Published:Updated:

மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 19

தி.நகர்

தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 19

தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

Published:Updated:
தி.நகர்


'மனம்போல் முடிந்தது' என்று ஒரு சிறுகதை. 1930-களில் வெளியான இந்த சிறுகதையை அன்றைய புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ்.வி.வி. எழுதினார்.

சாயந்திரம் ஐந்து மணி ஆகிவிட்டால் தி.நகர் ரங்கநாதன் தெரு ஆளரவம் அற்று அமானுஷ்யம் நிழலாடும். தி.நகர் ரங்கநாதன் தெருவில் யாருமற்ற மாலை வேளையில் நடந்த காதல் காட்சி ஒன்றை அந்தக் கதையிலே அவர் எழுதியிருக்கிறார்.

ஹம்சா வசிக்கும் ரங்கநாதன் தெருவைக் கடந்துதான் தினமும் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்வான் ரங்கராமானுஜம். ஒருநாள் சாயந்திரம் 5.18-க்கு ரங்கராமானுஜம், ஹம்சா வீட்டண்டை வழக்கம்போல் வந்தான். ஹம்சாவும் வீட்டண்டை சுவரில் வழக்கம்போல் சாயந்துகொண்டிருந்தாள். தெரு நிசப்தமாக இருந்தது. இந்த வீட்டுக்கெதிரில் திடீரென்று நின்று ஏதோ தேடுகின்றவன் போல் ரங்கராமானுஜம் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஹம்சா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் கண் எதையோ இழந்துவிட்டுத் தேடுகிற கண்ணாய்த் தென்படவில்லை. இவர்கள் பாஷைதான் இருவரும் ஒரே சமயத்தில் கற்றுக் கொண்டாயிற்றே!

சிறிது நேரம் கவனித்துவிட்டு, ''என்ன தேடுகிறீர்கள்?'' என்றாள் ஹம்சா. ரங்கராமானுஜத்தின் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

''அரை ரூபாய் காசு விழுந்துவிட்டது. தேடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டு மறுபடி தேடுவதுபோல பாவனை பண்ணினான்.

மெட்ராஸ் வரலாறு: 1970களில்  தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா?  | பகுதி 19

''விழுந்தால் ஓசைப்பட்டிருக்குமே, ஓசை கேட்கவில்லையே'' என்றாள்.

''இல்லை. விழுந்தது என்கிறேனே... என் ஜேபியில் இல்லையே''

''ஜேபியில் இல்லாவிட்டால் ஒருவேளை காபி கிளப்புக்குக்காரனிடத்தில் இருக்கிறதோ என்னவோ? ஞாபகப்படுத்திப் பாருங்கள்'' என்றாள்.

நம்முடைய டக்கை இந்தப் பெண் கண்டுகொண்டுவிட்டாள் என்று ஒரு வெட்கம். எப்படியோ சங்கதி அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளும் அநுகூலமான மனத்தோடு இருக்கிறாள் என்று நினைத்து சந்தோஷம். என்ன விஷமாமய்ப் பேசுகிறாள்... என்ன புத்திசாலி என்று வியப்பு...

-இப்படி போகிறது கதை. அவர்களுடைய காதல் விவகாரம் நம் மெட்ராஸ் தொடருக்கு தேவை இல்லாதது.

தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம். '50 காசு நாணயம் கீழே விழுந்தால் சத்தம் கேட்டிருக்குமே' என்பதையும் கவனிக்கவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ராஸ் வரலாறு: 1970களில்  தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா?  | பகுதி 19

நான் 70-களில் பார்த்தபோது ரங்கநாதன் தெரு அப்படித்தான் இருந்தது. பழங்காலத்து வீடுகள் சில இருந்தன. சிலர் ரயில் வசதி கருதி தங்கள் வீடுகளை மேன்ஷன்களாக மாற்றி வைத்திருந்தனர். சில பால் வியாபாரிகள் தெருக்களில் பசுக்களை ஓட்டிவந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட தெருவிலேயே பால் கறந்து கொடுப்பார்கள். சில வீடுகளில் தென்னை மரங்கள் இருக்கும். இளநீர் பறித்துத் தருவதற்கு சில மரம் ஏறிகள் அங்கே இடுப்பில் வெட்டுக் கத்தியோடு வருவார்கள்.

சில நல்ல மெஸ்-கள் அங்கே இருந்தன. 80-கள் வரை அங்கே நிலைமை அப்படித்தான் இருந்தது. வாகனங்கள் சுலபமாகச் செல்லும். ரங்கநாதன் தெருவில் நானே சைக்கிள் ஓட்டித் திரிந்திருக்கிறேன். 90-களின் தொடக்கத்தில்கூட சில பத்திரிகை நண்பர்கள் அந்த மேன்ஷன்களில் இருந்தனர். அம்பாள் மேன்ஷன் என்ற பெயர் நினைவிருக்கிறது.

சொல்லப்போனால் பாண்டி பஜார் என்ற பகுதியில்தான் கடைகள் அதிகம் இருந்தன. பனகல் பார்க் பக்கத்தில் சில துணிக்கடைகள் இருந்தன. நல்லி சில்க்ஸ் என்ற கடை அதில் பழசு. உஸ்மான் சாலையில் பல்லவன் பேருந்துகள் வேகமாக விரைந்துசெல்லும். இப்போது மனிதர்கள் நகர்ந்து செல்வதற்குக் கூட வாய்ப்பில்லாமல் போனதற்குப் பிள்ளையார் சுழி போட்டது, பிள்ளையாரின் தம்பியின் பெயரில் அமைந்த சரவணா ஸ்டோர்தான். எல்லா பொருளும் ஒரே இடத்தில் கிடைக்கும்; மலிவாகவும் இருக்கும் என்ற அவர்களின் தாரக மந்திரம் ஒட்டு மொத்த தி.நகரின் போக்குவரத்தையே மாற்றிப் போட்டுவிட்டது.

அவர்களின் வரிசையான கடைகள், அவர்களைப் போலவே மற்ற விற்பனையாளர்கள் ஆரம்பித்த கடைகள், அடுத்து படையெடுத்த நகைக்கடைகள்... மக்கள் அலைமோத ஆரம்பித்தனர்.

'நகரத்து நெரிசலில்
மனதுகூட நசுங்கிப் போனவர்கள்' என்று கவிஞர் மு.மேத்தா எழுதிய கவிதை தி.நகரைப் பார்த்துதான் என நினைக்கிறேன்.

சென்னை வாசிகள் பெயரைச் சுருக்குவதில் கில்லாடிகள். நீதிக்கட்சியில் இருந்து சமூக நீதிக்காகப் போராடிய சௌந்திரபாண்டியனார் பெயரில் அமைந்த மார்க்கெட்டை பாண்டி பஜார் என்றனர். நீதிக்கட்சி போராளியான தியாகராயர் பெயரில் அமைந்த நகரை தி.நகர் என்றனர். நகரத்து நெரிசல், பெயர்களைக்கூட நசுக்கிவிடும் போல் இருக்கிறது.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism