Published:Updated:

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?
கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

ள்ளி சேர்க்கை தொடங்கும் ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளின்  வேட்டை ஆரம்பமாகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும், மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் அவ்வாறு தயார்படுத்தும் பள்ளிகளுக்கு படையெடுக்கிறார்கள்.

'எங்கள் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேல் எடுத்த மாணவர்கள்.. நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள்... !' என்று பட்டியலிட்டு, விளம்பரப்படுத்தி கனவுகளை விதைக்கின்றன இம்மாதிரியான தனியார் பள்ளிகள்.

இவ்வாறான பள்ளிகளில் பத்தாம் வகுப்பிலும், பனிரெண்டாம் வகுப் பிலும் கற்றல் திறன் குறைவாக உள்ள பிள்ளைகளுக்கு இடம் கொடுப் பதேயில்லை. ஆடி மாத தள்ளுபடி சேலை போல்தான் இங்கும் சலுகை கள். பத்தாம் வகுப்பில் 480 க்கு மேல், 490க்கு மேல் என மதிப்பெண் வாங்கிய மாணாக்கர்களுக்கு சேர்க்கை தொகையில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் குறைத்துக்கொள்கின்றனர்.

ஏற்கனவே கற்றல் திறன் அதிகமுள்ளவர்களையே சேர்த்து, அவர்களுக்கு வருடம் முழுதும் மனனம் செய்ய கொடுத்து, 'படி.. படி.. !' என்று எந்திரத்தனமாய் எப்போதும் வகுப்பு தேர்வு வைத்து, அவர்களை சக்கையாய் பிழிந்தெடுத்து கிடைக்கும் வெற்றியைத்தான் இவர்கள் சாதனையாய் கூறிக்கொள்கிறார்கள்.

நிறைய பள்ளிகளில் பதினொராம் வகுப்பு பாடங்களை புறக்கணித்து, பனிரெண்டாம் வகுப்பு பாடங்களையே நடத்துகிறார்கள்.. இரண்டு வருடமும் திரும்ப திரும்ப அதே பாடங்கள், வகுப்பு தேர்வுகள் என்று மாணாக்கர்களை சுயமாய் சிந்திக்க விடுவதேயில்லை. என்னமோ போருக்கு தயார் செய்வது போல்தான் மாணாக்கர்களை அச்சமுடன் உருவாக்குகிறார்கள். இவ்வாறான பிள்ளைகள் எழுதி எழுதி கணிதத்தைக் கூட புரிந்து செய்யாமல், மனப்பாடமாய் பதில் அளித்து விடுகிறார்கள்.

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை கேட்டால் சொல்வார்கள், சில மாணாக்கர்கள் கணிதத்தில் பத்து மதிப்பெண்ணுக்குரிய கேள்விக்கு வரிசையாக எழுதி, நடுவில் இரண்டு ஸ்டெப்பை விட்டு கடைசியில் விடையை சரியாக எழுதி வைத்திருப்பார்கள், அந்த விடை எப்படி வந்ததென்றே தெரியாமல்.

விடுதியுடன் கூடிய பள்ளிகளின் அலப்பறை எல்லாம் வேடிக்கைதான். குழந்தைகளை சேர்த்துவிட்டால் இரண்டு வருடம் மறந்துவிட வேண்டியதுதான். பெற்றோர்கள் மாதம் ஒரு முறைதான் பார்க்க வேண்டும், வாரத்திற்கு ஒரு நாள் அனுமதி பெற்றுதான் தொலைபேசியில் பேசவேண்டும். நடுவில் குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் இவர்களே பார்த்துக்கொள்வார்களாம். நாமக்கல் போன்ற பள்ளிகளுக்கும், சிறைகளுக்கும் வித்தியாசமே இல்லை.

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

விடுதியில் இரவு வெகு நேரம் வரை படிக்க வேண்டும், விடியற்காலை நான்கு மணிக்கே மீண்டும் கண்விழித்து படிக்க வேண்டும் இதற்காக விடுதியின் ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பாளர்கள் ஸ்கேலை வைத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் வருகிறார்கள், யாராவது தூங்கினாலோ, சக மாணவர்களோடு பேசிக்கொண்டிருந்தாலோ பொளேரென்று அடி விழும். வளரும் பருவத்தில் பெற்றோர்கள் அரவணைப்பு, வெளியுலக அனுபவம் இவற்றையெல்லாம் தொலைத்து மதிப்பெண் பெறும் எந்திரமாகத்தான் உருவாக்கப்படுகிறார்கள்.

கல்வி என்பது சுமையாகிவிட்டது இது போன்ற பள்ளிகளாலும், பேராசை கொண்ட பெற்றோர்களா லும்தான். கற்றல் என்பது புரிந்து உணரக்கூடிய இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும்.

சமீப வருடங்களாக மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெறும் பட்டியலில் அரசு பள்ளிகளும் நிறைய இடம் பிடித்து வருவது பாராட்ட வேண்டிய ஒன்று! அரசுப்பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவான பார்வையை இவ்வாறான முயற்சிகள் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதற்காக பாடுபடும், நேர்மையுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு நன்றி!

பள்ளிச்சேர்க்கை நடைபெறும் இச்சமயத்தில் அரசு ஆசிரியர்களும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க அரசு பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று நிறைய இடங்களுக்கு கேன்வாஸ் செல்கிறார்கள். இப்படி சென்ற அரசு ஆசிரியையாக இருக்கும் என் தோழியிடம் பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, “ உங்க பிள்ளைகளை எங்க படிக்க வைக்கிறீங்க?” என்பதாகும்.

இது காலகாலமாக பெற்றோர்கள் கேட்கும் கேள்வியாம்.. அது சரி அரசு பள்ளி ஆசிரியர்களே உங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை? சிலரை கேட்டபோது,
“எங்க ஸ்கூல்லயே எங்க பிள்ளைகளை சேர்த்தால், ஆசிரியர் பிள்ளைங்கன்னு முன்னுரிமை கொடுக்கிறாங்கன்னு மாணவர்களிடையே வதந்திகள் உருவாகும்...”

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

(நீங்கள் பணிபுரியும் பள்ளியை விட்டு வேறோரு அரசுப்பள்ளியில் சேர்க்க முடியாதா என்ன? வருடத்திற்கு பத்தாயிரம், இருபதாயிரம் பேருந்து கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளிகளுக்கு சற்று தொலைவாக இருந்தாலும் அனுப்ப தயாராக இருக்கும் நீங்கள், மற்றோரு அரசு பள்ளிக்கு அனுப்ப ஏன் விரும்புவதில்லை?)

“ எல்லோரையும் மாதிரிதான் நாங்களும். அந்த ப்ரைவேட் ஸ்கூல்ல படிச்சா நல்லதுங்கறதால நாங்களும் அனுப்ப வேண்டியதாயிருக்கு....”

“ இந்த கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்க ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம் ரொம்ப மட்டமா இருக்கும்.. நம்ம பிள்ளைங்களையும் அங்க கொண்டு போய் விட்டா அவங்களோடு சேர்ந்து கெட்டு போய்விடுவார்கள்...”

-இப்படி சொல்லும் ஆசிரியர்களும் ஆரம்ப கல்வியையும், மேல் நிலைக்கல்வியையும் பெரிய ஊட்டி கான்வென்ட்டிலோ இல்லை வெளி நாட்டிலோ படித்துவிட்டு வரவில்லை. பெரும்பாலானவர்களும் அப்போதைய அரசு பள்ளிகளில் படித்துவந்தவர்கள்தான். இவர்களுக்கு அரசு பள்ளியின் வருமானம் வேண்டும்.. ஆனால் அரசு பள்ளியில் இவர்கள் குழந்தைகள் பயில்வது மட்டும் இழுக்காம்.

குழந்தைகள் மட்பாண்டம் போன்றவர்கள் எவ்வாறு வேண்டுமானலும் வடிவமைக்க இலகுவாக ஏற்றவர்கள்.. ஆரம்ப அரசு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், பண்பும் கற்றுக்கொடுக்க வேண்டியது உங்கள் கடமைதானே?

அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்குவது அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கை குறைவா? அல்லது கௌரவ குறைச்சலா?

முன்பெல்லாம் சீனியாரிட்டிபடி பணிக்கு அமர்ந்த ஆசிரியர்கள், கற்பித்தல் திறன் உடையவர்கள், இல்லாதவர்கள் என பணிக்கு வந்து தங்கள் கடமைகளை(?) எப்படியோ ஆற்றினார்கள், அதனால் அரசு பள்ளியில் சரியான கல்வியறிவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது ஆசிரிய தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறாகள். எனவே இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

கவர்மெண்ட் வேலை வேணும்... கவர்மெண்ட் ஸ்கூல் வேணாமா..?

ஆனாலும் அரசு பள்ளிகள் ஏழை மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலையாகிவிட்ட இந்த சமுதாய கேள்விக்குறிக்கு எப்படி முடிவு கட்டுவது? உயர்கல்விக்கு மட்டும் அரசு கல்லூரிகளில் பயில்வதை பெருமையாக கருதும் அனைவரும், பள்ளிக்கல்வியை மட்டும் அரசு பள்ளிகளில் பயில தாழ்வாக நினைக்கும் நிலையை மாற்றியமைப்பது எப்படி?

ஒவ்வொரு அரசு ஆசிரியர்களும், தங்கள் குடும்பத்தை சார்ந்த அத்தனை குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும். உங்களை பார்த்துதான் பொது மக்கள் நாங்களும் முன்வருவோம்.

அண்மைகாலமாக நவீன கல்வி முறை , சரியான வழிகாட்டல் என்று அரசு மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி வரும் உங்கள் கடமையை பாராட்டுகிறோம்.. வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக உழைக்கிறீர்கள். ஆனால் பணிபுரியும் இடத்திற்கு பெருமை சேர்ப்பது அரசு பள்ளிகளின் மீதான தரக்குறைவான பார்வையை மாற்றியமைப்பதுதான்..

அரசு பள்ளிகளில் ஏழை, பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பயிலும் போது முறையான கல்வி இனிமையான அனுபவமாய் அமையும். பெரும்பாலும் ஏழைகளின் கல்விக்கூடங்களாய் அணுகப்படும் இப்பள்ளிகளை, முதலில் உங்களிலிருந்துதான் மாற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் ஐ.ஐ.டிக்கும், அண்ணா யுனிவர்சிட்டிக்கும் கிடைக்கும் வரவேற்பு, அரசு பள்ளிகளுக்கும் கிடைக்கும்.

அதோடு மட்டுமில்லாமல் தனியார் பள்ளிக்கூடங்களினால் கல்வி வியாபாரமாவதையும் கட்டுப்படுத்த முடியும்.

 - உஷா (வேலூர்)


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு