Published:Updated:

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!
சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

முன்பெல்லாம் ஆண் பிள்ளைகள் குடித்துவிட்டு, வேலைக்குப் போகாமல், மனைவி, பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி குடும்பத்தைச் சீரழித்து வந்தனர். இப்போதோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளிக்கே கொண்டுவந்து இடைவேளையில் குடிப்பதும் அரங்கேறிக்கொண்டிருப் பதைக் காண சகிக்கவில்லை.

இப்போதெல்லாம் மாணவர்கள் தங்கள் ஆதர்ஷ நாயகனாக நினைப்பது தங்கள் அப்பாவையோ அல்லது நம் சமுதாயத்தில் உள்ள பெருந்தலைவர்களையோ மகான்களையோ அல்ல; திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களை. அதுவும் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சிகளில் அதிகம் வரும் கதாநாயகர்களை.

அவர்களைப்போல உடுத்துவது, நடப்பது, வசனம் பேசுவது என்று இருந்த நிலை மாறி, அவர்களைப் போல ஸ்டைலாக புகைப்பது, மது அருந்துவது என்று மாறிவிட்டனர்.

முன்பெல்லாம் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர்களும், அடியாட்களும் மது அருந்துவதுபோல காட்சிகள் அமைப்பார்கள். ஏதோ சில படங்களில் கதாநாயகன் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றாலும், இறுதியில் அதற்காக அவர் வருந்தி திருந்துவதாகக் கதையை முடிப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் மது அருந்தும் பழக்கத்தை நியாயப்படுத்துவதும், பொது இடங்களில் மது அருந்துவதை ஒரு சமுதாய அந்தஸ்தாகக் காட்டுவதும் நடைபெறுகிறது. 

சமீபமாக வெளிவரும் திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் படம் முழுக்க குடித்துவிட்டு தத்துபித்தென்று உளறிக்கொண்டு, தெருவில் உருண்டு, புரண்டு கதாநாயகிகளை வர்ணிக்கும் இரண்டும் கெட்டான் காட்சிகள் மட்டுமே இடம் பெறுகின்றன. குழந்தைகளோடு திரையரங்கிலோ அல்லது வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியிலோ பார்க்க முடிவதில்லை.

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

என் ஆறு வயது பேரனை ஒரு புதுப் படத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் நாங்கள் பட்டபாடு இருக் கிறதே....!

''என்ன பாட்டி ... இந்த மாமாதான் ஹீரோன்னு சொல்றீங்க... இவர் என்னடான்னா இப்படி கெட்ட மருந்து (மது) குடிச்சிட்டு இப்படி உளறிக் கொட்றாரு. இந்தப் படத்துக்கு என்னை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?''   என்று அவன் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை. உடனே அவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம்.

சினிமா 'போதை'யில் இளம் தலைமுறை!

ஹீரோ என்றால் உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடும் நல்ல பண்பாளர் என்பதாக என் மகள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதோடு, அவன் மனதில் ஹீரோக்கள் என்றால் சத்ரபதி சிவாஜி, நேரு, காந்தி,கட்டபொம்மன், பகத் சிங் போன்றவர்களை ஹீரோக்களாக பதிய வைத்து இருக்கிறாள். அந்த அளவுக்கு பண்பான வேடங்களை ஏற்கவில்லையென்றாலும்  பரவாயில்லை, குறைந்தபட்சம் சாதாரண மனிதனாகவாவது வேடங்களை ஏற்கவேண்டுமா? ஹீரோக்களை குடிகாரர்களாக, வன்முறையாளர்களாக காட்டி சமூகத்தை அச்சுறுத்துவதுதான் தமிழ்சினிமா சமூகத்திற்கு செய்யும் தொண்டா?

அண்மையில் வந்த ஒரு திரைப்படத்தில் ஹீரோயின் குடிப்பதுபோல  காட்சிகள் இடம் பெற ... நிழல் நாயகியைப் பார்த்து நிஜத்திலும் மாணவிகளும் பெண்களும் குடிப்பது தொடர்கதையாகிவிட்டது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் இவர்கள் வீட்டில் எல்லாம் என் பேரனைப் போன்ற சிறு பிள்ளைகள், வளர் இளம் பிள்ளைகள் இருப்பார்கள்தானே? அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாவது நல்ல குறிக்கோள்களுடன், தரமான திரைப்படங்களைத் தயாரிப்பார்களா?

- எஸ்.கே.விஜி,
(சேலம்)
 

அடுத்த கட்டுரைக்கு