Published:Updated:

கள்ளச் சாராய சாவிற்கு அரசின் நல்ல சாராய சாவே மேல்?

Vikatan Correspondent
கள்ளச் சாராய சாவிற்கு அரசின்  நல்ல சாராய சாவே மேல்?
கள்ளச் சாராய சாவிற்கு அரசின் நல்ல சாராய சாவே மேல்?
கள்ளச் சாராய சாவிற்கு அரசின்  நல்ல சாராய சாவே மேல்?

சென்ற ஆண்டு வேட்டி கட்டிச்  சென்ற நீதிபதிக்கு ஏற்பட்ட   அவமானத்தை தனக்கு ஏற்பட்டதாக கருதி,  ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுத்த நிலையில்,  கட்டிய வேட்டி கழன்று, குடும்பம் மறந்து, போதையில் மன நோயாளி போல தெருவில் புரளும் தமிழனுக்காக நீதிமன்றம்  குரல் கொடுக்கும் என நினைத்தோம்.  

கள்ளுண்ணாமையை  போதித்த  திருவள்ளுவர் , காந்தி படத்தின் கீழ் அமர்ந்துள்ள நீதிமன்றம்,  'கள்ளச்சாராயத்திற்கு பதில் நல்ல சாராயமாக டாஸ்மாக் சரக்கு  உள்ளது' என  அரசின் “மதுக் கொள்கைக்கு” ஆதரவு கொடுத்து விட்டது போலத் தெரிகிறது.  

டாஸ்மாக்கில் குடிப்பவருக்கு  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதுபோல, எதிர்காலத்தில் மதுவால் இறப்பவரின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டாலும் ஆச்சர்யபடத்தேவை இல்லை. மேலும் அவர் தம்  வாரிசுகளுக்கு அரசு வேலை உறுதி என்று  சொல்லப்படும் என்ற அளவிற்கு மது போதையின் வருமானத்தில் அரசு மிதக்கிறது. 

பள்ளி, கல்லூரி  மாணவர்களை அரசின் ஆதரவு பெற்ற  கள்ளுக்கடையின்  பக்கம் வர  “ புரட்சி”   செய்த  தமிழக அரசு,  மதுவால் வருமானம் பார்க்க,  நடுநிலையாக செயல்பட வேண்டிய  நீதிமன்றமோ,  "அரசின் மதுக் கடை  மூடப்பட்டால்  கள்ளச்  சாராயம் பெருகும்!"  என்று சொல்லி  நிம்மதியை இழக்க வைத்துள்ளது.

தவறு செய்யும் ஆளும் அரசை திருத்துவது  இரண்டே  பிரிவினர்தான்.  அதில் முதன்மையானது   நேர்மையான மக்களின் குரலாக இருக்கும் நீதிமன்றம்;  மற்றொரு பிரிவினர் தேர்தலில் வாக்குசீட்டை  பயன்படுத்தி  ஆட்சியாளர்களை வீட்டுக்கு விரட்டும் பொதுமக்கள்.  அதே சமயம் நீதிமன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நாட்டில் போலீஸ், ராணுவத்தை விட ஏன் ஆளும்  கட்சிகளை விட நீதிமன்றங்களை மக்கள்  அதிக அளவு மதிக்கின்றனர்.

இந்த நாட்டில் தீவிரவாதிகளால் செத்துப்போனவர்களை விட,  மதுவால் செத்துப்போனவர்கள்  அதிகம் . மதுவால் நடக்கும் குற்றச் செயல்கள் அதை விட அதிகம். 

கள்ளச் சாராய சாவிற்கு அரசின்  நல்ல சாராய சாவே மேல்?

உயிர் காக்க, கட்டாய ஹெல்மெட் சட்டம் என  ஒரு மாதத்தில் தீவிரமாக அமல்படுத்தி  கடுமை காட்டும் நீதிமன்றம்,  உயிர் எடுக்கும் மது மீது காலக்கெடு  விதிக்காதது  ஏன்? மும்பை நீதிமன்றம்,  மகாராஷ்டிர அரசின் மதுவை எதிர்த்து கேள்வி கேட்டது மறக்க கூடாத ஒன்று. 

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்றால்,  மது விலக்கு போலீசார் வேலை செய்யாமல் இருக்கிறார்களா? டாஸ்மாக் சரக்கு உள்ளபோது தீவிரமாக கள்ளச் சாராயத்தை தடுக்கும் போலீசார்,  டாஸ்மாக் அகற்றப்பட்டவுடன் வெளிநாடு சென்று விடுவார்களா? 7000 டாஸ்மாக் கடைகளுக்கும்  போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடிந்த அரசால்,  கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாதா? கள்ளச் சாராயம் ஒழிக்க ஹெல்மெட் சட்டம் போல  தனியாக சட்டம் கொண்டு வரலாமே.

கள்ளச் சாராயத்திற்கு மாற்றாக மதுக் கடைகள் என்றால் நாளை கஞ்சாவிற்கு மாற்றாக இதர போதைப் பொருளுக்கு மக்கள் அடிமையானால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?  அரசின் டாஸ்மாக்   கடைக்கு நேரத்தைக் குறைக்க அரசுதான் தீர்வு காண வேண்டும் எனச் சொல்லும் நீதிமன்றம்,  ஹெல்மெட்டிற்கு மட்டும் ஏன் காலக்கெடு விதித்தது?  கள்ளச் சாராயத்தை தடுக்க வேண்டியதும் அரசின் கடமைதானே. அதில் மட்டும் நீதிமன்றம் கவலைப்படுவது ஏன்?

கள்ளச் சாராய சாவிற்கு அரசின்  நல்ல சாராய சாவே மேல்?

இரண்டு, மூன்று மணி நேரம் கடைத் திறந்தால்  கடைகளில்  கூட்டம் கூடிவிடுமே என்று கவலைப்படும் நீதிமன்றத்திற்கு,  டாஸ்மாக் சரக்கால் செத்துப்போனவர் வீட்டில் கூடும் கூட்டமும்,  மதுவால் நோயாளியாகி மருத்துவமனைகளில் கூடும் கூட்டமும் தெரியாதா?

மதுப் பிரச்னைக்கு நேரடி தீர்வு இல்லை என்கிற நீதிமன்றம், கேரளாவை மறந்து விட்டதா?  அதிகப்படியான  மது அருந்துவோர் உள்ள  கேரளாவில்,  மதுக்கடைகளுக்கு தடை விதித்தபின் அங்கு யாரும் வாழாமல் போய்  விட்டார்களா, அரசை நடத்த முடியாமல் முதல்வர் பதவி விலகி விட்டாரா? 

கள்ளச் சாராய சாவிற்கு அரசின்  நல்ல சாராய சாவே மேல்?

நிவாரணம் கிடைக்க சாலையில் போராடினால், போலீஸ் தடியடியுடன், நீதிமன்றம் சிறையில் தள்ளுகிறது.  மக்களுக்கான  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், 'மது வழக்கு'  என்றாலே  நீதிமன்றம்  'மது வழக்கை  விலக்கு'  என்று  ஒதுங்குவது போலப்  பேசுவது ஏன்?

தற்போது குடிக்கும் குடிமகன்களை  நினைத்து,  குழந்தைகள் போல பிடிவாதம் செய்வார்கள் என்று கவலைப்படும் நீதிமன்றம்,  குழந்தைகளே குடிக்க டாஸ்மாக் வருவதைப்பற்றி கவலைப்படாமல்  இருக்கிறதே?

தெரியாமல் நடக்கும் விபத்திற்கு இழப்பீடு வழங்குவது போல குடிப்பவர்கள்  சாவார்கள் எனத் தெரிந்தே மதுவிற்கும் அரசை, மக்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடுமா?

மதுவின் மூலம் அரசுக்கு வருமானம்  வருவதைப்  பற்றி நீதிமன்றம்  கவலைப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டால் நீதிமன்றத்தால்  மக்களின் நிம்மதி என்றும் நிலைக்கும்.

போதை தரும்  சாராய  விற்பனையை  அரசின் மதுக் கொள்கை என்று சொல்லும் நீதிமன்றத்தில் உள்ள படத்தில் காந்தி சிரிக்கிறார் ......நாம்?.

- எஸ்.அசோக்