Published:Updated:

மூங்கில் மூச்சு!

சுகா

மூங்கில் மூச்சு!

சுகா

Published:Updated:
##~##

சிட்டி இங்கிலீஷ் நர்ஸரி ஸ்கூலில் இருந்து, லக்ஷ்மி தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு நாய்க்கும் ஒரு சிறுவனுக்குமான உறவைச் சொன்ன அந்தப் படத்தின் பெயர், 'மோதி எங்கள் தோழன்’. நாய்களின் மீதான பிரியம் அப்போது இருந்துதான் எனக்கு வந்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில், எங்கள் வீட்டில் நாய் இல்லை. ஆச்சியிடம் நாய் வளர்க்கலாம் என்று சொன்னபோது, 'இருக்கிற நாய்ங்க போதாதுன்னு, இன்னொரு நாய் வேணுமாக்கும்?’ என்று எடக்குமடக்காகச்  சொன்னாள். ஆச்சி காலத்துக்குப் பிறகு, எங்கள் வீட்டில் இன்று வரை நாய்கள் இல்லாமல் இல்லை. சொல்லிவைத்த மாதிரி எங்கள் வீட்டின் எல்லா நாய்களின் பெயரும் 'லியோ’. முதலாம் ஜார்ஜ் மன்னர், இரண்டாம் ஜார்ஜ் மன்னர்போல முதலாம், இரண்டாம், மூன்றாம் லியோக்கள் எங்கள் வீட்டை ஆண்டார்கள்.

மூங்கில் மூச்சு!

லேப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்கள்தான் எங்கள் வீட்டு லியோக்கள். விருந்தோம்பலில் லேப்ரடார் வகை நாய்களை அடித்துக்கொள்ள வேறு நாய்கள் கிடையாது. வேண்டாதவர்கள் நம் வீட்டுக்கு வந்தாலும், பழைய பகை எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், 'வாங்க வாங்க’ என்று இன்முகம் காட்டி வரவேற்று, அடுக்களைக்கே அழைத்து வந்துவிடுவார்கள். 'வாலைக் குழைத்து வரும் நாய்தான், அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா’னு பாரதியார் நம்ம வீட்டு நாயைப் பாத்துத்தான்டே பாடிஇருக்காரு!’ என்பார் சுந்தரம்பிள்ளை பெரியப்பா.

பார்ப்பதற்குக் கறுப்பாக, முரட்டு உருவம்கொண்ட லியோ அவ்வளவு சாதுவாக வளர்ந்ததற்கு அதன் உணவுமுறையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆம்! அதுவும் எங்களைப்போல சைவமாகவே வளர்ந்தது. விரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காத அளவுக்கு சைவம். எங்கள் வீட்டுக்கு வருபவர்களில் லியோ வுடன் நெருங்கிப் பழகாத மனிதர் களே இல்லை. அது இறந்த அன்று அழுதுகொண்டு இருந்த என்னுடன் சேர்ந்து நண்பன் குஞ்சுவும் கதறி அழுதபடி சொன்னான், 'வாள்க்கைல நான் தொட்டுப் பாத்துப் பளகுன ஒரே நாயி செத்துப்போச்சேல!’

மூங்கில் மூச்சு!

அம்மன் சந்நிதியின் நடு சென்டரில் 'செக்கடி’ என்று ஓர் இடம் உண்டு. ஒரு காலத்தில் அங்கு செக்கு வைத்து எண்ணெய் ஆட்டி எடுத்திருக்கிறார்கள். அதனால் செக்கடி. அங்கு யார் வீட்டிலோ ஒரு நாட்டு நாய் வளர்த்தார்கள். அதற்குப் பெயரே 'செக்கடி’தான். நேரம் காலம் இல்லாமல், தோன்றும்போது எல்லாம் செக்கடி அம்மன் சந்நிதியில் உலா வரும். அணில் சைஸுக்கு தூரத்தில் அது புள்ளியாகத் தெரியும்போதே, அந்தச் சமயத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கும் பிராமணப் பையன்கள் அனைவரும் நொடிப் பொழுதில் மாயமாக மறைந்து விடுவார்கள். இத்தனைக்கும் மேட்ச் முடிய ஒரே ஒரு ரன்தான் பாக்கி இருக்கும். தன் வீட்டு அழிக்குள் ஒளிந்து நின்றபடி குஞ்சு குரல் கொடுப்பான். 'நானேஷ§, செக்கடி போய்ட்டா?’

'எனக்கெப்பிடில தெரியும்? ஒரு அரை மணி நேரம் களிச்சுப் பாப்போம்’ - எதிர் வீட்டு அழிக்குள் இருந்து நானேஷின் குரல் பதிலாக வரும்.

லியோ, செக்கடி போன்ற நாய்களுடன் நாய்களுக்கான பொதுப் பெயரான 'மணி’ போன்ற பல நாய்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் வித்தியாசமான பெயருடன் நான் பார்த்த நாய் 'ப்ரூஸ்லீ’. மனகாவலம்பிள்ளை மாமா வீட்டு நாயின் பெயர்தான் அது. தரையைத் தொட்டபடி நீளமாக இருக்கும் டேஷ§ன்ட் வகை நாயான அதை நாங்கள் ரயில் நாய் என்போம். தீவிரமான தமிழ்ப் பற்றாளரான மனகாவலம்பிள்ளை மாமா, தன் வீட்டு நாய்க்கு 'ப்ரூஸ்லீ’ என்று பெயர்வைத்தது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், அதற்கு மாமா சொன்ன விளக்கம் நியாயமாக இருந்தது. 'மருமகனே, எனக்கு இந்த நாய்க்கு முத்தையான்னு நல்ல தமிள்ல பேரு வைக்கணும்னுதான் ஆச. பெறகு ஒங்க அத்த, அதுக்கும் எனக்கும் சேத்து சோத்துல வெஷம் வெச்சிருவா!’

மூங்கில் மூச்சு!

'ஏன் மாமா?’

'வே, அது என் மாமனாரு பேருல்லா. ப்ரூஸ்லீன்னா பிரச்னை இல்ல பாரும். நம்ம ஊர்ல அந்தப் பேர்ல ஆளு கெடையாது. தாராளமாக் கூப்பிடலாம். ஏசலாம். வாரியலக் கொண்டுகூட அடிக்கலாம். கேக்கதுக்கு நாதியில்லல்லா. என்ன சொல்லுதேரு?’

சென்னைக்கு நான் கிளம்பும்போது, பெற்றோரைப் பிரிவதற்கு இணையாக எங்கள் வீட்டு நாய்களைப் பிரியும் சோகமும் இருந்தது. ஆனால், இங்கு 'வாத்தியார்’ பாலு மகேந்திரா அவர்கள் வீட்டு நாய்கள் எனக்கு ஆறுதல் அளித்தன. எங்கள் வீட்டு 'லியோ’ போலவே, வாத்தியார் வீட்டிலும் லேப்ரடார் வகையைச் சேர்ந்த 'பீட்டர்’ என்னுடன் பிரியமாகப் பழகினான். பீட்டரின் மறைவுக்குப் பிறகு, சிலநாட்கள் வாத்தியார் வீட்டில் நாய்கள் இல்லாமல் இருந்தன. சாலிகிராமத்துக் குப்பைத்தொட்டி ஒன்றில் நான் கண்டெடுத்த ஒரு நாட்டு நாய், வாத்தியார் வீட்டின் செல்லப் பிள்ளை ஆனது. 'மூன்றாம் பிறை’ சுப்பிரமணியின் பெயரை அதற்கு வைத்து, 'சுப்பு’ என்று இன்றைக்கும் அதை வளர்த்து வருகிறார்கள், வாத்தியாரும் அகிலா அம்மாவும். நான் போகும்போது எல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு கொஞ்ச வரும். 'நீ பண்ணின வேல. பாரு இவன விட்டுட்டு என்னால எங்கெயும் போக முடியல!’ - செல்லமாகக் கடிந்துகொள்வார்கள் அகிலா அம்மா.

சுப்புவுக்கு ஜோடியாக 'வள்ளி’ என்ற நாட்டுப் பெட்டை நாயும் வாத்தியார் வீட்டில் இப்போது உள்ளது. தாம் வளர்க்கும் நாய்கள் போக, பிறத்தியார் வீட்டு நாய்கள் மீதும் வாத்தியார் தம்பதிக்குப் பிரியம் உண்டு. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் வெளிநாட்டுக்குப் போகும்போது, அவர்கள் வீட்டு டேஷ§ன்ட் வகை நாயான 'கிவி’ வாத்தியார் வீட்டில்தான் இருக்கும்.

சாலிகிராமத்தின் சாய் நகரில், தினமும் காலையில் அரை டிராயர் போட்ட ஒரு நடுத்தர வயதுக்காரர் இரண்டு நாய்களை ஷ்ணீறீளீவீஸீரீ அழைத்துச் செல்வார். இரண்டில் ஒன்று, அப்படியே எங்கள் வீட்டு 'லியோ’ வைப் பார்ப்பதுபோலவே இருக்கும். ஒரு நாள் எங்கள் வீட்டை அவர்கள் கடக்கும் போது, ஆசையை அடக்க முடியாமல் அந்த லேப்ரடார் நாயைப் பார்த்து, மெதுவான குரலில் 'டேய், ஒன் பேரு என்னடா?’ என்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் அந்த நாய் நகர்ந்து சென்றுவிட்டது. மற்றொரு நாயுடன் முன்னால் சென்றுகொண்டு இருந்த அதன் உரிமையாளரின் காதுகளில் நான் கேட்டது விழுந்துவிட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்து முறைத்துக்கொண்டு என் அருகில் வந்தார். வீட்டுக்குள் ஓடிவிடலாமா என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, அந்த நாயை அழைத்தார். 'லக்‌ஷா, சார் கேட்டதுக்குப் பதிலே சொல்லாமப் போயிட்டு இருக்கே. அறிவிருக்கா ஒனக்கு? இடியட். ஸாரி கேளு அவர்கிட்டே’ என்றார். அந்த நாய் 'லக்‌ஷா’ என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது. எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. 'ஐயோ, பரவாயில்ல சார். நீ போயிட்டு வா லக்‌ஷா’ என்று அதன் தலையைத் தடவிக் கொடுத்தேன். மறுநாளில் இருந்து வீட்டு வாசலில் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் என்னைப் பார்த்துவிட்டால், லேசாகச் சிரித்த படி செல்ல ஆரம்பித்தது லக்‌ஷா.

நாய்களைக் குழந்தைகள்போல வளர்க்கும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். நாய் வளர்ப்பில் பிரியம் இல்லாத மற்றவர்க்கு அவர்களைப் பார்த்தால், வேடிக்கையாக, எரிச்சலாகக்கூடத் தோன்றும். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு கால்நடை மருத்துவர் எனது நண்பர். நாய்களின் வகைகள் குறித்து அவர் சொல்லி நிறையத் தெரிந்திருக்கிறேன். ஒருநாள் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் தன் நாயை அழைத்துக்கொண்டு வந்தார். அங்கிருந்து செல்லும் வரையிலும் அவர் மருத்துவரைப் படாதபாடு படுத்திவிட்டார். பொதுவாக, ஊசி போடும்போது கால்நடை மருத்துவர்கள் நாயின் வாயைக் கட்டுவார்கள். அந்த மனிதர் அதற்கு மறுத்துவிட்டார். 'நான் சொன்னா அவன் கேட்டுக்குவான் சார். வாயெல்லாம் ஒண்ணும் கட்ட வேண்டாம்.’ மெதுவாக அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 'சார், காலையில நான் தூங்கி எந்திரிக்கும்போது ரெண்டு நாய்களாவது என் காலடியில இருக்கணும். அதுகளப் பாத்துக் கிட்டே முழிச்சாதான் அன்னிக்கு நாள் எனக்கு விளங்கும்’. குழந்தைகள் இல்லாத அந்தப் பணக்கார மனிதர் சொல்லும் போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர் சென்ற பின் மருத்துவர் சொன்னார். 'சொன்னா நம்ப மாட்டீங்க சார். அவரோட நாய்க்கு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்தது. மும்பைலதான் அதுக்கான மருந்து இருக்குன்னு சொன்னவுடனே, ஃப்ளைட்ல நாயைக் கூட்டிக்கிட்டு மும்பைக்கு போய் ஆபரேஷன் பண்ணிட்டு வந்தாரு!’

தந்தை பெரியார் அவர்கள் பேசும் மேடையிலேயே அவரது செல்ல நாயும் இருப்பதைப் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து நண்பர் இயக்குநர் அழகம்பெருமாளும் இப்படித்தான். தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான 'பாண்ட்’டைப் பிரிந்து இருக்க மாட்டார். நாகர் கோவிலில் இருந்து தொலைபேசியில் பேசுவார். 'நாரோவில்ல இருந்து பேசுகேன். வேற ஒண்ணும் இல்ல. அம்மையைப் பாக்க வந்தேன். இந்த பாண்டுப் பயலும் மெட்ராஸ்ல போரடிச்சுக்கிட்டுக் கெடந்தான். அதான் ஒரு அளுத்து அளுத்தி இங்கென வந்தாச்சு!’ அவர் வீட்டுக்கு நான் செல்லும்போது எல்லாம் பாண்டுடன் நான் பேசத் தவறுவதே இல்லை. அதுவும் 'ஏ, பாண்டு. எப்பிடிடே இருக்கே?’ என்று நான் எங்கள் ஊர் பாஷையில் பேசுவது அழகம்பெருமாளுக்கும் அவரது துணைவியாருக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். தொலைபேசியில் பேசும்போதும் 'யோவ், பாண்டு சும்மா இருக்கானா?’ என்று விசாரிக்காமல் இருப்பது இல்லை.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் என்னைப் போன்ற நாய்ப் பிரியர்களுக்கு இப்படி அடுத்தவர் வீட்டு நாய்களைக் கொஞ்சி மகிழ்வதைத் தவிர வேறு வழி இல்லை. சென்னையில் நாய் வளர்ப்பவர்களைப் பார்த்து பொறாமைகொள்கிறது மனம். அதுவும் சாலிகிராமத்தில் ஒரு மனிதர், வீடு நிறைய நாய்கள் வளர்க்கிறார். சொந்த வீட்டுக்காரர். கொடுத்துவைத்தவர். நாய்களின் சத்தம் தாங்க முடியவில்லை என்று புகார் சொன்ன பக்கத்து வீட்டுக்காரர்களிடம், 'நீங்க வேணா வேற வீட்டுக்குப் போங்க’ என்று சொல்லிவிட்டாராம்.

பொதுவாக, முன் பின் அறிமுகம் இல்லாத யாருடனும் நானாகப் போய்ப் பேசத் தயங்குபவன் நான். ஆனால், வீதிகளில் நடக்கும்போது எதிரே நாயை அழைத்துக்கொண்டு யார் வந்தாலும், கூச்சப்படாமல் பேசிவிடுகிறேன். அது நாட்டு நாயாக இருந்தாலும் சரி, அழகிய ஆபத்தான பொமரேனியனாக இருந்தாலும் சரி. டாபர்மேன் மற்றும் எனது பிரியத்துக்குரிய லேப்ரடார் என எந்த நாயாக இருந்தாலும், ஒரு நிமிடம் நின்று அதைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சிய பிறகே, அந்த இடத்தைவிட்டுக் கடந்து செல்கிறேன்.

மூங்கில் மூச்சு!

என்னைப்போலவே என் மகனும் நாய்ப் பிரியனாக இருக்கிறான். சென்னையில் எங்கள் வீட்டில் நாய்கள் இல்லாதது அவனுக்குப் பெரும் குறையாக இருக்கிறது. நாய்கள் வளர்க்கும் அவனது நண்பர்களைப்பற்றி, அவன் என்னிடம் சொல்லாத நாட்களே இல்லை எனலாம்.

நாமும் நாய் வளர்க்க வேண்டும் என்று அவன் சொல்லும்போது எல்லாம் 'அதுக்கெல்லாம் சொந்தமா ஒரு தனி வீடு இருக்கணும்டா. அப்பொதான் நாய் வளக்க சௌகரியமா இருக்கும்’ என்று சொல்லிச் சமாளிப்பேன். சென்ற மாதம் எங்கள் ஹவுஸ் ஓனர் வீட்டில் ஒரு நாய் வாங்கி வளர்க்க ஆரம்பித்துவிட் டார்கள். அதுவும் அழகான பிஸ்கட் கலர் லேப்ரடார். சிறிது நேரம் அதனுடன் சென்று விளையாடிவிட்டு வந்த என் மகன் சொன்னான், 'சீக்கிரமா சொந்த வீடு வாங்குப்பா. நாய் வளக்கணும்!’

- சுவாசிப்போம்...