Published:Updated:

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?
ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?

ம்பூர் என்றால் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆனால்   பிரியாணிக்கு பதில் மக்களின் கொந்தளிப்பால் உருவான 'கலவரம்' மட்டுமே இனி நினைவுக்கு வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

போலீசாரால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக ஏற்பட்ட ஆர்ப்பாட்டமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாமல் பிடிவாதம் செய்த போலீசாரின் காலதாமதமுமே  கலவரத்திற்கு காரணமாகிவிட்டது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது (26) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். விசாரனையின் போது சமீல் அகமதை பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதால் சமீல் அகமது இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள், சமூகத்தினர் திரண்டு காவல் துறை ஆய்வாளர்  மார்ட்டின் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் அடங்காத வன்முறைக் கலவரமாக மாறியது.

சுமார் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கலவரமாகப் பார்ப்பதை விட போலீசின் செயல்பாட்டிற்கு எதிராக, எதிர் வினைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இறந்து போன சமீல் அகமது செய்த காரியம் சரியோ, தவறோ. அதற்காக உயிர் எடுக்கும் அளவிற்கு போலீசார் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டதால், கலவரம் நிகழ போலீசார் காரணமாகி விட்டனர். போலீசாரின் செய்கைக்கு எதிராக பொது மக்களின் கலவரமும் நியாயமற்றது. இன்றைக்குள்ள நீதித்துறை, நவீன மருத்துவ அறிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்து சிறையில் வைக்க முடியும்.

வழக்கம்போல காவல் துறையின் 'பெரிய தண்டனையான' இட மாறுதல் அளித்து பிரச்னையை முடித்து விடுவார்களோ என நினைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும், வன்முறையும் நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டு, முடிவில் ஆம்பூர் நகரம் கலவரமாக மாறிய பிறகே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணி  இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பல கோடிக்கணக்கில் சேதமும், இயல்பு வாழ்க்கை பாதிப்பும், பல போலீசார், போராட்டக்காரர்கள் காயமுற்றும், கைது செய்யப்பட்டும் அடுத்த கட்டமாக அரசின் விசாரணைக்குழுவும் அரங்கேறும் நிலைக்கு போலீசார் பிரச்னையை பெரிதாக்கி விட்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. முடிவில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் இழப்பீடு ஏதும் வசூலிக்காமல், மக்களின் வரிப்பணத்தில் இழப்பீடு வழங்கி, உயிருக்கு விலை வைத்து வழக்கு முடிவுக்கு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..?

ஆரம்ப நிலையிலேயே சம்பந்தப்பட்ட ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. ஒரு காவல் ஆய்வாளரை காப்பாற்ற இவ்வளவு போராட்டமும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பையும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஆய்வாளருக்காக உயர் அதிகாரிகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள், போலீசார் நல்லுறவு பாதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இறந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா? சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு காரணமாகி விட்டனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட சமீல் அகமது இறந்தவுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோரை, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்காமலும், முன் கூட்டியே போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த தவறியதும் இந்தக் கலவரத்திற்கு முக்கியமான காரணம்.

அரசு ஊழியர், பொதுமக்கள் அனைவருக்கும் ஒரே குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ள போது காவலர்களுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும்? ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு கூட அபராதம் விதித்தோம் எனச் சொல்லும் போலீஸ் செய்திகள், ஒரு உயிரைக் கொல்லும் அளவிற்கு துன்புறுத்தி உயிர் போக காரணமாக இருப்பதை மட்டும் விதி விலக்காக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

இந்த நாட்டில் நீதிமன்றங்களும், சிறையும் எதற்காக உள்ளது என்ற விபரத்தை போலீசாருக்கு சொல்லித் தர வேண்டியது நீதிபதிகளின் கட்டாய கடமைகளுள் ஒன்று.

இந்தியாவில் 2008 முதல் 2013 வரை சுமார் 12,000 பேர் போலீஸ் நிலையத்தில் அல்லது சிறையில் கொல்லப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு (NCRB) அறிக்கையின்படி 2013 ஆண்டு போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொல்லப்பட்டவர்களில் முதலாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு (34 பேர்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாமிடத்தில் (15 பேர்) உள்ளது.  நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ளவர்கள் கூட போலீசாரால் அழைத்துச் சென்று கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளார் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீதிபதிகள் தான் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சுமத்தப்பட்டவரை தனியார் விடுதியில் விசாரிப்பதும், பின் அவரின் மரணச் செய்தியும் தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளை  திருத்தவேண்டிய சிறைக்கூடம் சித்ரவதைக்கூடமாக மாறி உயிர் எடுத்து வருகிறது.

எத்தனையோ பெண்கள், காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்; பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். உடுமலைப்பேட்டையில் 50 வயது பெண்ணை 7 போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ததை மறந்திருக்க முடியாது. அவர்களையும் இதேபோல அடித்துக் கொல்ல முடியுமா என்பதை போலீஸ் மனசாட்சி சொல்ல வேண்டிய பதில்.

இந்தியாவின் சரப்ஜித் சிங், பாகிஸ்தான் சிறையில்  கொல்லப்பட்டதற்கு எதிராக கொதித்து பேசுகிறோம், மரண தண்டனைக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்கிறோம். ஆனால், உள்ளூர் போலீசார் ஆண்டுக்கு பல பேரை சட்டத்திற்கு பயப்படாமல் பலி வாங்குவதை கேள்வி கேட்க முடியாமல், தடுக்க முடியாமல் சட்டமும், பொது மக்களும் போலீஸ் சொல்லும் 'சட்டத்திற்கு'   உட்பட்டு வாழ்கிறோம் என்பதே உண்மை.

ஆண்டுக்காண்டு போலீஸ் நவீனமயமாக்கல், சீர்திருத்தம் என்ற பெயரில் பல கோடிகள் செலவுகள் கூடும். அதே நேரத்தில் போலீஸ் மீதான லஞ்சம், பாலியல், கொலை, கொள்ளை, திருட்டு, லாக் அப் மரண வழக்குகளும் அதிகமாகி வருவது, மக்களின் வரிப்பணம் மக்களை காப்பதற்கா இல்லை, வீண் செலவிற்கா என்பதை நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து.

என்னதான் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வைத்தாலும், கண்ணியம் இல்லாத வரை கேமராவால் ஒன்றும் சாதிக்க முடியாது. சுமார் 7.4 கோடி பேர் உள்ள தமிழகத்தில் பொதுமக்களின் குற்றச்  செய்தி விகிதம் குறைவாகவும், 1.2 லட்சமுள்ள போலீஸ் மீதான  குற்றச் செய்தி அதிகரித்தும் வருகிறது.

என்னதான் உயர் அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தாலும் கண்டிப்புடன் தவறு செய்யும் போலீசாரை உடனடி பணி நீக்கம் செய்யாதவரை, ஆம்பூர் கலவரம் தமிழக வரலாறில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விரிசலின் ஆரம்ப எச்சரிக்கையே.  

போலீசார் மீதான நல்லெண்ணத்தை மேம்படுத்த வேண்டியது, நல்லெண்ணம் கொண்ட உயர் அதிகாரிகளே...!

எஸ். அசோக்

அடுத்த கட்டுரைக்கு