என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

நானும் விகடனும்!

சத்குரு ஜக்கி வாசுதேவ்எழுத்தாக்கம் : சுபா

##~##

''எனக்கும் விகடனுக்குமான தொடர்பு மிக விநோதமானது. தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியாத நான், ஒரு பண்பட்ட தமிழ்ப் பத்திரிகையுடன் இவ்வளவு நெருக்கம்கொள்வேன் என்று நினைத்தது இல்லை.

அதற்கு முன்பு ஆனந்த விகடனைப்பற்றி பலர் சொல்லிக் கேள்விப்பட்டுஇருந் தேனே தவிர, தமிழ் படிக்கத் தெரியாத காரணத்தால், விகடனை நான் நேரடியாகப் படித்தது இல்லை. ஆனால், அது எனக்குத் தொடர்ந்து படித்துக் காட்டப்பட்டது. வேறு எந்தப் பத்திரிகையுடனும் எனக்கு இதுமாதிரியான தொடர்பு ஏற்படவில்லை. எங்களுக்குள் இது ஒரு தனிவிதமான உறவாக மலர்ந்திருக்கிறது.  

நானும் விகடனும்!

விகடன் சிறிய அளவில் வந்துகொண்டு இருந்தபோது, அதன் அளவு எனக்குப் பிடித்து இருந்தது. அந்த அளவைவைத்துத்தான் சட்டென்று அதை அடையாளம் கண்டுகொள்வேன். இப்போது பெரிய சைஸில் வரத் தொடங்கியதும், விகடன் என்ற எழுத்துக்களின் அமைப்பை வைத்து, கடையில் தொங்கும் பத்திரிகைகளில் எது விகடன் என்று புரிந்துகொள்கிறேன்.

என்னுடைய தவழும் வயதில் இருந்தே எங்கள் வீட்டில் 'தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா' (The Illustrated Weekly of India) என்ற ஆங்கில இதழ் வந்துகொண்டு இருந்தது. என் பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் எல்லாவற்றிலும் எங்கள் வீட்டில் அந்த இதழ் புழங்கியது. ஒரு கட்டத்தில், அது திடீர் என்று வெளிவருவது நின்று போனபோது, எங்கள் வீட்டில் ஏதோ ஓர் உறுப்பினர் குறைந்துவிட்டதுபோல் இருந்தது.

எனவே, ஒரு பத்திரிகை 85 ஆண்டுகளாக வெளிவருவது என்பது சாதாரண விஷயமே இல்லை. வெவ்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஓர் இதழ் அந்தக் குடும்பத்தில் அத்தியாவசமான அங்கமாகக் கருதப்படுகிறது என்றால், விகடன் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வதோடு மட்டும் அல்லாமல்; ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பொறுப்பு வாய்ந்த உறுப்பினராகச் செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எந்தக் குடும்பமும் உணர்வுபூர்வமாக விகடனை இழக்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

பல குடும்பங்களில், விகடனோடு பிறந்து விகடனோடு இறந்தவர்கள் இருப்பார்கள். இப்படி ஒரு நிலை வருவதற்கு விகடன் எந்த அளவுக்கு வாசகர்களோடு ஒன்றியிருக்க வேண்டும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனந்த விகடனில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக எனக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் பக்கங்களை நிரப்பும் பகுதியாக இல்லாமல், தமிழகத்தில் ஆன்மிக உணர்வைப் பற்றவைக்கும் ஓர் அக்னிக் குஞ்சாக இருந்திருக்கிறது.

ஆன்மிகம் என்றால், எல்லாவற்றையும் துறப்பது என்ற பொதுவான தவறான எண்ணத்தை 'அத்தனைக்கும் ஆசைப்படு' தொடர் தவிடுபொடியாக்கியது. ஆன்மிகம் என்றால் வாழ்க்கையை முழுமையாகச் சிறப்புடன் வாழ்வதே அன்றி, வாழ்க்கையை விட்டுக்கொடுப்பது அல்ல என்ற விழிப்பு உணர்வை, எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்லும் ஈஷா வின் முயற்சியில், விகடன் செய்த பங்கு மகத்தானது. விகடனின் வாசகர்கள் தமிழ்நாடு எங்கும் நிறைந்து இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு மூலை முடுக்கு களுக்கும் ஆன்மிகம் போய்ச் சேர்வதற்கு அந்த தொடர் ஒரு வாய்ப்பாக இருந்தது.  

சினிமா, அரசியல், வம்பு என்று நிரம்பி வழிகிற பத்திரிகைகளின் மத்தியில், அதுபோன்ற ஜனரஞ்சக விஷயங்களை மட்டுமே பிரசுரிக்க நினைக்காமல், தரம் வாய்ந்த இலக்கியத் தொடர்களையும், ஆன்மிக விழிப்பு உணர்வையும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற விகடனின் பொறுப்பு உணர்வு பெருமைப் படத்தக்கது. அந்த விதத்தில், இந்தச் சமூகத்துக்குத் தேவையானதை வழங்குவதில் ஆனந்த விகடனின் பொறுப்பு உணர்வு தொடர்ந்து நிலை நிறுத்தப் படுவது எனக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதற்கான துணிச்சல், ஞானம், நடுநிலையான தொலைநோக்குப் பார்வை எல்லாமே விகடனுக்கு இருக்கிறது. இது அந்தப் பத்திரிகையின் சக்தியை, நெஞ்சுறுதியை, பொறுப்பை, அதன் அபார பலத்தை தெள்ளத் தெளிவாக நிலைநிறுத்தி இருக்கிறது. விகட னின் இந்தத் துணிச்சல்தான், அதை இந்த வேகத்தில் முன்னோக்கிச் செலுத்திக்கொண்டே இருக்கிறது.

நான் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், ஓர் இடத்தில் பொருந்தி உட்கார்ந்து எழுதும் அளவுக்கு எனக்கு நேரம் கிடைப்பது இல்லை. தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்ட«¦பாதும், தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் இருந்தாலும், நேரம் கிடைத்ததே இல்லை. என் பேச்சுத் தமிழும் என் கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லும் அளவுக்கு இருக்கிறதே தவிர, இலக்கியத்தரம் வாய்ந்தது அல்ல.

இந்த நிலையில், என் கருத்துக்களை நல்ல தமிழில், மக்களுக்கு அறிமுகம் செய்யும் பொறுப்பை எழுத்தாளர்கள் சுபா மூலம் விகடன் எடு¢த்துக்கொண்டது. இந்தக் கருத்துக்கள் மக்கள் மனதை ஆழமாகத் தொட்டது. பல கட்டுரைத் தொடர்கள் மூலம் ஈஷாவை மக்களிடம் எடுத்துச் சென்ற பணியில் விகடன் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது.

நானும் விகடனும்!

ஈஷா நடத்தி வரும் மௌனப் புரட்சியின் வீச்சையும் ஆழத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவமும் பொறுப்பு உணர்வும் விகடனுக்கு இருந்தது. மதச்சார்பற்ற ஓர் ஆன்மிகப் புரட்சியைத் தமிழகத்தில் கொண்டுவருவதற்கு ஈஷா செய்யும் முயற்சிகளில் ஆனந்த விகடன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்கு அளித்திருக்கிறது.

விகடனில் தொடராக வந்தபோது, படிக்காமல் தவறவிட்டவர்களுக்காகத் தொடர்கள் முடிய முடிய, அவற்றைத் தொகுத்து விகடன் பிரசுரம் மூலம் அழகிய புத்தகங்களாக விகடன் வெளியிட்டது. அந்தப் புத்தகங்கள்  விற்பனையில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் அளவுக்குத் தமிழ் மக்களிடையே அந்தப் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  

இப்படிப் பல விதங்களில்... மதத்துக்கும், இனத்துக்கும், மொழிக்கும் அப்பாற்பட்ட ஆன்மிகம் என்ற ஆழ்ந்த உணர்வை தமிழ் வாசிக்கும் மக்களிடம் கொண்டுசேர்த்தது விகடன்தான். இன்றைக்குத் தமிழ்நாட்டில் 'ஆனந்த அலை’ என்ற பெயரில், அடிப்படை ஊழியரில் இருந்து கார்ப்பரேட் தலைவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் ஈஷாவின் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு, விகடனின் இந்தப் பங்களிப்பும் ஒரு காரணம்.

'சத்குரு, இந்த வார விகடனில், உங்கள் பதிலைப் பார்த்தேன். இதே கேள்வி என் மனதைப் பல வருடங்களாக அரித்துக் கொண்டு இருந்தது. இன்றைக்குத் தெளிவு கிடைத்தது!' என்று எத்தனையோ பேர் என்னிடம் பலமுறை மனம் நிறைந்து சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், விகடன் மூலம்தான் என் வாழ்க்கையை மற்றவர்கள் பார்ப்பதற்குப் பல ஜன்னல்கள் திறந்துவிடப்பட்டன. 'அசைபோடுகிறேன்', 'ஆயிரம் ஜன்னல்' போன்ற தொடர்களில், என் வாழ்வைப்பற்றி வேறு எவரிடமும் சொல்லாத பல விஷயங்களை, நான் விகடன் வாசகர்களோடு முதன்முறையாகப் பகிர்ந்துகொண்டேன்.

விகடன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இடையே என் கனவை எடுத்துச் செல்ல முடிந்தது.

மக்களின் வாழ்க்கை சிறப்பாக நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சொட்டு ஆன்மிகமாவது செயல்பட வேண்டும். என்னுடைய உணர்வு என்னவென்றால், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆத்திகராக இருந்தாலும், நாத்திகராக இருந்தாலும், அவருக்குள் ஒரு சொட்டு ஆன்மிகமாவது விதைக்கப்பட வேண்டும்.

தமிழகக் கிராமங்களின் மேம்பாடு, எல்லோருக்கும் கல்வி, இயற்கை முறையிலான விவசாயம், ஆரோக்கியம் என்று மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வளமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றிக்கொள்ள விகடனின் துணையுடன் நான் செய்ய நினைத்து இருக்கும் பல்வேறு அரிய பணிகள் பல பாக்கி இருக்கின்றன.

அத்தனைக்கும் ஆசைப்படுவோம்!''