Published:Updated:

பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!

பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!
பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!

பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!

தூய்மை இந்தியா, பசுமைப்புரட்சி என்று சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ‘பசுமைப் பெட்டி’யை உருவாக்கியிருக்கிறார் கும்பகோணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சத்திய நாராயணன்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லையென்றால் நம்முடைய எதிர்வரும் சந்ததியினர் நோய்வாய்பட்டே இறந்து போய்விடுவார்கள். அவர்கள் 40 வயது வரைதான் வாழ்வார்கள். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்று நூதன போராட்டத்தில் பசுமைப்பெட்டியுடன் வலம் வருகிறார் கும்பகோணத்தை சேர்ந்த சத்தியநாராயணன்.

பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!

சமூக ஆர்வலர், வணிகர் சங்க செயலாளர் என்று பல பொறுப்புகள் மத்தியிலும், சமூகச் சேவைதான் என்னுடைய முழுப்பணி என்று கூறும் அவரை சந்தித்து பசுமைப்பெட்டி பற்றி பேசினோம்.

''நாம் இப்போது பெரும் சுகாதார சீர்கேட்டை சந்தித்து வருகிறோம் என்பது ஒருவருக்குக்கூட தெரியவில்லை. அன்றாடம் நாம் பிளாஸ்டிக்கை தவிர்த்து வந்தாலும், இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியும். அதனால்தான் நான் முன்னுதாரணமாக இருந்தால்தான் மற்றவர்கள் அதை பின்பற்றுவார்கள்'' என்று சொன்னவர் பசுமைப்பெட்டியின் ரகசியத்தை உடைத்தார்.

''இந்த பசுமைப் பெட்டியில் இரண்டு துணிப்பை இருக்கும். நான் கடைக்குப் போனால் பிளாஸ்டிக் பை வாங்க மாட்டேன். என்னை பார்த்தாலே கடைக்காரர்கள், சார் பிளாஸ்டிக் பை வாங்கமாட்டார் என்று சொல்லி என்னுடைய துணிபையைக் கேட்பார்கள். அதனால்தான் பசுமைப் பெட்டி என்று எழுதி வைத்திருக்கிறேன். நிறைய பேர் என்னிடம் இதைப்பற்றி கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேராவது என்னிடம் கேட்டு விடுகிறார்கள். நானும் அவர்களிடம் இதுகுறித்து விரிவாக கூறுவேன். அதன்பிறகு சற்று யோசித்த பிறகு நாங்களும் பின்பற்றுகிறோம் என்று சொல்லுகிறவர்களும் உண்டு. இதெல்லாம் சாத்தியமாகுமா? என்று கேட்பவர்களும் உண்டு.

நான் நெகட்டிவ்வாக பேசுபவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. பாஸிட்டிவ்வாக பேசி என்னுடைய பசுமைப்பெட்டியை போன்று வைத்திருப்பவர்களை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். என்னை பின்பற்றியவர்கள், எனது நண்பர்கள் இதேபோன்று பசுமைப்பெட்டியை வைத்திருக்கிறார்கள். இதுவே, எனக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். அரசு சார்பாக திட்டங்களை ஒதுக்குவதினால் என்ன பயன்? அது அதிகாரிகளுக்கு கொள்ளை அடிப்பதற்குத்தான் பயன்படும். விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கிறார்கள். அதனால் எத்தனை பேர் பயனடைந்திருப்பார்கள் என்று பார்த்தால் ஒருவர்கூட இல்லை  என்பதுதான் வேதனையான விசயம்.

அதனால்தான் நானாக முடிவு எடுத்தேன். என்னுடைய வீட்டிலும் அதை பயன்படுத்த சொன்னேன். பிறகுதான் நான் பைக்கில் பசுமைப் பெட்டி வைத்தேன். இன்னொரு முக்கியமான விசயம் என்னுடைய சமூகப்பணியை பாராட்டி என்னுடைய நண்பர்கள் பைக் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். இது என்னுடைய சமூகப்பணியை மேலும் ஊக்குவித்தது. மேலும் எதையாவது செய்ய வேண்டுமென யோசிக்கும்போதுதான் இந்த ஐடியா.

பிளாஸ்டிக் பைகளுக்கு 'பை' சொல்லும் 'பசுமைப் பெட்டி'!

சிலர் சாமி ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள், சிலர் தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஓட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்களின் இனத்தலைவர்களை ஸ்டிக்கராக ஒட்டுகிறார்கள்.

முதலில் நான் என்னுடைய வீட்டில்தான் செயல்படுத்த முடிவு செய்தேன். அவர்களும் இபோதும் கவனமாக இருந்து வருகிறார்கள். பைகளில் சாமான் வாங்கி வந்தால் சாமான்களை வீட்டில் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் கொண்டுபோய் பசுமைப்பெட்டியில் வைத்துவிடுவார்கள். இது ஒரு கூட்டு முயற்சியாகத்தான் இருக்க விரும்புகிறேன். கோயில்களுக்கு போனாலும் பிளாஸ்டிக் பை எடுத்து போவதில்லை. இதை எல்லோரும் பயன்படுத்த வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை. பசுமைப்பெட்டியை ஒருநாளைக்கு ஒருவர் தெரிந்துகொண்டு அதை செயல்படுத்தினாலே நிச்சயம் தூய்மையான பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.

ஏனென்றால் இந்த சமுதாயம் எங்கே போய்கொண்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் மிக மோசமான சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் புரியவேண்டும் என்பதுதான் இந்த பசுமைப்பெட்டியின் நோக்கம். பிளாஸ்டிக் என்பது நம்மோடும் நம் வாழ்க்கையிலும் ஒன்றிப்போய்விட்டது. அதை நம் வாழ்க்கையோடு ஒன்றாக நாம்தான் ஆக்கிக்கொண்டோம். அதை நாம் நினைத்தால் நிச்சயம் ஒழித்துவிடலாம். பிளாஸ்டிக் பையை மட்டும் நாம் வாங்கவில்லை. கூடவே நம்முடைய இளையதலைமுறையினருக்கான நோயை சேர்த்து வாங்குகிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால் நிச்சயம் தவிர்த்து விடலாம்.

அந்த காலத்தில் பனை ஓலையில், தென்னை ஓலையில்தான் பொருட்கள் வாங்கி வந்தார்கள், அதை பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும்போது மண்ணோடு மண்ணாக மக்கிப்போனது. ஆனால், இப்போது இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பை,  பூமியில் ஒரு படலமாகவே படர்ந்து காணப்படுகிறது. அதை சாலை ஓரங்களிலும், தெருக்களின் ஓரங்களிலும், குப்பை தொட்டிகளில் கிடக்கும்போது பார்த்தாலே நமக்கே அறுவெறுக்கத்தக்க பொருளாகத்தான் காட்சியளிக்கிறது.

தயவு செய்து இதை படிக்கின்றவர்கள் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுங்கள். இதை படித்தவுடன் பசுமைப்பெட்டி பயன்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று முடிவெடுங்கள்'' என்றார்.

நாமும் பசுமைப்பெட்டியை பயன்படுத்தினால் நிச்சயம் பிளாஸ்டிக் பைக்கு 'பை' சொல்லிவிடலாம்.

-ஏ. ராம்

படங்கள்: கே. குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு