Published:Updated:

என் ஊர்!

''மகிழ்ச்சி என்பது போராட்டம்!''

##~##

''என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூராக இருந்தாலும், 'திண்டிவனம் கல்விமணி’ன்னு சொன்னாத்தான் நிறைய பேருக்குத் தெரியும். எனக்கும் அப்படி அழைக்கப்படுவதில் உடன் பாடும் பெருமையும்கூட! காரணம், 'திண்டிவனத்தில் ஆசிரியராக வர்றவங்க, உடனே இடமாற்றம் வாங்கிட்டுப் போய்டுவாங்க’ன்னு கல்வித் துறையில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், நான் விருப்ப மனு கொடுத்து திண்டிவனத்துக்கு இடமாற்றம் வாங்கிட்டு வந்தேன்.

என் ஊர்!

1986-ம் ஆண்டு வரை திண்டிவனத்தில் பெண்களுக்கு என அரசுப் பள்ளியே கிடையாது. அதனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நன்கொடைகள் வசூலித்து கல்வி வியாபாரத்தை 'சிறப்பா’ நடத்திட்டு வந்தாங்க. அதற்கு எதிர்வினையாக, திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அரசுப் பள்ளி சிறப்புக் குழு ஒன்று துவக்கி, அரசுப் பெண்கள் பள்ளி கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். அப்போ நகர் மன்றத் தலைவரா இருந்த, அ.தி.மு.க-வைச் சேர்ந்த வீராசந்த் எங்கள் முயற்சிகளுக்குத் தடையா இருந்தார். நகர மக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவோடு, பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, அ.தி.மு.க. ஆட்சியிலேயே வீராசந்தை எதிர்த்து வெற்றி பெற்றோம். அந்தப் போராட்டங்களின் விளைவுதான்,  முருங்கப்பாக் கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி!

'அரசியல் கல்விதான் உண்மையான கல்வி’ என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என்னுடைய அரசியல் மார்க்ஸிய அரசியல். அந்த அரசியலை மாணவர்களுக்கும் கற்பித்தேன். புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை உடைய நக்சல்பாரி இயக்க ஆதர வாளர்களான நானும் எங்கள் கல்லூரியில் பணி ஆற்றிய பழமலய்யும் இணைந்து 'முற்போக்கு மாணவர் சங்கம்’ ஒன்றை ஏற்படுத்தினோம்.

என் ஊர்!

அதன் பிறகு அ.மார்க்ஸ், ரவிக்குமார், கோச்சடை போன்றவர்களுடன் இணைந்து 'மக்கள் கல்வி இயக்கம்’ ஏற்படுத்தினேன். அதில் கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினோம். கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் தனியா டியூஷன் எடுக்கிறதைப் பற்றி கல்வி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டியூசன் வாத்தியார்கள் எல்லாம் என்னை நக்சலைட்னு புகார் செய்தார்கள். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இட மாற்றங்கள், போராட்டங் கள், வழக்குகள்னு ஒரு இடத்தில் தங்கவிடலை. 'எப்படியும் உங்களை விட மாட்டாங்க. நீங்களே விருப்ப ஓய்வு எடுத்துட்டு பொதுப் பணிக்கு வாங்க’ன்னு வழக்கறிஞர் சந்துரு சொன்னார். நானும் 93-ம் ஆண்டு விருப்ப மனு கொடுத்து ஓய்வு பெற்றேன். ஆனா, அதன் பிறகும் என்னைவிடலை. நான் வெளியில போனா, போலீஸுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுப்பேன்னு நினைச்சு என்னை சஸ்பெண்ட் செஞ்சாங்க. திரும்பவும் சந்துரு மூலமா வழக்கு போட்டு, 1997-ல் அந்த வழக்கில் வெற்றிபெற்று தான் ஓய்வு பெற முடிந்தது!

என்னுடன் பணியாற்றியவர்கள், போராட் டத்தில் ஈடுபட்டவர்கள்னு சேர்ந்து, 2000-ல் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி ஆரம்பிச்சோம். சீட்டு, அது, இதுன்னு நடத்திக் கிடைச்ச வரு மானத்துல, அந்தப் பள்ளியை நடத்தி மாணவர் களுக்கு இலவசக் கல்வி அளிக்கிறோம். எங்கள் பள்ளியில 2007-ம் ஆண்டு முதல் பொது மக்க ளின் உதவியோடு மதிய உணவு கொடுக்கிறோம். இந்த வருடம் ஆறாம் வகுப்பு தொடங்கி இருக்கிறோம்.

கல்விப் பணியோடு மனித உரிமை செயல் பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். போலீஸால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட வித்யா என்ற பெண்ணின் வழக்கை எடுத்து நடத்தினோம். 1996-ல் சகோதரி லூசினாவும் நானும் சேர்ந்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஒன்றை ஆரம்பித்தோம். பழங்குடியினரின் கல்விக்காக, பழங்குடியினர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி இருக்கிறோம். அதற்கு  சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஒரு லட்சம் கொடுத்தாங்க. நாங்களும் எங்களால் முடிந்த தொகையைச் செலுத்தி பழங்குடியினர் குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்கி றோம். நாலு மாசத்துக்கு முன்னாடி நானும், என்னிடம் படித்த மாணவர்களும், தமிழில் ஈடுபாடுகொண்ட நண்பர்களும் சேர்ந்து ஒரு அறக்கட்டளை அமைத்து, ஆதரவற்ற பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கி றோம். கல்விப் பணிகள், மனித உரிமைப் பணிகள், இருளர் உரிமைகளுக்கான பணிகள்னு என் பெரும் பாலான செயல்பாடுகள் திண்டிவனத்தை மையமாகக் கொண்டுதான் அமையும். மண்ணுன்னா, வெறுமனே எல்லைக் கோடோ, பழக்கவழக்கங்களோ இல்லை.

'மக்களிடம் போ, மக்களிடம் கற்றுக்கொள்’னு சொல்வார் மாவோ. 'மகிழ்ச்சி என்பது போராட்டம்’னு சொல்ற மார்க்ஸியத்தை நேசிப்பவன் நான். இப்போது என் ஊர் திண்டிவனம். என் மக்கள் இருளர்களும் பெண்களும் மாணவர்களும் தலித்துகளும்தான்!''

- அற்புதராஜ், படங்கள்: தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு