Published:Updated:

வைகையும்... மதுரையும்!

வைகையும்... மதுரையும்!

வைகையும்... மதுரையும்!

வைகையும்... மதுரையும்!

வைகையும்... மதுரையும்!

Published:Updated:
வைகையும்... மதுரையும்!
வைகையும்... மதுரையும்!

சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது மதுரை. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் 'கடம்பவனம்' என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் 'மருதை' என்றும், பின் மதுரை என்று திரிந்ததாக கூறுவர். மேலும் கூடல் மாநகர் (அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல் செய்தமையால்), ஆலவாய் (நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்), நான்மாடக் கூடல் (கோட்டையின் நான்கு வாயில்கள் நதிகளை சங்கமிப்பதால்) என பலவகையான பழமையான பெருமைகளை கொண்டது 'நம்ம மருத'

மதுரைக்கு சில சிறப்புகள் உண்டு... அனைத்து மாதங்களிலும் விழா நடக்கும் ஒரே ஊர் மதுரைதான். எந்த நேரமும் மக்கள் விழாவோடு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும். (சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி). அதேபோல நீர் நிலைகளின் பெயராலேயே தங்களது ஊர் பெயரை வைத்து நீருக்கு மரியாதையை செய்தவர்கள். (மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் இதர பிற).

கோவிலை மையமாக வைத்தும், செந்தாமரை போல கோவிலும், இதழ் போல அடுக்கடுக்காய் அமைந்த நகர வீதிகள், தாமரையின் இதழ்கள் போல அமைத்திருக்கும். மங்கையர் மனம் விரும்பும் மல்லிகை மதுரை மண்ணுக்கு பெருமை சேர்க்கும். மலிவு விலையில் 24 மணி நேரமும் சாப்பாடு தரும் ஒரே ஊர். திரும்பிய இடமெல்லாம் விதவிதமான  வடைகள் சுடச் சுட சாப்பிடுவோரின் 'சொர்க்க பூமி' மதுரைதான். எனக்குத் தெரிந்த அளவில் அதிக வடை கடைகள் உள்ள ஊர் மதுரை மட்டுமே. கோவில் நகரம், வடை நகரம் என பெயர் மாறினாலும் ஆச்சரியப்படத் தேவை இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைகையும்... மதுரையும்!

வைகையின் வரலாறு

மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், உணவை அதிகமாக உண்ட பின்  தாகத்தால் சிவனிடம் வேண்டினான். அப்போது சிவபெருமான், 'வை... கை' என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியான 'வருஷ நாட்டு' பகுதியில் உற்பத்தியாகி, 240 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலந்து, பின் வடிகாலாய் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. நேரடியாக கடலில் கலக்காத நதி, வைகை. வைகையால் பயன் பெறும் பல லட்சம் உயிர்கள் சிவபெருமானுக்கு மட்டுமின்றி, குண்டோதரனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

வைகையில் வெள்ளம் வந்தபோது சிவனே, வந்திக் கிழவிக்கு  உதவியதாக திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த கதை மூலம் அறிய முடிகிறது. கங்கை நதி போல ஆண்டின் பல  மாதங்களுக்கு வைகயில் வெள்ளம் ஓடியதாக மதுரை காஞ்சி பாடல்கள் தெரிவிக்கின்றன.

வைகையும்... மதுரையும்!

வைகையும்... மதுரையும்
 
சுவாமி தேர் செல்லும் நான்கு வீதிகளும் ஆக்கிரமிப்பில் சுருங்கி விட்டது. தேர் கடந்து செல்ல பல மணி நேரம் ஆகிறது. தரமற்ற சாலையால் தேர் நகர்வதற்கு அதிக சிரத்தை தேவைப்பட்டது.

சென்ற சில வருடங்களுக்கு முன் வைகை வறண்டு, அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி,  ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் இறங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான நிலையும் உண்டு.

இந்த வருடம் அழகர் மலையானுக்கு வைகை கை கொடுத்து விட்டது. தண்ணீர் செழிப்பில் சந்தோஷ மனதுடன் பக்தர்கள் முன்னிலையில் அழகர் வைகையில்  இறங்கினார்.

வைகை ஆற்றுப்பகுதியில் மதுரை மக்களின் தாகம் தீர்க்க பல நூறு கிணறுகள் அரசால் தோண்டப்பட்டுள்ளன. அவைகள் மூலம் பல கிராமங்களுக்கு தண்ணீர் குழாய் மூலம் எடுக்கப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் கண்மாய்களை மூடி விட்டு வைகையில் கிணறு தோண்டி நீர் வழங்கி அரசு 'மக்களுக்கு சேவை' செய்கிறது. நகரை ஒட்டி இருக்கும் கண்மாய்கள், கிராமத்து கண்மாய்களில் சுத்தமான குடிநீர் பெறும் வகையில் செய்ய முடியாதா?

வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக மருத்துவர்களுக்கு பணம் கொட்ட பயன்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். கரையோரம் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்போரும், நச்சுத் தன்மையுள்ள ரசாயன பொருள்களை  ஆற்றில் கலக்கச் செய்து வைகை என்றுமே கை வக்க முடியாத ஆறாகி விட்டது.

வைகையும்... மதுரையும்!

வைகை நதி புனிதமானது என்று போற்றிய நம் முன்னோர்களின் வழி வந்த நம் மக்கள், வைகையை மலம் கழிக்கும் திறந்த வெளிக்கூடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும்,  இறைச்சிக் கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். நீர் நிலைகளை சிறப்பாக பராமரிப்பவர் சொர்க்கத்திற்கும், அசுத்தம் செய்பவர்கள் பசுவைக் கொன்ற பாவத்திற்கு இணையான பாவத்தை அனுபவிப்பார்கள் என புராதன நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசே நீர் நிலைகளை மூடி வருவதற்கு என்ன பரிகாரம் உள்ளது? வைகையில் வெள்ளம் பார்த்த மதுரை, இன்று மழை பெய்தாலே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்ற நிலையில் உள்ளது.

வைகை நதியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் குடிநீர், விவசாயம் செய்து வந்த பல லட்சம் விவசாயப் பெருமக்கள் இன்று நிலத்தை விற்று விட்டு விவசாயத்தை விட்டு வெளியேறி விட்ட 'பெருமை' தமிழக அரசையே சேரும். மோடி நிலத்தைப் பறிப்பதற்கு முன்னரே நமது அரசியல்வாதிகள் கண்மாய்களை பறித்து வீடுகளாக்கி விவசாயத்தின் கண்களை பறித்து விட்டனர். வைகை மூலம் பயன் பெற்ற பல கண்மாய்கள் அரசு குடியிருப்பாகவும், மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பாகவும் மாற்றி கண்மாய்களை புதைத்து  விட்டனர். மதுரையைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றான். இன்று வில்லாபுரம், அவனியாபுரம் கண்மாய்கள் வீடுகளாக அரசுக்கு வருமானம் பெறும் வகையில் மாற்றப்பட்டன. உயர் நீதி சொல்லும் உயர் நீதிமன்றம் உலகனேரி கண்மாய் மீது அமைக்கப்பட்டுள்ளது. பல கண்மாய்கள் கழிவு நீர் தேக்கமாக உள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகம் வைகை நீர் வந்து நிரம்பும் கண்மாய்கள் மீது கட்டப்பட்டுள்ளன. தரமில்லாத கண்மாய் மண்ணில் கட்டப்படும் கட்டடத்தால் உயிர் பலி வரும் வரை கண்மாய்கள் பலி கொடுப்பது தொடர்கிறது.

'வலை வீசித் தெப்பம்' என அழைக்கப்பட்ட நீர் நிலையின் மேல் பெரியார் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் எப்போது மழை பெய்தாலும் இயற்கை தன் பாதையை மறக்காமல் பெரியார் பேருந்து நிலையத்தில் சென்று மழை நீரை தேக்கும். இது வரை பல கோடிகள் செலவழித்தும் மலை நீரின் போக்கு பேருந்து நிலையத்தில் தான் இருக்கிறது. வலை வீசி தெப்பம் - பெரியார் பேருந்து நிலையம்  என்ற பெயர் மாறினாலும் தெப்பம் மட்டும் மாறவேயில்லை. நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே மழைக்காலத்தில் மதுரைக்குள் வர முடியும். மதுரைக்காரர்கள்  நீச்சல் அடிப்பதிலும் வல்லவர்கள் தான்.

வைகை அணையில் கழிவுகளை நீக்கவும், நீர் பிடிப்பு திறன் கூட்டவும் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை வைகை மேல் யாரும் கை வைக்கவில்லை. வைகை அணையின் மொத்தக் கொள்ளளவான 71 அடியில் பாதிக்கும் மேலாக சேறும் சகதியும்     மிகுந்து முழு நீர் பிடிப்புத் திறன் இழந்து நிற்கிறது. வைகையின் வெள்ளத்தை குறைக்கும் 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் எல்லாம் அரசு அழித்து விட்ட நிலையில் வைகையில் வெள்ளம் வந்தால் நீர் பிடிப்புத் திறனற்ற கண்மாய்களும், ஏரிகளும் மக்கள் மீது கோபத்தை காண்பிக்கும். இருக்கின்ற நீர் நிலைகளும் மேடாகி பயனற்று கணக்கு காட்டுவதற்கு மட்டுமே இருக்கின்றன. நீர் நிலைகளை கோடைக் காலத்திலேயே தூர் வாரி வைத்தால் மட்டுமே வெள்ள அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

மதுரையைச் சுற்றிலும் இருந்த இரு போக சாகுபடி விளை நிலங்கள் கூட வீடுகளாய் நிற்கின்றன. விளை நிலங்கள் தரிசுகளாகவும், விவசாயமே விட்டுப்போன உறவு போல அறுந்து விடுமோ எனச் சொல்லும் அளவிற்கு ரியல் எஸ்டேட் தொழிலும் மதுரையின் கலாச்சார அடையாளத்தை அழித்து வருகிறது.  மல்லிகை சாகுபடி பரப்பு நான்கு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம், ரியல் எஸ்டேட் என  பெருமளவில் குறைந்து விட்டது.

ஆட்சி முடங்கினாலும் மீனாட்சி அருள் பெற்ற வைகை முடங்காது. ஆறு வருடத்திற்கு ஒரு முறை வெள்ளத்தால் மதுரை மிரட்டப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரணம்தான் கேட்போம் என ஆட்சியாளர்கள் நினைத்தால் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள். 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்துயரில் பல ஆயிரம் பேர் இரவோடு இரவாக வீடுகளை இழந்தனர். கண்மாய்கள் உடைந்து ராமநாதபுரம் வரை வெள்ளம் சூழ்ந்த வரலாறு உண்டு. 1993 இல் ஏற்பட்ட கடுமையான  வெள்ளம் 1979 ஐ நினைவுபடுத்தியது. தற்போது ஆக்கிரமிப்பால் வைகை சுருங்கி விட்டது. கரையில் வீடுகளும், வெள்ள வடிகால் வசதி தூர்ந்து போயும் உள்ளது.

1993  போல மீண்டும் வெள்ளம் வந்தால் வைகையின் கோபத்தில் மதுரையின் கதி என்னவாகும்? என்பதை நினைத்தாலே பகீர் என்கிறது!

எஸ். அசோக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism