Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

அலை ஒசையும்... உளி ஒசையும்..!

##~##

''செருக் களங்கள் பல கண்ட சிங்க ஏறுகள் உலவிய பூமி எங்கள் மல்லை பூமி! வடக்கே ஆப்கானிஸ்தான் வரை சென்று ஆட்சியைப் பிடித்த வீர மாமல்லர்கள் வாழ்ந்ததாலேயே இது மாமல்லபுரம் ஆயிற்று.

நீண்டு நெளிந்து கிடந்த தமிழகக் கடற்கரையில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஏற்ற கடினப் பாறைகள் அமைந்த பூமியாக, மாமல்லபுரம் மட்டுமேஇருந்தது. அதனாலேயே இந்தத் துறைமுகப்பட்டினத்தை சொப்பனபுரியாக மாற்றினார்கள் பல்லவர்கள்.

என் ஊர்!

சுற்றுலா நகரமாக இருப்பதால், வெளிநாட்டினர் வருகை, சினிமா படப்பிடிப்பு, கலைச் சிற்பிகளின் ஒன்றுகூடல்.... என்று எப்போதுமே களை கட்டி நிற்கும் மாமல்லபுரம். தற்காப்புக் கலையின் ஒரு பிரிவான 'களரி’யின் பிறப்பிடம் கேரளா என்றால், குத்துச் சண்டை - மல்யுத்தம் போன்ற வீர விளை யாட்டுக்களின் தாய் வீடு மாமல்லபுரம். மாமல்லர் களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த உடற் திறன் விளையாட்டுகள்தான் இன்றைய கராத்தே, குங்ஃபூவின் பூர்வீகம்!

இங்கு வாழ்க்கையைத் துவக்கியதாலோ என்னவோ, என்னுடைய இளமைப் பருவமும் கராத்தே, குங்ஃபூ போன்றவற்றிலேயே மையம் கொண்டது. மல்லையைத் தாண்டியும் என் நட்பு வட்டாரம் வளர இந்தத் தற்காப்புக் கலைப் பயிற்சியே காரணம். ஆம், குங்ஃபூவில் இரண்டுமுறை நான் தேசிய சாம்பியன்.

என் ஊர்!

நான் சிறுவனாக இருந்தபோது 'இன்றுபோல் என்றும் வாழ்க’ சினிமா படப்பிடிப்பு மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. என் தந்தை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்ததால், படப்பிடிப்புக் குழுவினரோடு எளிதாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு எம்.ஜி.ஆர். ஆட்டோகிராஃப் போட்டு பிஸ்கட் பாக்கெட் ஒன்றையும் கொடுத்து, 'அப்பா மாதிரி கஷ்டப் படாம, படிச்சு பெரிய ஆளாகணும்’ என்று தட் டிக் கொடுத்த சம்பவம் இன்றும் எனக்குப் பெருமை!

108 வைணவத் திருத்தலங்களில் 63-வது திருத் தலமான மாமல்லையில்தான் பன்னிரு ஆழ்வார் களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் அவதரித்தார். வைணவமும் சைவமும் எதிரெதிர் துருவங்களாக நின்று மோதிக்கொண்ட அந்தக் காலத்திலேயே, சிவலிங்கமும் பெருமாளும் ஒரு சேர வீற்றிருக்கும் புகழ்பெற்ற கடற்கரைக் கோயிலை எழுப்பி சமத்துவம் பேசிய ஆன்மிகத் திருத்தலம் எங்கள் மாமல்லபுரம். பல்லவப் படையெடுப்புகளின் வெற்றியைக் குறிக்கும் விதமாக, வடக்கில் இருந்து அபகரித்துக்கொண்டு வரப்பட்ட அடையாளச் சின்னம்தான் விநாயகர் சிலைகள். வெற்றியைப் பறைசாற்றும் நோக்கிலேயே, அப்போது தென் இந்தியா முழுக்க விநாயகர் சிலைகளை அமைத்தனர் பல்லவர்கள். அந்தப் பழக்கம்தான் இன்றளவிலும் கோயில் கட்டும்போது விநாயகருக்கு மட்டும் புதிதாக சிலை வடிக்காமல், வேறு இடத்தில் உள்ள விநாயகர் சிலையைத், திருடிக்கொண்டு வந்து வைக்கும் அளவுக்கு மாறிப்போனது.

சிறுவயதில், மாசி மாதப் பௌர்ணமியில் நடக்கும் தெப்பத் திருவிழாதான் மல்லையின் மிகப் பெரிய விழா. சாதாரணமாகவே சுற்றுலாவாசிகளின் வருகையில் ஆண்டு முழுவதும் திருவிழாக் கொண்டாடும் மாமல்ல புரத்தில், தெப்பத் திருவிழா சமயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஊரே கலர்ஃபுல் சந்தையாக காட்சியளிக்கும் அந்த நாட்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டம். ஆனால், இடையில் 18 வருடங்களாக இந்தத் தெப்பத் திருவிழா நடைபெறாமலேயே இருந்தது. நான் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தபோது இதுபற்றி கலெக்டர் கவனத்துக்குக் கொண்டுசெல்ல, குளத்தைச் சீர்படுத்தி திருவிழா நடத்தினார்கள்.

என் ஊர்!

யுனெஸ்கோ ஐ.நா பொது மன்றத்தின் கலைப் பண் பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களில் முதன்மையானது மாமல்லபுரச் சிற்பங் கள். ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனித் தனிசிற்ப ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவறை மண்டபம், கடற்கரைக் கோயில் என்று பலவகைச் சிற்பங்களை ஒரே இடத்தில் கொண்ட அருங்காட் சியகம் மாமல்லபுரம். அதனால்தான் மரபு சார்ந்த சிற்பக் கலைகளுக்கான முதல் கல்லூரியும் இங்கே நிர்மாணிக்கப்பட்டது. இன்றைக்கும் வெளிநாடுகளில் சிற்பக் கலைக் கூடம், கலைச் சிற்பக் கிராமங்களை உருவாக்கி வரும் பாஸ்கரன், வனமூர்த்தி, வன்மீகநாதன் போன்ற எண்ணற்ற கலைச் சிற்பிகள் மாமல்லபுரத்துக்குப் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குடும்ப விசேஷங்களில், உறவினர் கூட் டத்தைவிடவும் நட்புக் கூட்டம்தான் மிகுதி யாக இருக்கும். சாதி, மதங்களைக் கடந்த கள்ளங்கபடமற்ற அந்த அன்பு இருப்பதால் எல்லோருமே உறவு முறை சொல்லித்தான் பழகுவார்கள். இப் போது அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதுகூட 'ஒண்ணும் கவலைப் படாதே சத்யா.... நமக்கு நல்ல காலம் வரும்!’னு முதல் ஆளாக எனக்கு ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்தியது என் ஊரைச் சேர்ந்த நரிக் குறவர் மக்கள்தான்!

உயிரோட்டமான இந்த அன்பும் ஆதரவும் இருப்பதால்தான், வீரத்தின் விளைநிலமான மாமல்லபுரத்தில் அலை ஓசையும் உளி ஓசையும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது!''

- த.கதிரவன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு