##~##
வி
ருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்தக் கிராமமான மேட்டுப்பட்டி பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி.

''ராஜபாளையம் பக்கத்துல இருக்குற சேத்தூர்தான் என் ஊர். அப்போ அது கிராமம். ரோட்டுக்கு மேல  சேத்தூர்,  கீழே மேட்டுப்பட்டி. நான் மேட்டுப்பட்டிக் காரன். என் அப்பா பேரு பிள்ளையார். அம்மா, காம்பூலம்பாள். ஆறு ஏக்கர்ல பொழப்பு நடத்திட்டு இருந்த விவசாயக் குடும்பம். தினமும் காட்டுல வியர்வை சிந்தினாதான், சாப்பிட முடியும்.  

என் ஊர்!

எங்க வீட்ல நூறு பசு மாடுங்க, நாலைஞ்சு மாட்டு வண்டிங்க, காளை மாடுங்கன்னு தொழுவமே நிறைஞ்சு இருக்கும். நான் அங்கேயேதான் கதியாக் கிடப்பேன். என்னோட நாலு வயசுலயே அஞ்சு வயசுன்னு பொய் சொல்லி ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. அவ்வளவுசேட்டை செய்வேனாம் நான். அதிகாலை அஞ்சு மணிக்கு நான் தூங்கிட்டு இருக்கும்போதே கை, காலைக் கட்டி சைக்கிள்ல வெச்சு, ஸ்ரீ முருகன் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய்த் தள்ளிடுவாங்களாம்.

அங்கே ஒண்ணாப்புக்கு கர்ணன் சார்தான் வாத்தி யார்.  'இவன் என்ன பெரிய சண்டியரா? அவுத்து விடுங்க’ன்னு அவர் சொல்ல, என் கை, கால் கட்டை அவுத்துவிட்டதும் சிட்டாப் பறக்க ஆரம்பிச்சிட்டேன். அவரும் அசராம வேட்டியை மடிச்சுக் கட்டித் துரத்திப் பிடிச்சுட்டாரு. அப்படியே எனக்கு கொட்டு கட்டிவிட் டாரு. நாலு கிலோ மரக் கட்டையில் ஓட்டை போட்டு நாய் செயின்ல பிணைச்சு கால்ல கட்டிவிடுறதுக்கு பேர் தான் கொட்டு கட்டுறது. ஒலக சேட்டை செய்றவன், திருடன் ரெண்டு பேருக்குதான் கொட்டு கட்டுவாங்க. நான் கொட்டோட ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்ததை ஊரே பார்த்து சிரிச்சது. அப்புறம், நாலே நாள்ல நல்ல பையன் ஆகிட்டேனாம்.  

ஒண்ணாப்புல எனக்கு ராமசுப்ரமணியன் சேக்காளி ஆனான். அப்படியே மூக்கையன், பால் பாண்டி, கோபால கிருஷ்ணன்னு பெரிய்ய்ய குரூப்பே செட் சேர்ந்தது. அப்போ 'மாடு முட்டி’ விளையாடுவோம். நாங்கதான் மாடு. எதுத்தாப்ல நின்னு ஓடி வந்து தலையால் முட்டிக்குவோம். முட்டுனா தலைக்குள்ள 'கிர்ர்’ன்னு இருக்கும். அதுல ஒரு சந்தோஷம்.

என் ஊர்!

அப்புறம் தளவாய்புரத்துல மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். ஏழாம் கிளாஸ் படிக்கும்போதே 'குரங்கு சைக் கிள் ஓட்டிய கதை’ன்னு கதை எழுத ஆரம்பிச் சேன். எங்க கிளாஸ் வாத்தியார் தினகரன் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துவாரு. எல்லார் முன்னாடியும் எந்திருச்சு நின்னு கதை யைப் படிக்கச் சொல்லி, பசங்களைக் கை தட்டச் சொல்லுவார். எட்டாம் கிளாஸ் படிக்கிறவரைக்கும் நான் சினிமாவே பார்த்தது இல்லை. நைட் ஸ்டடீஸ் ஆரம்பிச்சப்போ, கிளாஸ் கட் அடிச்சுட்டு  கிருஷ்ணா தியேட்டருக்குக் கிளம்பிருவேன்.

முதல் படமா 'முதல் மரியாதை’ பார்த்தேன். அப்புறம் தினம் படம் பார்க்க ஆரம்பிச்சேன். கையில காசு இல்லைன்னா, தியேட்டருக்கு வெளியே நின்னு சத்தம் கேட்டுட்டு இருப்பேன்.  நான் சினிமாவுக்குப் போறது தெரிஞ்சதும் ஸ்கூல்ல வெயில்ல உப்பு போட்டு அதுக்கு மேலே முட்டிங்கால் போட வெச்சாங்க. அப்பா பார்த்தாரு. அவருக்கு என் மேலே ரொம்ப நம் பிக்கை உண்டு. என்னை ஒரு வார்த்தைகூட திட்டலை. 'உன் இஷ்டம்’னு விட்டுட்டாரு.

பத்தாவது படிக்கும்போது 'செந்தூரப் பூவே’ படம் பார்த்தோம். அப்போ என் ஃப்ரெண்ட் முருகானந்தம் ஒரு பொண்ணை ஒருதலையா காதலிச்சான். படம் பார்த்துட்டு அழுது குமிச் சான். நானும் இன்னொரு ஃப்ரெண்ட் மகாலிங் கமும் எங்களை நாங்களே உசுப்பேத்திட்டு அவங்களைச் சேர்த்துவைக்கிறதுன்னு முடிவு செஞ்சோம். நான் வீட்டு கொல்லைப் பக்கமா போய் அந்தப் பொண்ணு கையில லெட்டர் கொடுத்திட்டேன். இப்படியே தொடர்ந்து லெட்டர் கொடுத்ததில் அந்தப் பொண்ணு சம்மதிக்கிற நிலைமைக்கு வந்திருச்சு. விஷயம் தெரிஞ்சு அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களும், முருகானந்தம் வீட்டுக்காரங்களும் கூட்டணி சேர்ந்து எங்களைத் துவைச்சு எடுத்தாங்க.

87-ம் வருஷம். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிட்டு 130 ரூபாய் எடுத்துட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். யாரையும் தெரியாது. நடிக்க வாய்ப்புக் கேட்டுப்  போன இடத்துல எல்லாம் நாய் மாதிரி துரத்தி அடிச்சாங்க. சமாளிக்க முடியாம திரும்ப கிராமத்துக்கே திரும்பிட்டேன். நான் ஆசையா வளர்த்துட்டு இருந்த  பைரவன்கிற நாய் ஒரு வாரமா சாப்பிடாம சோகமாவே இருந்திருக்கு. என்னைப் பார்த்ததுமே அழுற மாதிரி 'ஊஊஊ’ன்னு ஊளையிட்டு செத்துப்போயிருச்சு. நான் ஓடிப் போனதைவிடவும் பைரவன் செத்ததுதான் வீட்டுல எல்லாரையும் கோபப்படுத்திருச்சு. ரவுண்டு கட்டி அடி பின்னிட்டாங்க.

'உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைச் செய். அதுக்கு உன்னை தகுதிப் படுத்திக்கோ’ன்னு அப்பா சொன்னார். அடுத்த மூணு மாசத்துல அப்பா இறந்துட்டார். டிகிரி முடிச்சுட்டு, சென்னை வந்து சினிமாவுக்கு ரூட் பிடிச்சிட்டேன். இப்பவும் நான் ஊருக்குப் போனா, 'செலவுக்கு எதுவும் காசு வேணுமாய்யா?’ன்னு அக்க றையா கேட்பாங்க அம்மா. அந்த அன்புக்காகவே அடிக்கடி நான் சேத்தூருக்குப் போய் வர்றேன்!''

- எஸ்.கலீல்ராஜா,படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு