Published:Updated:

அண்ணா சாலை அதிசயம்!

Mount Road
News
Mount Road

அண்ணா சாலை அதிசயம்!

##~##

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தை ஒட்டி உள்ள சப்-வேயில் 'பி.எம். கோபால்ராவ் டெய்லர்’ என்ற தையல் கடை, அந்த வழியாகச் செல்பவர்கள் அனைவருக்கும் ஆச்சர்ய அதிசயம்! 'பாதுகாப்பைக் காரணம் காட்டி நம்ம மேன்சனை என்னிக்குக் காலி பண்ணப் போறாங்களோ?’னு புது தலைமைச் செயலக கட்டுமானப் பணி தொடங்கியதில் இருந்து திருவல்லிக் கேணி ஏரியாவாசிகள் கும்ட்டி அடுப்புத் தகிப்புடன் தூக்கம் இழந்து தவிக்க, தலைமைச் செயலகம் வாசலிலேயே ஒரு தையல் கடை எப்படி சாத்தியமானது?'' என்ற மக்களின் சர்ப்ரைஸ் சந்தேகத்தை 'கோபால்ராவ் டெய்லரிங்’ கின் உரிமையாளர் கர்ணனிடம் கேட்டோம்.

 '

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்ணா சாலை அதிசயம்!

'அரை நூற்றாண்டு தாண்டிய பாரம்பரியம்கொண்டது எங்கள் தையல் கடை. எங்கப்பா கோபால்ராவ், 1950-களில் மவுன்ட் ரோட்டில் பாம்பே ஹல்வா கடைக்குப் பக்கத்தில் இந்தக் கடையைத் தொடங்கினார். அங்கிருந்து 1967-ல் இந்த சப்-வேயில் குடிபுகுந்தோம். 'நாம நம்ம வேலையை மனநிறைவோடு செய்வோம். அதுவே நமக்கு கஸ்டமர்களை அழைத்து வரும்’னு அடிக்கடி சொல்வார் அப்பா. அதைத்தான் இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன்.

50-களில் சட்டை, பேன்ட் துணி எடுத்து தைத்தும் கொடுப்பதற்கு வெறும் 15 ரூபாய்தான் கூலி. சென்னை கல்லூரி மாணவர்கள் பலர் அப்பாவின் ரசிகர்கள். நடிகர் ஜெய்சங்கர் மாணவராக இருக்கும்போது, அந்த 15 ரூபாயையே குறைக்கச் சொல்லி கட்டிங் டேபிள் மீது ஏறி அமர்ந்து கடும் நெருக்கடி கொடுப்பார் என்று... என் அப்பா சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, கே.ஏ.கிருஷ்ணசாமி, நடிகர் நாகேஷ், ரங்கராஜன் குமாரமங்கலம், குழந்தைவேலு, டி.ஜி.பி நெய்ல்வால், க.சுப்பு, ரகுமான்கான், நடிகர் சிவகுமார்னு ஏகப்பட்ட பிரபலங்கள் எங்களின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள். தற்போதைய காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி முன்பு எங்கள் கடைக்கு வரும்போது குழந்தைகளாக இருந்த மகள் சௌமியாவையும், மகன் விஷ்ணுவர்தனையும் அழைத்துவருவார். அதேபோல் அப்பா காலத்தில் இருந்து இன்று வரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் எங்கள் பெருமைக்குரிய வாடிக்கையாளராகத் தொடர்கிறார்கள்.

எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அருகில் இருப்பதால், கட்சி பேதமின்றிப் பல எம்.எல்.ஏ-க்கள் எங்கள் கஸ்டமர்கள்'' என்று கர்ணன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, புதுக்கோட்டை சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், தான் எடுத்துவந்த சட்டை பிட்டுகளை கர்ணனிடம் கொடுத்து, ஏற்கெனவே எடுத்த அளவுகளில் சில கரெக்ஷன்ஸ் சொல்லிவிட்டு நகர்கிறார்.

அண்ணா சாலை அதிசயம்!

''புதுக்கோட்டை எம்.எல்.ஏ. என் புது கஸ்டமர். நம் ஸ்டிச்சிங்கின் அருமை பெருமைகளை வேறொரு எம்.எல்.ஏ. மூலம் தெரிந்துகொண்டு வந்தவர். இது இவருக்கு நான் தைக்கும் இரண்டாவது ஷர்ட். பல     எம்.எல்.ஏ-க்கள் 30, 40 ஷர்ட் பிட்டுகளை மொத்தமாக வாங்கிக் கொடுத்தனுப்புவார்கள். சமீபத்தில் அப்படிக் கொடுத்து அனுப்பியவர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. சிவராஜ்'' என்கிற கர்ணன், துணை முதல்வர் ஸ்டாலினின் திருமண வரவேற்புக்கு கோட்-சூட் தைத்துக்கொடுத்த  நாட்களை நினைவுகூர்கிறார்.

''நானும் அப்பாவும்தான் கலைஞர் வீட்டுக்குப் போய் ஸ்டாலின் சாருக்கு அளவெடுத்தோம். அப்ப குட்டிப் பையனான நான் கோபாலபுரம் வீட்டை வலம் வந்தது  பசுமையாக நினைவில் உள்ளது. முரசொலி செல்வம், அமிர்தம், அழகிரி, தமிழ்னு எல்லாருக்கும் நாங்கதான் துணி தைத்துக் கொடுத்திருக்கோம். அனைவரும் அவ்வளவு பிரியத்தோடும் அன்போடும் பழகுவாங்க'' என்கிறார்.

''ஓ.கே. இப்ப உள்ள அரசியல் தலைவர்களில் டிரஸ்ஸிங் நாலெட்ஜ் யாருக்கு அதிகம்?'' என்று கேட்டால் கர்ணனிடம் இருந்து யோசிக்காமல் வரும் பதில், ''அமைச்சர் துரைமுருகன்''. ''டிரெஸ்ஸிங்கில் அவர் பர்ஃபெக்ஷனிஸ்ட். சமீபத்துல ரெடிமேட் டிரஸ் எடுத்திருக்கார். ஆனால், அது அவருக்கு செட் ஆகலை. 'அந்த கோபால்ராவைக் கூப்பிடுய்யா’ன்னு சொல்லியிருக்காரு. 'கர்ணன்’ என்ற என் பெயர் பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு நான் இன்னும் கோபால்ராவ்தான்'' என்றவரிடம், ''புதிய தலைமைச் செயலகம் அருகில் இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியில் உங்கள் கடை மட்டும் தப்பி இருப்பதற்கு அரசியல் பிரபலங்களுடனான நட்புதானே காரணம்?'' என்றால் உரக்கச் சிரிக்கிறார்.

''இதே கேள்வியைதான் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்னு நான் கட்சி பார்த்து யாரிடமும் பழகுவது இல்லை. அதேபோல் அரைநூற்றாண்டாக நெடுஞ்சாலைத் துறைக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். இரைச்சல்களுக்கு இடையே உள்ள இந்த மிகச் சிறிய இடம்தான் என் இன்னொரு இதயம்'' என்கிறார் கர்ணன். ஸ்டிச்சிங் பண்றவர் டச்சிங் பண்றாரே!

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: என்.விவேக்