என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

கல்விக் கோட்டை!

##~##

பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், சமூகவியலாளர் என பன்முகத் தன்மைகொண்ட தொ.பரமசிவன், தனது சொந்த ஊரான பாளையங்கோட்டையைப் பற்றி இங்கே பேசுகிறார்!

 ''பாளையங்கோட்டை தமிழகம் முழுவதும் ஒரு கிறிஸ்துவ நகரம் என்பதாகவே அறியப்பட்டு இருக் கிறது. ஆனால், உண்மையில் அதன் பழைய பெயர் ஸ்ரீவல்லப மங்கலம். அப்போது ஆண்ட ஸ்ரீவல்லபனுடைய மகனாகிய பராந்தக வீர நாராயணன் இங்கே ஒரு பெருமாள் கோயி லைக் கட்டினான். அதில் 41 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் இருந்து இந்த ஊரின் பழைய பெயர் 'கீழ்கள கூற்றத்து ஸ்ரீவல்லப மங்கலம்’ என அறிய முடிகிறது.

என் ஊர்!

வெள்ளைக்காரர்கள் இங்கே வந்த பிறகு, இந்த நகரம் ஒரு கல்வி நகரமாக மாறியது. 19-ம் நூற் றாண்டிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட கண் தெரியாதவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய ஊர் இது. 1892-லேயே அவர்களுக்காக தனித் தனிக் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வந்தன.  கல்வித் தாகம் அதிகம் இருந்ததன் விளைவாக, நிறைய அறிஞர்கள் இந்த நகரத்தில் இருந்து உருவானார்கள். கடந்த நூற்றாண்டில், தமிழ் இலக்கியத் தில் முக்கிய இடம் வகித்த புதுமைப்பித்தன் பிறந்த ஊர் இது. கால்டுவெல், ஜி.யூ.போப், பாரதி போன்ற அறிஞர்களுக்கும் இந்த ஊரோடு தொடர்பு உண்டு. பாரதியின் மனைவி, அவரது பேரக் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக இறுதிக் காலத்தில் இந்த ஊரில்தான் வந்து தங்கினார்.

என் ஊர்!

இங்கு பிறந்து வளர்ந்த காரணத் தால்தான், எங்க ளைப் போன்ற முதல் தலைமுறை யைச் சேர்ந்தவர் கள் ஆய்வாளர்களாகவும் எழுத்தாளர் களாகவும் மாற முடிந்தது.

சைவ சித்தாந்த அறிஞர் சி.சு.மணி, நாட்டார் வழக்காற்றியல் துறையைத் தொடங்கி ஆவணக் காப்பகத்தையும் உருவாக்கிய பேராசிரியர் லூர்து ஆகியோர் வாழ்ந்ததும் இதே ஊரில்தான்.

இந்த ஊரில் தங்கி இருந்து நிறைய ஆங்கி லேயர்கள் நூல்களை எழுதி இருக்கிறார்கள். ஹென்றி பவர் என்பவர் 1854-ல் வேத அகராதி என்ற பட விளக்க நூலை உருவாக்கி இருக்கிறார். பெரும் பல்கலைக்கழகங்களால் கூட இன்றைக்கும் செய்ய இயலாத அந்தப் பெரும் பணியை, மின்சார வசதி இல்லாத காலத் தில் காடா விளக்கு வெளிச்சத்தில் செய்து முடித்து இருக்கிறார்.

நாடகத் துறையில் பெரும் சாதனைகளைப் படைத்த மு.ராமசாமி இந்த ஊர்க்காரர். 70 வருடங் களுக்கு முன் துப்பறியும் கதைகளை எழுதிய ஜெ.ஆர்.ரங்கராஜுவும் இதே ஊர்க்காரர்தான்.

அந்தக் காலத்தில் கரையாளர் நூலகம் என்கிற தனியார் நூலகம் இருந்தது. அதுவே பிற்காலத்தில் மாவட்ட மைய நூலகமாக மாறி இருக்கிறது. அரிய பல நூல்களைக்கொண்ட இந்த நூலகத்தின் தாக்கம் இல்லாதவர்களே    இந்த ஊரில் கிடையாது. ஏராளமான எழுத்தாளர்களும் இதழ்களும் பிறந்த ஊர் இது. அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் இந்த ஊரின் பங்கு  கணிசமானது. ஆகவே, நூல் வெளியீட்டுத் துறை, கல்வித் துறை என்று முன்னிலை எடுத்த இந்த பாளையங் கோட்டையில் பிறந்து வளர்ந்தது தான் என்னை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் மாற்றியது என் றால் மிகை இல்லை!

என் ஊர்!

கட்சிக்காரர்களைக் கேட்டால், 'கலைஞர் சிறையில் இருந்த ஊர்’ என்பார்கள். அவர்களின் பெருமை அது!''  

- ஆண்டனிராஜ் , படங்கள்: எல்.ராஜேந்திரன்