Published:Updated:

தலைக்கவசம் கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

தலைக்கவசம்  கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?
தலைக்கவசம் கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

தலைக்கவசம் கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

தலைக்கவசம்  கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

ரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை எப்படியாவது ஹெல்மெட் விற்பனையை உயர்த்த பொது நலன் வழக்கு, நீதிமன்ற அதிரடி உத்தரவு என  மக்களின் கவனம் ஹெல்மெட் மீது திசை திருப்பப்படுவதாகவே மக்களின் கருத்தாக உள்ளது.

ஹெல்மெட் மீது கடுமை காட்டும் நீதிமன்றம், ஆண்டுக்கு பல கோடிகளை முழுங்கி தார்ச் சாலையில் தாரைக் காணவில்லை என்று சொல்லும் அளவிற்கு லஞ்ச ஊழலில்  போடப்பட்ட சாலைகள் மீது, மழை நீரால் மிதக்கும் சாலைகள் மீது  கடுமை காட்ட வேண்டியது அவசியம். எப்போதாவது மழை நீர் வந்து செல்லும் சாலையில் தற்போது அரை மணி நேரம் மழை பெய்தாலே  வெள்ளம்தான்  என்று சொல்லும் அளவிற்கு வெள்ளநீருக்கு 'வெல்கம்' சொல்லும் சாலையில் மிதக்கும் வாகன ஓட்டிகளை ஏன் நீதிமன்றம் மறந்து விட்டது?

உண்மையில் மக்களின் உயிர் மீது அக்கறை கொண்டுள்ள நீதிமன்றம், பொதுப்பணித்துறையின் 45% கமிசன் தொகை மீது இது வரை எந்த ஒரு வழக்கோ, தானாகவே வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவோ முனைப்பு காட்டாதது ஏன்? ஊரே சிரிக்க லஞ்சக் கமிசன் தொகை பற்றிய விளம்பரப்பலைகை வைத்தும், உயர்  நீதிமன்றம் விசாரணை செய்ய தனி குழுவையோ அல்லது லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கோ உத்தரவு பிறப்பித்திருந்தால் மக்கள் பணத்திற்கும் பாதுகாப்பு கவசம் கிடைத்திருக்கும்.

தலைக்கவசம் மீது தணியாத பாசம் கொண்ட போலீசுக்கு, இனி பண மழை ஆரம்பம். போலீசுக்கு யோக காலம் ஹெல்மெட் வடிவில் வருகிறது. இனி போக்கு 'வரவு' வரத்து போலீசார் விடுமுறை ஏதும் எடுக்காமல் கவனமுடன் 'கடமையுடன்' இரவு பகல் உழைப்பார்கள். ஹெல்மெட் இல்லாதவர்களை பிடிக்கிறோம் என தீவிரவாதி ஹெல்மெட் போட்டு வலம் வந்தாலும் போலீஸ் கண்டு கொள்ளாது. ஒருவர் ஹெல்மெட் போடாமல் போனார் என அபராதம் 'வசூல்' வேட்டை ஆரம்பமாகும். ஆறு போலீசார் சேர்ந்து ஹெல்மெட் வசூல் செய்ய களம் இறங்குவதும், கொடுப்பது போலியான ரசீதா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மட்டமான தாளில் ரசீது என சொல்லி ஒன்றை அளிப்பது தொடரும்.

நவீன காலத்தில் இன்னமும் கையால் எழுதி ரசீது கொடுப்பது தவறு நடக்க அரசே வழி செய்கிறது எனத் தோன்றுகிறது. இரண்டு இட்லிக்கு கூட நவீன மின்னணு ரசீது ஒரு நொடியில் கொடுக்கும் காலத்தில் இவர்கள் இன்னமும் கையால் எழுதி, பேரம் பேசி தள்ளுபடி செய்து, போலீஸ் வண்டிக்கு பின்னால் சென்று இருட்டில் நின்று  அபராதம் 'வசூல்' செய்யும் நிலை ஏற்படும்.

தலைக்கவசம்  கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

உலகிலேயே எந்த அரசு ஒப்பந்ததாரரும் சொல்லாத உண்மையை  'கமிசன் தொகை' பற்றி சொன்ன அரசு ஒப்பந்ததாரர்களை நீதிமன்ற விசாரணைக்குழு விசாரித்தால் சாலையின் தரம் பற்றிய உண்மை  உலகுக்கு தெரியவரும். மேடு பள்ளமான சாலையை வைத்துக்கொண்டு வாகன வரி, சாலை வரி கட்டும் பொதுமக்கள்  வாகனம் ஓட்ட ஹெல்மெட் போல, நடப்பதற்கும் புல்லட் ப்ரூப் கூட போட்டுச் செல்லும் நிலையில் தான் இருக்கிறார்கள். மழை வந்தால் நீச்சல் அடித்து செல்வோர் மட்டுமே தமிழகத்தில் வாழும் நிலை உள்ளது. பராமரிப்பற்ற பள்ளமான சாலையால் நடந்து போனவர்கள் கூட, பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து போனவர்கள் அதிகம்.

அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கும் நாடானா இந்தியாவில் அதிலும், விபத்தில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் ஹெல்மெட் ஒரு உயிர் காக்கும் தீர்வு என்று சொல்வதை யாராலும் ஏற்க முடியாது. 100 கி.மீ. வேகத்தில் வரும் தண்ணீர் லாரி மோதினால் ஹெல்மெட் போட்டாலும் சாவு உறுதிதான். நான்கு பேர் செல்ல வேண்டிய ஷேர் ஆட்டோ எட்டு பேருடன், எட்டு எட்டாக நடு ரோட்டில் ஒட்டிக் காண்பித்து விபத்தை ஏற்படுத்தி, பின்னால் வரும் வாகனம் மோதி ஹெல்மெட் போட்டும் செத்துப் போனவர்கள் அதிகம். தரமற்ற சாலை வசதியை சரி செய்ய ஆணையிடாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஹெல்மெட் மீது குறியாக இருப்பது அஸ்திவாரம் சரியில்லாத வீட்டில் அறுபது யானையை கட்டி வைத்த கதை தான் நம் கதை.

ஊழலில் ஊறிப்போன சாலைகள், முறையற்ற வாகன உற்பத்தி, பயன்பாடு, தரமற்ற சாலை வசதி, போக்குவரத்து சிக்கல், ஆக்கிரமிப்பான சாலைகள், வானுயர பிளக்ஸ் போர்டுகள், குடி போதை  இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இவைகளை எல்லாம் நீதிமன்றம் அவசரமான உத்தரவு பிறப்பித்து அதிரடி நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஹெல்மெட் போடுவதே கட்டாயம் எனச் சொல்லுவது, இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் தருகிறது என்பதை விட, மற்ற பிரச்னைகளை உயர்நீதிமன்றம் மறந்து விட்டதோ எனச் சொல்லும் நிலையில் மக்கள் இருக்கிறர்கள். பருவ மழை ஆரம்பிக்கும் முன்னரே பாழாய்ப் போன சாலைகளை பார்த்து விட்டு நீதிமன்றம் ஹெல்மெட் உத்தரவு போட்டிருக்கலாம். மோசமான சாலைக்கு பயந்து தான் ஹெல்மெட் போடச் சொன்னாலும் ஹெல்மெட்டை விட அவசியமானது சாலை. தலைகவசம் அணிந்தாலும், எதிரே வந்து நெஞ்சில் ஏறும் அதிவேக குடிபோதை வாகன ஓட்டியை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

தலைக்கவசம்  கட்டாயம்: தரமான சாலை கட்டாயமில்லையா?

மக்கள் நீதிமன்றத்திடம் எதிர்பார்ப்பது,

1. ஐம்பது ரூபாய் பொருளுக்கே ஆயுள் உத்தரவாதம், தர நிர்ணய சான்று என  இருக்கும்போது ஐம்பது லட்சம் கோடிகளில் போடப்படும் சாலைக்கு என்ன உத்தரவாதம்? ஹெல்மெட் போட்டும் கடும் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்தும் சாவிற்கு நிகரான  கை, கால், வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம்.

2. ஹெல்மெட் அபராதம், போலீஸ் மூலம் இல்லாமல் ஆன்லைன்   மூலமாக அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை அலுவலகத்தில் நேரடியாக மக்கள் செலுத்தும் வகையில் தீர்வு காண வேண்டும். இதன் மூலம் லஞ்சம் ஒழியும்.

3. அதிவேக இரு சக்கர வாகனத்திற்கு தடையும், 50 கி.மீ.க்கு மேல் வாகனம் ஓட்ட முடியாதபடியும் வாகனம் வடிவமைக்கப்பட வேண்டும்.

4. ஷேர் ஆட்டோ  ஓட்ட காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நகருக்குள் இயங்க அனுமதி தர வேண்டும்.

5. வாகன நெரிசலை, விபத்தை கட்டுப்படுத்த மும்பை நகரில் உள்ளது போல 'பஸ் பே' என்ற அமைப்பை உருவாக்க தமிழகத்தின் அணைத்து முக்கிய நகரங்களிலும் இடங்களை கையகப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

6. பல கோடிகள் பாலம் கட்டுவதற்கு பதிலாக வாகன உற்பத்தி, பயன்பாட்டை முறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

அடிப்படையான பிரச்னைகளை விட்டு விட்டு எதெற்கெடுத்தாலும் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் சொல்லுவது விபத்துக்களின் எண்ணிக்கையை உயர்த்துமே தவிர விபத்துக்களை ஓய்வெடுக்க விடாது எனபதே உண்மை. நீதிமன்றம் தலைக்கவசத்தை விட தலைக்கு மேல் உள்ள மற்ற பிரச்னைகளை தீர்த்தால் நீதிமன்றமே மக்களின் உயிருக்கும், உணர்வுக்கும், உடைமைக்கும்  கவசம் எனபது உறுதியாகும்.

-எஸ்.அசோக்

அடுத்த கட்டுரைக்கு