Published:Updated:

மெட்ராஸ் வரலாறு: சென்னையின் இந்த உப்பு சரித்திரத்தை தெரியுமா? |சால்ட் கோட்டர்ஸ்| பகுதி 15

Salt
News
Salt ( Vikatan )

19-ம் நூற்றாண்டில் உப்பு, பிரிட்டாஷாரின் வேலிக்குள் கைதியாகக் கிடந்தது. இந்தியாவுக்குக் நெடுக்காக வேலி அமைத்து கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் உப்பை, நாட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

கொஞ்ச காலம் முன்பு வரை உப்பு என்பது மளிகைக் கடைக்கு வெளியே ஒரு கோணி மூட்டையில் கிடக்கும். கடையைச் சாத்திய பின்னும் அது கேட்பார் அற்று வெளியே கிடக்கும்.

19-ம் நூற்றாண்டில் உப்பு, பிரிட்டாஷாரின் வேலிக்குள் கைதியாகக் கிடந்தது. இந்தியாவுக்குக் நெடுக்காக வேலி அமைத்து கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் உப்பை, நாட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

இந்தியாவில் அன்று இருந்த சுமார் 25 கோடி பேருக்கும் தினமும் ஒரு ஸ்பூன் உப்பு என்று கணக்கிட்டாலும், தினமும் பல்லாயிரம் கணக்கான மூட்டை உப்பு மக்களுக்குத்தேவை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழக்கப்பட்ட மக்கள் எவ்வளவு கொடுத்தும் உப்பை வாங்குவார்கள் என முடிவெடுத்தது பிரிட்டீஷ் அரசாங்கம். சிந்து நதியில் இருந்து சென்னை வரை அமைக்கப்பட்டது நீண்டதொரு வேலி. அதைத் தாண்டி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் உப்பைக் கொண்டு செல்ல முடியாது. தனி ஒருவர் உப்புடன் இந்த வேலியை கடக்க வேண்டுமானால் உப்புக்கு வரி செலுத்த வேண்டும். அரசாங்கம் மட்டுமே உப்பைக் காய்ச்சலாம்.

உப்பு சத்தியாகிரகம்
உப்பு சத்தியாகிரகம்
Vikatan

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'1869 அமைக்கப்பட்ட இந்த உப்பு வேலி, இந்தியாவில் இருந்த பல்வேறு முள் மரங்களையும், கம்புகளையும் வைத்து உருவாக்கப்பட்டது. 2,300 மைல் நீளத்துக்கு இருந்த அந்த வேலியை சுமார் 12,000 பேர் காவல் காத்தனர்' என்கிறது ராய் மாக்ஸம் என்பவர் எழுதிய 'தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா' என்ற நூல். '14 அடி உயரமும் 12 அடி அகலமுமான முள் வேலி அது. புதர் செடிகள், கருங்காலி, இலந்தை, சப்பாத்திக்கள்ளி போன்ற உயிருள்ள செடிகளால் அமைக்கப்பட்ட வேலி அது. சில இடங்களில் இரும்பு முள் வேலியும் சுற்றப்பட்டிருந்தது' என அந்த நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் 'உப்பு வேலி' என மொழி பெயர்த்திருக்கிறார் சிறில் அலெக்ஸ். எழுத்து பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. உப்புக்காக இப்படி ஒரு நெருக்கடியா எனத் தோன்றலாம். இங்கிலாந்துக்கு அது மிகப்பெரிய வருமானமாக இருந்தது. காந்தி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதன் பின்னணி இதுதான்.

இந்தியா முழுக்க உப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டன. தென்னிந்தியாவுக்கான மிகப்பெரிய உப்பு கிடங்கு செங்கல்பட்டில் அமைக்கப்பட்டது. புதுச்சேரி, மரக்காணம், கோவளம் பகுதியில் ராட்சஷத்தனமாக உப்பு விளைவிக்கப்பட்டடு (காய்ச்சப்பட்டது), ரயில் மூலம் தென்னிந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. ரயிலில் அனுப்புவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒரு பக்கம் சுவர் வரிச் சாலை, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம், இன்னொரு பக்கம் பக்கிங்காம் கால்வாய் என பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கிடங்கு சால்ட் கோட்ரஸ் என்றே அழைக்கப்பட்டது. உப்பு வேலி அமைக்கப்பட்ட அதே ஆண்டில் இருந்துதான் இந்த சால்ட் கோட்டர்ஸ் செயல்படத் தொடங்கியது என்பதில் இருந்து அந்த வரலாற்று ஆதாரங்களை இணைக்க முடிகிறது.

உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்திக்கு இந்தியா முழுக்க இருந்து மக்கள் ஆதரவு தெரிவித்தனர். பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர். காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக மக்கள் உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றார் காந்தி. அன்றைய பிரிட்டன் அரசாங்கத்தின் வருவாயில் சுமார் 9 சதவிகிதம் உப்பினால் கிடைத்தது. குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு 23 நாட்கள் நடந்தார். பல ஆயிரம் பேர் அவருடன் சேர்ந்து உப்பு வரியை நீக்கக் கோரி குரல்கொடுத்தனர். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக முதன் முதலில் நடந்த பிரம்மாண்ட அறைகூவல் அது.

உப்பு
உப்பு
விகடன்

இந்திய சுதந்திரத்துக்காக பொதுமக்கள் பல ஆயிரம்பேர் திரண்டது இந்தப் போராட்டத்துக்காகத்தான். வேதாரண்யத்தில் இருந்து ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். 1930 ல் ஒரு கைப்பிடி உப்பை எடுப்பதற்காக நடந்த இந்தப் போராட்டத்துக்காக, 80,000 பேர் நாடு முழுக்க கைதானார்கள். பிரிட்டன் அரசாங்கம் காந்தியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. புகழ் பெற்ற காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

'நம் உப்பு... நம் உரிமை' என்று ஆனது. அதன் வெளிப்பாடுதான் மளிகைக்கடை வாசலில் உப்பைப் போட்டு வைத்தது. அது எல்லோருக்குமானது என்பதன் வெளிப்பாடு அது. சால்ட் கோட்டர்ஸில் இப்போதும் உள்ளே பல பழங்கால எடை மிஷின்களும், மேல் மாடியில் அந்தக் கால சூப்பிரெண்டென்டுக்கான பிரம்மாண்டமான அறையும் உண்டு. சுமார் 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கிடங்கு அது. உப்பு மட்டுமே பிரதானமாக அடைக்கப்பட்ட அந்தக் கிடங்கில், இன்று ரயில்வே மூலம் இறக்கப்படுகிற, ஏற்றப்படுகிற எல்லா பொருட்களையும் கொண்டுவந்து அடுக்கி வைக்கிற கிடங்காக இது செயல்படுகிறது.

Salt Coataurs
Salt Coataurs
விகடன்

பலரும் சொல்வது போல அது சால்ட் குவாட்டர்ஸ் அல்ல. அதில் குவாட்டர்ஸ் போல பல அறைகள் இருக்கின்றன என்பதால் அப்படி நினைத்திருக்கலாம். தெலுங்கு மொழியில் கோட்டறு என்றால் கிடங்கு என்று அர்த்தம். மக்கள் வழக்கே அந்தக் கிடங்கின் பெயராக மாறியது. சால்ட் கோட்டர்ஸ் என்பதே அதன் பெயர். உப்புக் கிடங்கு என்பதே தமிழ் அர்த்தம். இது போல சென்னையில் எட்டு உப்புக் கிடங்குகள் தமிழ் நாட்டில் இருந்தன. இன்றும் அதே பெயரில் சரித்திர சாட்சியாக சால்ட் கோட்டர்ஸ் இருக்கிறது.

தொடரும்...