிற சந்தோஷம் தாங்கலை எனக்கு.  'நான், பாலசந்தர் படத்துல நடிக்கிறேன்’னு நண்பர்கள் எல்லோருக்கும் போன் பண்ணிச் சொல்லிட்டே இருந்தேன். எஸ்.டி.டி. அழைப்புகளுக்கெல்லாம் செமையா பில் தீட்டின காலம் அது. எனக்கு அப்போ வந்த பில், 840 ரூபாய். அதுதான் என் முதல் சினிமா சம்பளத்தின் முதல் செலவு!''

- அடுத்த வாரம்...

• '' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்கள் தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''

• ''நீங்கள் குஷ்புவுக்கு நெருக்கமான நண்பர்தானே... அதனால் கேட்கிறேன்... இன்னும் சில ஆண்டுகளில் தேர்தலில் அவர் தமிழக முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார்தானே?''

•  ''நீங்கள் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்வதால், செய்த தப்புகள் எல்லாம் சரியானவை என்று ஆகிவிடுமா பிரகாஷ்ராஜ்?''

- பேசலாம் செல்லம்...

 “நடிப்பில் காமெடி செய்வதுதான் கஷ்டம்!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு