Published:Updated:

ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!

ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!
ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!

ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!

ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!

ரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படும் பல பேருந்துகள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் பேருந்துகளில் ‌செல்லும் பயணிகள் மட்டுமல்ல நடத்துனர், ஓட்டுநர்களும் எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். சமீபத்தில் சென்னை நகர பேருந்தின் தாங்கும் இரும்பு குழாயை நடத்துனர் சரி படுத்துவதும், அது சிறிது நேரத்தில் ஆட்டம் காணுவதும், அதை மீண்டும் நடத்துனர் சரி படுத்துவதுமான வேடிக்கை காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.

உடைந்த நிலையில் இருக்கும் கண்ணாடிகள், வெளியே கழன்று தொங்கும் தகடுகள் என உருக்குலைந்து, சிறு விபத்து ஏற்பட்டாலும் பெருமளவில் உயிரிழப்பு. வெளிப்பகுதியில் இப்படிக் காட்சியளிக்கும் பேருந்துகளின் உட்புறங்களோ இதை விட மோசமான நிலையில் காணப்படுகின்றன. இருக்கைகள் கிழிந்து யாரும் அமர முடியாத நிலையில் உள்ளன. உடைந்து, துருபிடித்து ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் தகடுகள் பயணிகளை காயப்படுத்துகின்றன. பேருந்தின் நிலை இப்படி என்றால் சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அரசு பஸ்களுக்கு உள்ளூரில் டீசல் நிரப்பாமல் 15 கி.மீ. தூரத்தில் உள்ள பங்கில் டீசல் நிரம்புகின்றனர். இதனால் டீசல் காலியாகி பஸ் பாதி வழியில் நிற்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பத்தாண்டுகளாகவே நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. ஒரு பேருந்து வைத்திருக்கும் தனியார் அடுத்த ஆண்டு இன்னொரு பேருந்தை வாங்கிவிட முடிகிறது. ஆக, இத்தொழில் லாபகரமானது அல்ல என்று கூற முடியாது. தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்கும் ஒரு தொழிலில், அதிகமான பேருந்துகளைக் கொண்டுள்ள அரசால் மட்டும் ஏன் லாபம் ஈட்ட முடிவதில்லை?

ஆட்டம் காணும் அரசு பேருந்துகள்!

காரணம் மிகத் தெளிவு. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும்  கட்டற்ற ஊழல், திறமையற்ற நிர்வாகம், திட்டமில்லாத அணுகுமுறை ஆகிவையே. பேருந்து வாங்குவதில் கமிஷன், உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன், பழுது பார்க்கும் பணியில் அலட்சியம், பராமரிப்பில் அலட்சியம் போன்ற காரணிகளை சரிப்படுத்தாமல், எத்தனை தரம் கட்டணங்களை உயர்த்தினாலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை மீட்க முடியாது.

ஒரு தனியார் பேருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் உழைக்கின்றது. ஓர் அரசுப் பேருந்து ஆறு அல்லது ஏழே ஆண்டுகள் உழைப்போடு அற்ப ஆயுளில் மறைகிறது. ஏன்? உறுதியான பல நல்ல பேருந்துகள் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன என்ற ஒரே காரணத்திற்காக உடைப்பதற்கு வழங்கப்படுவது ஏன்? சரியான பராமரிப்பு செய்து அவற்றை நீண்ட காலம் ஓட்டச்செய்ய ஏன் முடியவில்லை? இதற்கும்  அக்கறையின்மை தான் காரணமா?

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வருவது போல தொந்தரவுக்கு உள்ளாக்கும் பேருந்து பயணத்தில் இருந்து மக்கள் மீள்வது எப்படி? மெட்ரோ ரயில்களில் சொகுசாக ஏறி உலா வந்து காட்சி அளிக்கும் தளபதி, கேப்டன், நாட்டாமை இவர்கள் அரத பழசான, ஆட்டம் காணும் அரசு பேருந்துகளில் ஏறி மக்களின் கஷ்டத்தை கண்டுணர்வார்களா?

-ஷான், (மயிலாடுதுறை)

அடுத்த கட்டுரைக்கு