Published:Updated:

ஆசிரியர்களின் போதைப் பாடம்!

ஆசிரியர்களின் போதைப் பாடம்!
ஆசிரியர்களின் போதைப் பாடம்!

ஆசிரியர்களின் போதைப் பாடம்!

ஆசிரியர்களின் போதைப் பாடம்!

ரு மாதம் முன்பு சத்தீஸ்கர் மாநிலம், கொரிய மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் சிவ்பாரன் என்பவர் பள்ளிக்கு மது அருந்தி போதையில் வந்ததுமல்லாமல், அவர் போதையிலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது கரும்பலகையில் எழுதிய ஆசிரியர் டாறு பியோ (daaru piyo) என எழுதி உள்ளார். டாறு பியோ என்றால் மது அருந்து என அர்த்தம். அதை மாணவர்களிடம் வாசிக்குமாறும் கூறி உள்ளார் என்ற பத்திரிகை செய்தியின் அதிர்ச்சி விலகும் முன், மற்றுமொரு சம்பவம் அதுவும் நமது தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

ராமநாதபுரம், கீழக்கரை அருகே லெட்சுமிபுரம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வந்து பாடம் நடத்துவதாக, மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், தினமும் மது அருந்திவிட்டு வந்து பாடம் நடத்துகின்றனர். கழிப்பறையில் போடும் மது பாட்டில்களை மாணவர்களை சுத்தம் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு, மரியாதையும் காலப்போக்கில் மறைந்து விடும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை பெரிதும் மதிக்க வேண்டும் என, குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது வழக்கம். ஆனால், படித்த ஆசிரியர்களே இவ்வாறு பண்பு தவறி நடப்பது, பெற்றோர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அறிவை, ஒழுக்கத்தை, நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே, சராசரிக்கும் கீழான மனநிலையில், பண்பின்றி நடந்துகொள்வதை, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு குழந்தையையும், தங்களது பிள்ளைகளாக பாவித்து, கல்வி கற்றுத்தரும் உண்மையான ஆசிரியர்களுக்கு, இதுபோன்ற சிலரால், பெருத்த அவமானமே ஏற்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவர்களை போன்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற சம்பிரதாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இத்தவறுகளை தொடராமல் தவிர்ப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது, சமுதாயத்தில் மதிக்கப்படும் உன்னதமானது. எதிர்கால சமுதாயத்தை, நல்லவிதமாக உருவாக்கும் கடமை உள்ளது. மாணவர்கள் தவறு செய்தால், அது, பக்குவம் இல்லாத, அவர்கள் வயதின் இயல்பு. தேவையெனில், அவர்களுக்கு கவுன்சிலிங் தரலாம். அனுபவம், முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்களே இதுபோல் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது மிகவும் தவறானது.

தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதனால், மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்கும் நிலையில் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இவர்களைப் போன்ற ஒரு சில ஆசிரியர்களால் மற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவது அதைவிட வருத்தமான விஷயம் வேறேதும் இல்லை.

ஆசிரியர்களின் போதைப் பாடம்!

ஒவ்வொரு மாணவனும், மாணவியும் ஒரு நாளில் அதிகபட்சமான நேரத்தை, அதாவது எட்டு மணி நேரத்தை செலவிடுவது ஆசிரியர்களுடன் மட்டுமே. அந்த நேரத்தை ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்களோ அதில்தான் மாணவர்களின் எதிர்காலமும் அடங்கியுள்ளது. ஆசிரியர்கள் நல்லமுறையில் நடந்து கொண்டால் மாணவர்களும் அதை பின்பற்றுவர்கள் என்பது தான் உண்மை. அதை தவிர்த்து ஆசிரியர்களே மது அருந்தி பள்ளிக்கு வந்தால் அதை பார்க்கும் மாணவனும் அந்த செயலை செய்ய தயங்கமாட்டான் என்பதை இந்த தவறிழைக்கும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டது. சமீபத்தில் பள்ளி மாணவி போதையில் சாலையில் தள்ளாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு சம்பவத்தில், இளைஞர் கூட்டம் சிறுவனுக்கு மது கொடுத்து, அதனை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 'மது' என்னும் அபாயகரமான பழக்கம் மாணவர்கள் வாழ்க்கையில் உட்புகாமல் இருக்க ஆசிரியர்கள் அவர்களை சரியாக வழிநடத்திடவேண்டும்.

கல்விக் கண் திறந்த காமராஜர் வாழ்ந்த தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு நிலைமையா, ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனை பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?''

''உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ… அப்படியா... சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து 'மதிய உணவுத திட்டத்தை' உடனே அமல்படுத்துங்கள் என்றார்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்ட காமராஜர் திறந்த பள்ளிக்கூடங்களின் நிலைமை இன்று தலைகிழாய் உள்ளது.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதுபோன்ற ஒழுங்கீன ஆசிரியர்கள் மீது, பள்ளி கல்வித்துறை தயவு தாட்சண்யமின்றி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அப்சர் சையத்

அடுத்த கட்டுரைக்கு