Published:Updated:

அம்மாவின் தொண்டன்!

அம்மாவின் தொண்டன்!
அம்மாவின் தொண்டன்!

அம்மாவின் தொண்டன்!

அம்மாவின் தொண்டன்!

‘அம்மாவின் தொண்டன்’ என்ற பெயரில் ஒரு படம் வருகிறது. இதை சென்ஸாருக்கும் அனுப்ப மாட்டார்களாம், தியேட்டருக்கும் வராதாம்! ஏனெனில், இது ‘அம்மா’வின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மட்டுமே சொல்லவிருக்கும் பிரசாரப்படம். ‘அம்மாவின் தொண்டன்’ படத்தினை இயக்கும் கே.எஸ்.நேசமானவனிடம் பேசினேன்.

‘‘இதுக்கு முன்னாடி ‘வாழ்வெல்லாம் வசந்தம்’, ‘நான் தமிழன்டா’, 'நேசிக்கிறேன்’, ‘காயலாங்கடை குமரேசன்’னு நாலு படம் இயக்கியிருக்கேன். சேலம் எனக்கு சொந்த ஊர். பொழைப்புக்காக சென்னைக்கு வந்து எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல கேட்டரிங் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். நிறைய எம்.எல்.ஏ.க்கள் எனக்குப் பழக்கம். சேடப்பட்டி முத்தையா சபாநாயகரா இருந்த காலத்துல கேட்டரிங் சர்வீஸுக்காக அசெம்பிளிக்கு அசால்ட்டா போய் வந்த ஆள் நான். அப்போ ஜெயலலிதா அம்மாவுக்கும் என்னுடைய கேட்டரிங் சர்வீஸ்தான்!’’ ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்தார் கே.எஸ்.நேசமானவன்.

‘‘கிட்டத்தட்ட 20 வருடங்களா சினிமாவுல இருக்கேன்.  பாடலாசிரியரா அறிமுகமானேன். அப்புறம்தான் இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரங்கள். ‘அம்மா’வுக்காக இதுக்கு முன்னாடி ‘சாதனைத் தலைவி’, ‘வெற்றித் தலைவி’னு இரண்டு ஆல்பம் உருவாக்கினேன். இதுல ரெண்டாவது ஆல்பம் விரைவில் ரிலீஸாகப் போகுது. இதையெல்லாம் கேட்டுட்டு, இவர் அ.தி.மு.க. தொண்டரோனு நினைச்சுடாதீங்க. முன்னாள் முதல்வர் கலைஞர், நடிகரா இருந்து தைரியமா அரசியல்ல குதிச்ச விஜயகாந்த், பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், ஜி.கே.வாசன்னு எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஆல்பம் ரெடி பண்ணிக் கொடுத்திருக்கேன். சமீபத்துல சரத்குமாருக்கும் ஒரு ஆல்பம் ரெடி பண்ணிட்டு சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் நாகப்பன்கிட்ட கொண்டுபோய் கொடுத்தேன். அவர், ‘சரத்குமாரை ‘நாளைய முதல்வரே’னு புகழ்கிற வரிகள் வருது. அதைக் கொஞ்சம் மாத்திக் கொடுங்க’னு சொல்லியிருக்கார். மத்தபடி, ‘அம்மா’வின் திட்டங்கள் தனிப்பட்ட முறையில எனக்குப் பிடிச்சிருக்கு. இந்த நான்கு வருடங்கள்ல அம்மாவின் ஆட்சியில் மக்களுக்கு நிறைய நல்லது நடந்திருக்கு. அப்படி இருக்கும்போது ஒரு படைப்பாளியா அதை மக்கள்கிட்ட கொண்டு போகணும்ல? அதான் ‘அம்மாவின் தொண்டன்’னு ஆரம்பிச்சுட்டேன்!’’ என்றவர், தொடர்ந்தார்.

அம்மாவின் தொண்டன்!

‘‘ஊழல் வழக்கு கடந்த ஆட்சியில நடந்தது. அதனால இப்போதைக்கு அது வேற விஷயம். அது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கட்டும். அதையும் இதையும் தொடர்பு படுத்திப் பார்க்க நான் விரும்பலை. இன்னைக்கு ‘அம்மா உணவகம்’ திட்டத்தால பல பேர் பலன் அடையிறாங்க. இலவசத் திட்டங்கள் தேவையில்லைதான். ஆனாலும், படிக்கிற பசங்களுக்குப் பயன்படுது. இப்படி பல நல்லது நடந்திருக்கே தவிர, இந்த ஊழல் வழக்கு அம்மாவுக்கு ஓர் அவப்பெயரைக் கொடுத்திருக்கு. அதனால, மிச்சம் இருக்கிற ஒரு வருடத்துல மக்களுக்கு இன்னும் பல நலத்திட்டங்களைக் கொடுக்கணும்னுதான் நினைப்பாங்க. ஏன்னா, மக்களும் விடுதலை ஆனபிறகு கொடுத்த வரவேற்பைப் பார்த்து ‘இவங்களைவிட பெரிய சொத்து எனக்குத் தேவையா’னு உணர்ந்திருப்பாங்க. அதனால, அம்மாவின் சாதனைகளை 234 தொகுதிகளுக்கும் கொண்டு போகணும். ஒவ்வொரு திட்டத்தை விளக்கவும் பிரபலமான பல நடிகர்கள் இதில் நடிக்கப் போறாங்க’’ என்று மெயின் மேட்டருக்குள் வந்தார்.

‘‘நான்கு வருட சாதனைகளை அ.தி.மு.க. ஒரு புக்கா வெளியிட்டிருக்காங்கல்ல? அதை அப்படியே கோர்வையா படமாக்கிடுவேன். ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அந்தத் திட்டத்தைப் பற்றி மக்கள்கிட்ட ரெண்டு வார்த்தை கேட்பேன். தெரியலைனா... அதைப் பாட்டாவே பாடி புரியவைப்போம். ஏன்னா, ‘அம்மாவின் தொண்டன்’ல ‘வெற்றிவாகை சூடிவந்த எங்கள் தாயே’, ‘புரட்சித்தலைவி ஆட்சி புனிதமான ஆட்சி’, ‘வந்தாச்சு வந்தாச்சு அம்மா உணவகம்’னு 20 பாட்டுகள் இருக்கு. இதுக்காக அ.தி.மு.க.காரங்ககிட்ட எந்தப் பணமும் கேட்க மாட்டேன். ஆனால், ஆதரவு கேட்பேன். திரையிட உதவி பண்ணச் சொல்வேன். ஷூட்டிங்ல மற்ற கட்சிகளால எந்தத் தொந்தரவும் வராம, பார்த்துக்கச் சொல்வேன். ஏன்னா, நான் ஒரு படைப்பாளி. அடுத்த தேர்தல்ல எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிச்சாலும் சரி. அவங்களோட திட்டங்கள் எனக்குப் பிடிச்சா, அதையும் படமா எடுப்பேன். நமக்குத் தேவை நல்லதொரு அரசியல்வாதி. அவ்வளவுதான்!’’ என்று பேட்டியை முடித்த நேசமானவன், எத்தனை முறை ‘அம்மா’ என்றார் என்பதை எண்ண முடியவில்லை!

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு