Published:Updated:

மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!

மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!
மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!
மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!

ம்பூரில் காணாமல் போன பெண் பற்றிய விசாரணைக்காக ஷமில் அகமது என்பவர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டமும், ஆர்ப்பாட்டமும் கலவரமாக முடிந்த நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

அதே சமயம் காணாமல் போன பெண் கிடைத்து விட்டார். காவல்துறையின் தவறான அணுகுமுறையால் சம்பந்தப்பட்ட ஷமில் அகமது இறந்து விட்டார். காவல் ஆய்வாளர் மார்ட்டின் தலைமறைவாகி விட்டார் .

மூன்று மதத்தை சேர்ந்தவர்களால் உண்டான கலவரத்திற்கு காரணமான பொறுப்பற்ற  காவல் துறை அதிகாரியின் தலை மறைவு, போலீசின் மீதான குற்றத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளதாகவே கருதப்படுகிறது.  தனிப்பட்ட இருவரின்  தவறான நட்பும், தான்  உலகின் சர்வாதிகாரி என தவறாக நினைத்து  நடந்து கொண்டு "உயிர் எடுத்த"  சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கலவரம் நிகழ போலீசாரே காரணமாகி விட்டனர்.

தமிழக போலீசின்  அணுகு முறை அனைவரும் அறிந்ததே. கொலையானதாக  சொல்லப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறேன் எனச் சொல்வதும்,  உயிரோடு இருப்பவரை செத்துப் போனதாகவும் , செத்துப் போனவரை   தேடி  வருவதாகவும் சொல்வது போலீஸ் சொல்லும் வழக்கமான பதில்கள். உச்ச நீதிமன்றம் 2006 ல் போலீஸ் மீதான புகார்களை விசாரிக்க  அனைத்து மாநிலங்களிலும் தனிக் குழு ( PCA-  Police Complaints Authority,  Public Grievances Commission (PGC )  அமைக்க உத்தரவிட்டது. 

ஆனால் தமிழகத்தில் அது போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுளதா  எனத் தெரியவில்லை. மக்கள் உயிர் மேல் அக்கறை கொண்டு கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வந்து,  ஹெல்மெட் இல்லாதவர்களை விரட்டிப்பிடிக்கும் சட்டம், காவல் நிலையத்தில் உயிர் போவதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?

இன்றைக்குள்ள நவீன தொழில் நுட்ப காலத்தில்  இன்னமும் ஒருவரை விசாரிக்க கொடூர தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஷமில் அகமது  குற்றவாளி என்றாலும் அதை நீதிமன்றம் சொல்லட்டும். காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க ஒரு உயிரை எடுப்பது உலகம் விரும்பாத செயல்.  ஒரு வழக்கை முறையாக விசாரிக்காமல், கலவர பூமியாக மாற்றிய பெருமை போலீசையே சேரும்.  ஒரு போலீஸ் அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து  சாக வைத்ததை எப்படி நேர்மையான விசாரணையாக ஏற்க முடியும்?

மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!

அடுத்தவர்   குடும்பத்தை சீர் குலைத்த குற்றத்தில் அந்தப்பெண்ணுக்கும் பங்குள்ளபோது, ஷமில் அகமது  மட்டும் எப்படி குற்றவாளியாக போலீசாரால் கருதப்பட்டு மரண தண்டனை  கொடுக்கப்பட்டார்?

ஒருவேளை கலவரத்தில் தீவிரவாதிகள் புகுந்து பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தால், பொதுமக்கள் நிலை என்னவாகும்  எனபதை அறியாத போலீசாரால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? தங்களையே பாதுகாக்க சிதறி ஓடி  ஒளிந்த போலீசார், சட்டம் ஒழுங்கை எப்படி நிலை நாட்ட முடியும்? ஒரு இறந்து போன உயிருக்காக  ஆயிரக்கணக்கானோர் கூடியதை எப்படி எளிதாக போலீசார் நினைத்து விட்டார்கள் என்பதே  புரியவில்லை. ஒரு அரசியல்   கட்சியின் கூட்டத்திற்கு கூட உளவுப்பிரிவு போலீசாரின் அறிக்கை  உயர் அதிகாரிக்கு உடனே தெரிவிக்கப்படும் நிலையில், ஷமில் அகமது இறந்தவுடன் காவல்  நிலையத்தில்  கூடிய சமூக மக்களை போலீசார் ஏன் கண்டுகொள்ளவில்லை?

மதங்கள் தேவையில்லை... மனிதர்கள்தான் தேவை!

சமாதானம் செய்ய இஸ்லாமிய தலைவர்களையோ, அரசியல் கட்சிகளையோ காவல்துறை நாடி இருந்தால் கலவரம் இல்லாமல் பிரச்னை அத்தோடு முடிந்திருக்கும். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை   பணி  இடை நேக்கம் செய்ய தாமதித்ததே மக்களின் வன்முறைக்கும் காரணம் .  காவல் ஆய்வாளர் செய்தது பெரிய குற்றம் எனச்  சொல்லும் அதே சமயம், உணர்ச்சி  வேகத்தில்  வன்முறையில் இறங்கிய மக்களின் செயலும் கடுமையான குற்றமே. 

வன்முறையால் என்றுமே பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. இந்தப் பிரச்னை காவல் துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலாக பார்ப்பதற்கு பதிலாக மத ரீதியில் அறிக்கை விடுவது தேவை அற்றது. 'வழக்கம் போல என்கவுன்ட்டர் நடத்தினாலே  பொது மக்கள், பத்திரிக்கைகள் இரண்டு நாளுக்கு பரபரப்பாக பேசுவார்கள்.. பின்னர் மறந்து விடுவார்கள்' என்ற தவறான கணிப்பினால் உண்டானதே இந்தக் கலவரம். இனி ஒரு முறை போலீஸ் - பொது மக்கள் உறவு பாதித்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு சிறையும், பதவி பறிப்பும் வழங்கிட சட்ட சீர் திருத்தம்  கொண்டு வர வேண்டும்.

போலீசுக்கும், பொது மக்களுக்கும் இடையே நடந்த பிரச்னையை மத ரீதியில் சம்பந்தப்படுத்தி   பேசுவது மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும். இந்த கலவரத்தில் சம்பந்தமே இல்லாத பொது மக்களும்  பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

அரசாங்கம் பொது மக்கள் சார்பில் மதத் தலைவர்கள் , ஓய்வு பெற்ற நீதிபதிகள் , ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கொண்ட குழுவை மக்களின் நல்லிணக்கத்திற்காக பேச  வைக்க வேண்டும். மதங்களை விட மனிதர்களே முக்கியம் என்பதை புரிந்து கொண்டால் வன்முறையும், பதட்டமும் முடிவுக்கு வரும்.

- எஸ். அசோக்