Published:Updated:

தேவை ஒரு தமிழொளி இயக்கம்!

தேவை ஒரு தமிழொளி இயக்கம்!
தேவை ஒரு தமிழொளி இயக்கம்!

தேவை ஒரு தமிழொளி இயக்கம்!

தேவை ஒரு தமிழொளி இயக்கம்!

சிறு வயதில் பள்ளி நாட்களில் அரசால் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கம் என்பது மிக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.

எழுத்தறிவின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நாடகங்கள், கூட்டங்கள் போன்றவை ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் கிராமம் தோறும் நடத்தப்பட்டன. பள்ளியில் படித்தபோதும் இது சம்பந்தமான பல பணிகளில் ஆசிரியர்கள் எங்களை ஈடுபடுத்தியதுண்டு.

அந்த சமயத்தில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்பத்தில் எழுதப் படிக்க தெரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் தைரியமும் வழங்குதல், பொது இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் போன்ற பல வழிகளில் எழுத்தறிவின் அவசியத்தை மக்களிடம் அரசு பரப்பிக்கொண்டு இருந்தது.

என் வீட்டுக்கு அருகில் என்னை விட வயதில் மூத்த அண்ணன்கள் இருந்தனர். ஏதேதோ காரணங்களால் சிறு வயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தனர். அப்போது எனக்கு விவரம் தெரியாத வயது என்பதால் அவர்கள் அந்த வயதில் அ, ஆ என்று எழுதிப் பழகுவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்ததுண்டு.

ஆனால் தீவிரமான பிரசாரத்தாலும் உழைப்பாலும் 'படித்து என்ன ஆகப்போகிறது' என்று அலட்சியமாக இருந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஆர்வமாக சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டனர். இந்த அறிவொளி இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்று, கூச்சம் நீங்கி எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டவர்கள் அநேகம் பேர். இதன் மூலம் மாநில அளவில் எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் உயர்ந்தது.

ஆனால் இப்போது அதைவிட மோசமானதொரு நிலைமை தமிழுக்கு வந்திருப்பது பேரவலம். அப்போது விவரம் இல்லாமல், மக்கள் எதையும் படிக்காமல் இருந்தார்கள். இப்போது அறிவில் பல படிகள் முன்னேறியும் கூட தாய்மொழியை ஓரங்கட்டும் வேலைகளை மனசாட்சி இல்லாமல் பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ்தான் உலகத்தில் சிறந்த மொழி என்பதைவிட தாய்மொழியை புறக்கணிக்கும் சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?

தேவை ஒரு தமிழொளி இயக்கம்!

இங்கு பிறந்து முதுகலைப் படிப்பு படித்த ஒருவர், சரளமாக தாய்மொழியில் படிக்கவோ எழுதவோ தயங்கும் கொடுமை வேறெங்கும் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நம் தமிழ்நாட்டில் நடக்கிறது. ஒவ்வொருவரும் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இன்று கல்விமுறை மாறிவிட்டது. அப்படித் தமிழைக் கட்டாயப்பாடமாக சொல்லித் தரும் பல பள்ளிகளில் கூட வேண்டா வெறுப்பாக, ஒரு சடங்காக மட்டுமே தமிழை படிக்கச் சொல்கிறார்கள்.

பெற்றவர்களுக்கும் தாய்மொழி மீது மிகப்பெரிய அலட்சியம் தோன்றிவிட்டது. சிறு வயது முதலே தமிழ் பேசுவது குற்றம் என்ற எண்ணத்தை பிள்ளைகளின் மனதில் புகுத்தி ஆங்கிலத்தில் பேசுமாறு வற்புறுத்தி பழக்குகின்றனர். தன் பிள்ளை தமிழ் பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கினாலும் அவர்கள் எதுவும் சொல்வதில்லை. அதனால்தான் தமிழை தெளிவாக எழுதப் படிக்க தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எந்த பிள்ளைகளுக்கும் இல்லை.

ஆங்கிலம் என்பதும் ஒரு மொழிதான் அறிவு இல்லை என்னும் உண்மையை படித்தவர்களே உணராதபோது என்ன செய்ய முடியும்? இன்று அரசாங்கமே தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளை வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்ற தாயையே முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் உலவும் மனிதர்கள், தாய்மொழியை கற்காமல் இருப்பதையா குற்றமாகக் கருதப் போகிறார்கள்?

முன்பு 'படித்து என்ன ஆகப்போகிறது' என்று கல்வியறிவு இல்லாதவர்கள் கேட்டனர். இப்போது தமிழைப் படித்து என்ன ஆகப்போகிறது என்று பெரிய படிப்பு படித்தவர்களே கேட்கின்றனர். இது முன்பு 'அறிவொளி இயக்கம்' என்று வந்ததைப் போல ஒரு 'தமிழொளி இயக்கம்' திரும்ப வரவேண்டியது அவசியமாகி விட்டது என்பதை உணர்த்துகிறது.

இனி வரும் காலத்தில் எல்லா வீடுகளிலும் தமிழ் மொழியை மட்டும் புறக்கணித்துவிட்டு வேற பல மொழிகளில் புலமை பெற்றவர்கள் அநேகம் பேர் இருப்பார்கள். முன்பு செய்தது போல வீட்டு வீட்டுக்கு சென்று மெத்தப் படித்த மனிதர்களிடம் தாய்மொழியை கற்றுக்கொடுக்க பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை வரும். எந்த வயதினராக இருந்தாலும் அ, ஆ விலிருந்து எழுதிப் பழக வேண்டியதுதான். இதை நினைத்துப் பார்த்தாலே மிக வேதனையாக இருக்கிறது.

ஆனால் அதற்கு இப்போது அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் தயாராக இருக்கிறார்களா? அதைவிட முக்கியமாக தாய்மொழியை மதித்துக் கற்றுக்கொள்ள இந்த சமூகம் தயாராக இருக்கிறதா? யோசிக்கவேண்டிய நேரம் இது.

- ருத்ரன்

அடுத்த கட்டுரைக்கு