Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

''இப்போது இருப்பது ஏக்கப் பெருமூச்சே!''

##~##

''50 அடி தொலைவைக் கடப்பதற் குள், நம் கண்களில் ஏதாவது ஒரு பூவரச மரமோ அல்லது வேப்ப மரமோ இரண்டு முறை தட்டுப்படும். நடு நடுவே முருங்கை மரங்களும் காற்றில் தலை அசைத்து ஆடும். அப்படி இருக்கும் எங்கள் வளவனூர்!

 நாலைந்து சதுர மைல் பரப்புக்கு இடையே கரை விளிம்பைத் தொட்டுத் தளும்பியபடி இருக்கும் ஏரி, ஊருக்கே திலகம் வைத்ததுபோல மினுமினுக்கும். சின்ன வயதில் அதைப் பார்க்கும்போது, கடலைப் பார்த்ததுபோல மிரண்டு நின்றது உண்டு. ஏரியைச் சுற்றி உயரமான கரைகள். ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் பனை மரங் கள், புளிய மரங்கள், ஆல மரங்கள், அரச மரங்கள் கரையின் பாதையை நிழல் மய மானதாக மாற்றும். கரைகளின் மறு பக்கமான அர்ப்பிசம்பாளையம், சாலை யாம்பாளையம் பகுதிகளில் இருந்து தயிர்க் கூடைகளையும் பனங்கிழங்குகளையும் மரவள்ளிக் கிழங்குகளையும் முந்திரிப் பழங்களையும்  விற்பனைக்குக் கொண்டுவரும் அக்காக்கள், பெரியம் மாக்கள், பாட்டிகளின் பாதங்கள் படிந்து படிந்து கரையில் ஒற்றையடித் தடம் உருவாகி இருக் கும். அவர்கள் சிரிப்பு, கதைகள், வசைகள் எல்லாமே பாதையோரப் புதர்களில் சிதறிக்கிடக்கும்.

என் ஊர்!

ஏரிக்கு அருகே உள்ள ரயில்வே ஸ்டேஷன் இன்னோர் அழகு. ஆயிரம் கைகள்கொண்ட தாயாக நிற்கிற ஆல மரத் தின் காலடியில் ஒரு சின்ன குடிலைப்போலக் காணப்படும் ரயிலடி. வில் வண்டிகளும் குதிரை வண்டிகளும் நிழல்களில் நின்று பயணிகளுக்காகக் காத்திருக்கும். ஸ்டேஷனைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் உயரமான நாவல் மரங்கள், வேப்ப மரங்கள், இலுப்பை மரங்கள். வேம்பு பூக்கும் காலத்தில் அந்த இடமே அதன் மணத்தால் நிரம்பி இருக்கும். இலுப்பை பூக்கும் சமயத்திலும் அந்த மணம் சட்டென்று ஆளைத் தாக்கும். பிரசவ வசதிகளோடு கூடிய மருத்துவமனை வளாகம், வளவனூரின் முக்கியமான இன்னோர் அடை யாளம்.

அகால வேளையில்கூட வில் வண்டிகளில் அழைத்து வரப்படும் கர்ப்பிணிப் பெண்களைக் கவனிக்கும் செவிலியர் களும் மருத்துவர்களும் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.  இன்னும் கொஞ்சம் தள்ளி, கால் நடை களுக்கும் ஒரு மருத்துவமனை உண்டு. அதைத் திறந்து வைத்தவர் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா. அதை அடுத்து, அமைதியும் அச்சமும் சூழ்ந்த ஒரு பெரிய குளம். அப்புறம் இடுகாடு. கரையோரம் புறப்படுவதற்குத் தயாராக குதிரை மீது உட்கார்ந்திருக்கும் அய்யனார் சிலை. உருண்ட அவர் கரு விழிகளையும் கையில் ஏந்திய வாளையும் கண்டு நான் நடுங்கியிராத நாளே இல்லை.

பஞ்சாயத்து போர்டு, பிள்ளையார் கோயில் இரண்டையும் தாண்டிக் கடந்ததும், புதுச்சேரியையும் விழுப்புரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் தொட்டுவிடலாம். இன்றுதான் அது நெடுஞ்சாலை. ஒரு காலத்தில் அது வண்டிப் பாதை. பயணிகளின் பசி போக்க கிராமணி டீக் கடை உண்டு. அவர் முருக பக்தர். கடையின் முகப்பில் முருகர் படத்துக்கு முன்னால் வாசனை வத்தி எரிந்தபடி இருக்கும். அடுத்து ரெட்டியார் கடை. அவர் பகுத்தறிவாளர். பெரியார் படத்தைப் பெரிதாக கல்லாவுக்கு மேல் மாட்டிவைத்து இருப்பார்.

திரௌபதை அம்மன் கோயில் திடல் வளவனூரின் மற்றும் ஓர் அழகு. நெருப்புத் திருவிழா காலத் தில் மக்கள் கூட்டம் அலை மோதும். விற்பனைக் காக தெருவோரம் எழுந்து இருக்கும் நாடோடிக் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடக்கும். அண்ணா, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., சிவாஜி,   என இங்கே பேசியவர்கள் பலர் உண்டு. பாட்டுக் கச்சேரிகளுக்குப் பஞ்சமே இல்லை. அங்கே நடக் கும் கூத்துகளும் பொம்மலாட்டங்களும் பரவசம் தருபவை. எங்கள் ஊரில் 24  மணி நேரமும் இடை விடாது ஒரு வட்டப் பாதையில் மிதிவண்டி ஓட்டிச் சாதனை நிகழ்த்தினார் ஓர் இளைஞர்.

என் ஊர்!

10 ரூபாயே மிகப் பெரிய தொகையாக பேசப்பட்ட காலத்தில் குலுக்கல் சீட்டில் லட்ச ரூபாய் பரிசைப் பெற்றவரும் வளவனூரில் உண்டு. சட்டென்று அவர் கௌரவம் உச்சத்துக்குப் போய் விட்டது. தொடக்கக் கல்விக்கு பஞ்சாயத்துப் பள்ளிக்கூடமும் கோவிந்தையர் பள்ளியும் ஊருக்கு உள்ளேயே இருந்தன. உயர்நிலைப் பள்ளி மட்டும் ஊர் எல்லையில் இருந்தது. வேறு எங்கும் இல்லாத அளவு மிகப் பெரிய கால் பந்தாட்ட மைதானம் இங்கே உண்டு. ஊரின் கிழக்கில் பிரபாத் டாக்கீஸ், மேற்கில் சரவணா டாக்கீஸ் என்கிற பெயர்களில் கீற்றுக் கொட்டகைகள் இருந்தன. கால ஓட்டத்தில் இரண்டும் மறைந்து கல் கட்டடமாக ஒரு பெரிய திரையரங்கம் எழுந்து, 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி, கடந்த வருடத்தில் அதுவும் அடங்கி விட்டது!

இவை எல்லாமே 30 ஆண்டுகளுக்கு முந்தைய அழகுகள். அந்த முழுமை இப்போது இல்லை.  சற்றே சிதைந்தும் மாற்றுக் குறைந்தும் மங்கிப்போய் விட்டன. நம் வீட்டுக்குள் வளர்க்கும் கீரைப் பாத்தி யைக்கூட கண்ணும் கருத்துமாகக் கவனிக்கிற நம் மனம், ஊரின் அழகைக் காப்பதில் முனைப்பு காட்டவில்லை.  சின்னச் சின்ன உதாசீனங்களால் இந்த மண்ணில் எழுந்த மாபெரும் அழகுகளை மெள்ள... மெள்ள இழந்துவிடுவோமோ என நெஞ்சில் எழும் கவலையைத் தவிர்க்க இயலவில்லை!'

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு