Published:Updated:

''நானும் விகடனும்''

இந்த வாரம் : தாமரைபடங்கள் : பொன்.காசிராஜன்

''நானும் விகடனும்''

இந்த வாரம் : தாமரைபடங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

''எந்தக் குழந்தைக்கும், மழலையர் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி வரை தவிர்க்க முடியாத ஒரு கேள்வி... 'பெரிசானா நீ என்னவாகப் போற?’ 'நான், கலெக்டர் ஆவேன்’ என்பது என் பெற்றோரின் கனவு. மிகச் சிறு வயதில் அதை வகுப்பறைகளில் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லியது நினைவில் இருக்கிறது. பின்பு, எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு, புத்தகங்களால் வீழ்த்தப்பட்ட பிறகு, ரகசியமாக லட்சியம் மாறியது. பள்ளி நூலகங்கள், வட்டார நூலகங்கள் பழகிய பிறகு, புத்தகப் பித்து தலைக்கேறி, புதிதாகப் பேச்சு வந்த குழந்தை வாய்க்கு வந்ததை எல்லாம் பிதற்றுவது போல, கைக்குக் கிடைத்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு, 'கலெக்டர்’ கனவு, 'லைப்ரரியன்’ கனவாகத் திரிந்தது. புத்தகங்களை வாரி மேலே கொட்டிக்கொண்டபோது 'ஆனந்த விகடன்’ என்ற ஓர் அமுத சுரபியின் அறிமுகம் கிடைத்தது.

''நானும் விகடனும்''

விகடனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வாசகி, உறுப்பினர் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நினைவு தெரிந்த நாளில் இருந்து விகடன் படித்து வருகிறேன். நான் இரண்டாவது தலைமுறை. என் அம்மா விகடனின் தீவிர வாசகி. பயிற்சிப் பள்ளியில் படிக்கிற காலத்தில், ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் எனப் பல்வேறு சமயங்களில் விகடன் படித்ததை எங்களிடம் சொல்வார். அம்மா எழுத்தாளர் லட்சுமியின் ரசிகை. 'விகடன் என்றாலே நினைவுக்கு வருவது அட்டைப் படத்தில் கண்ணைக் கவரும் நகைச்சுவைச் சித்திரங்கள்தாம்’ என்பார். 60 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்து, கண்ணைவிட்டு அகலாத சில நகைச்சுவைச் சித்திரங்களை அண்மையில்கூட விவரித்தார். அப்பாவுக்கு அதில் வரும் நாடகங்களும், தலையங்கங்களும் நெஞ்சை விட்டு நீங்காதவை.

இப்படி வீட்டில் தலைமுறை தாண்டி என்னை வந்தடைந்த விகடன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு இயல்பானது. நிகழ் கால விகடன்களைப் படிப்பதோடு அல்லாமல், இவர்கள் சொல்லும் பழைய விகடன்களை அதே பழைய மணத்தோடு எப்படியாவது பெற்று, படித்துப் பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆவல் தொண்டையை அடைக்கும். தேவன், கல்கி, மெரீனா, கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்’ என்று நினைக்கும்போதே கண் கிறங்கும்.

''நானும் விகடனும்''

உண்மையில் விகடன் என்பது, எனக்கு வாழ்வின் அங்கம். வீட்டில் விகடன் வாங்கத் தொடங்கிய பிறகு, ஒரு வாரம்கூட விட்டுப் போகாமல் படித்து வருகிறேன். வியாழன் மாலைகள் பள்ளியில் இருந்து ஓடி வந்து, சீருடை மாற்றாமல், புத்தகப் பையை அப்படியே எறிந்துவிட்டு, விகடனை அள்ளிக்கொண்டு கட்டிலில் விழுந்து படிக்க ஆரம்பித்தால், முடித்து விட்டுத்தான் மறு வேலை. அதுவும் நான்தான் முதலில் படிக்க வேண்டும். என்றைக்காவது அப்பா ஏதாவது சூழ்நிலை காரணமாக வாங்காமல் வந்தார் என்றால், 'இப்பவே போய் வாங்கிட்டு வாங்க’ என்று நச்சரிப்பேன். அப்பாவும் போவார். அம்மா எரிச்சல்பட்டு, 'நல்ல அப்பா... நல்ல பொண்ணு’ என்பார்.

ஆரம்பத்தில் இருந்தே கதைகள்தாம் என்னைப் பெரிதும் ஈர்த்தன. எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை கொண்டதில் இருந்தே, ஏராளமான கதைகள் எழுதிக் குவிப்பவளாகத்தான் என்னைக் கற்பனை செய்துகொள்வேன். விகடன் என்பது 'கதை ஸ்பெஷலிஸ்ட்.’ சுஜாதா, பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, அனுராதா ரமணன், வாஸந்தி, ப.கோ.பிரபாகர், சுபா, இந்திரா சவுந்தரராஜன், ஸ்டெல்லா புரூஸ், பொன்னீலன் முதல்... இன்றைய வண்ணதாசன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பாஸ்கர் சக்தி, க.சீ.சிவகுமார் வரை... எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்!

இந்தக் கதைகளை எல்லாம் படித்துப் படித்து தான் இது பிடிக்கிறது, இது பிடிக்கவில்லை, இது இவரின் பலம், இது பலவீனம், இன்னார் இப்படித்தான் எழுதுவார் என்றெல்லாம் வகை பிரித்து, அக்கு வேறு ஆணி வேறாக அலசும் கலை கைவந்தது. இங்கே இருந்துதான் நான் உருவானேன் என்று சொன்னால், அது மிகை இல்லை. படித்துப் படித்து, நிரம்பி வழிந்து, வைத்துக்கொள்ள முடியாமல் துப்ப முயலும்போது தான் அது எழுத்தாகிறது!

கணையாழி போன்ற இலக்கிய ஏடுகளில் எழுதிக் கொண்டு இருந்தவர்களை அடையாளம் கண்டு அழைத்து வந்து, வணிக ஏடு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி மகுடம் சூட்டி யது விகடன். சுருங்கச் சொன்னால், தேர்ந்த எழுத்தாளர்களை மாற்றான் தோட்டத்தில் இருந்தும் அழைத்து வந்ததோடு அல்லாமல், வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களை வளர்த்து எடுத்தது விகடன்.

இந்தக் கலையைச் சற்றே விரிவுபடுத்திப் பிறந்ததுதான் 'மாணவ நிருபர் திட்டம்’ என்று நினைக்கிறேன். எழுத்தாற்றல் அரும்பும் நிலையிலேயே அடையாளம் கண்டு அழைத்து வந்து, பயிற்சி கொடுத்துப் பயன்படுத்துதல் என்ற அந்தத் திட்டம், என் போன்ற சாதாரணர்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம்!

ஆம், விகடனுடனான என் தொடர்பு, வாசகி என்ற இடத்தில் இருந்து விகடன் குடும்ப உறுப்பினர் என்ற நிலைக்கு மாறியது, நான் விகடன் மாணவ நிருபரான 80-களின் இடைப்பட்ட காலம்தான். முதலாம் ஆண்டு நான் நேர்முகத் தேர்வு வரை வந்து தேர்ந்தெடுக்கப்படாமல் போக, மிகுந்த ஏமாற்றமாகி, (வீட்டில் அழுது புரண்டு) அவலச் சுவையோடு ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு ஆசிரியர் பொறுமையாக விளக்கம் தந்து, ஆறுதல் அளித்து எழுதிய மயிலிறகுக் கடிதம் இப்போதும் என் வசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு எப்போது வரும் என்று காத்திருந்து, பங்கெடுத்து வெற்றி பெற்றுத் தேர்வான போது, ஆசிரியரின் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. ஆனால், அந்த வெற்றி இன்னும் அவலச் சுவையுடையது.

என் பொறியியல் தேர்வை எழுதாமல், நிருபர் தேர்வுக்கு சென்னை வந்துவிட்டேன். பொறியியல் ஆண்டுத் தேர்வு எவ்வளவு முக்கியமானது? இதழாளர் ஆவதற்குப் பொறியாளர் மதிப்பெண்ணை இழக்கத் துணிந்தேன். நேர்முகத் தேர்வு முடியும் வரை இறுகிய முகத்தோடு தாக்குப்பிடித்துவிட்டு, பிறகு கண்ணீர் சிந்தினேன். 'தேர்வு இருப்பதைச் சொல்லி, மாற்றுத் தேதி வாங்கி இருக்கலாம்!’ என்று பிறகுதான் உறைத்தது. அதுகூட எனக்குத் தெரியவில்லை. அப்போதுஎல்லாம் முகத்தில் மட்டுமல்ல, மனதில்கூட பால்தான் வழிந்தது.

இத்தனை அப்பாவிகளான பெண்கள் இந்த ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு, உண்மையாகவே சமூகம் என்னும் கடலில் இறங்கித் திரும்பக் கரை சேர முடியும் என்ற தன்னம்பிக்கைப் பெண்களாக மாறிவிடுகிறார்கள் என்பதற்கு நானே ஓர் உதாரணம்!

நான் மாணவ நிருபராகி, இன்றைக்கு 25 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளி விழா! ஆனால், விகடனைப் பொறுத்தவரை நான் இன்னும் மாணவியாகத்தான் இருக்கிறேன். இப்போதும் அதில் கற்றுக்கொள்வதற்கு ஏதேனும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், வடிவமைப்பு, தலையங்கம், தொடர்கள், நகைச்சுவை, துணுக்குகள், திரைப்பட விமர்சனங்கள், ஆளுமைகள்... சொல்லி மாளாது. குறிப்பாக, என்னை அசத்தும் சில கூறுகள் - கதை / கவிதைகளுக்குச் செய்யப்படும் பக்க வடிவமைப்புகள்... படைப்போடு சேர்ந்து பார்க்கும்போது, மனதின் மாய இடுக்குகளில் சில மின் மினிகளைத் தூவிவிட்டுப் போகும் வல்லமை. பார்த்தவுடன் வடிவமைப்புச் செய்தவரின் கையைப் பிடித்துக் குலுக்கத் தோன்றும்.

அடுத்து, சில நிருபர்களின் அபாரமான எழுத்தாற்றல்... ஒரு செய்தியை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அன்று முதல் இன்று வரை விகடனின் பலம் இத்தகைய நிருபர்களின் கைவண்ணத்தில்தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரா.கண்ணன் எழுதிய, பாண்டி, பல்லாங்குழி, கிளித்தட்டு உள்ளிட்ட பழைய விளையாட்டுக்கள் பற்றிய 'சாட் பூட் த்ரீ’ தொடர் இன்று வரை எனக்கு வியப்புதான்.  சமீபத்தில் கி.கார்த்திகேயன் எழுதிய சென்னைச் சேரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைபற்றிய 'கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம்’ தொடர். உடனே, தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்த்தேன். சௌபா, அருள்செழியன், பா.ராஜ நாராயணன், டி.அருள்எழிலன் உள்ளிட்ட பலரின் கைவண்ணங்கள் இன்றைக்குப் புதிதாக எழுத வரும் நிருபர்கள் படித்துப் பயன்பெற வேண்டியவை. பொன்ஸீ / கே.ராஜசேகரின் புகைப்படங்கள், நா.கதிர்வேலனின் திரைத் துறை, ப.திருமாவேலனின் ஈழம், ராஜுமுருகனின் நகைச்சுவை என 'ஸ்பெஷலிஸ்ட்’களின் ஆதிக்கம். ஒரு பகுதியைப் படிக்கும் முன்பு, யார் எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் படிப்பேன்.

விகடனுக்கு வெளியே இருந்தாலும் தேவை ஏற்படும்போது விகடனுடன் பணி புரியத் தவறியது இல்லை. ஈழப் போர் காலகட்டங்களில் இரவு பகல் பாராமல், விகடன் குடும்ப நிருபர்களுடன் இணைந்து பணியாற்றியதை மறக்கவே முடியாது.

''நானும் விகடனும்''

எழுத்தாளர்கள் ஆக பள்ளிப் படிப்பு எதுவும் கிடையாது. தாங்களே உருவாகிக்கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கு நான் சொல்லும் ரகசியம்... 'விகடனை விடாமல் படியுங்கள். வடிவேலு பாணியில்... 'பாடத் திட்டம் இல்லை... ஆனால் இருக்கு. பாடங்கள் இல்லை... ஆனால் இருக்கு. ஆசிரியர்கள் இல்லை... ஆனால் இருக்கிறார்கள்!’ என்று விநோதப் பல்கலைக்கழகம்... விகடன்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக என் வாழ்க்கையில் பிணைந்து இருக்கிறது விகடன். சொந்த வாழ்க்கையிலும்! தியாகுவை நான் பார்க்க, பழக, வாழ்க்கைத் துணையாக விகடன்தான் காரணம் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இப்போதும் எங்கள் இருவரின் பணிகளுக்கும், சமூக நோக்கத்துக்கும், லட்சியங்களுக்கும் வெளிச்சம் போடத் தவறுவதே இல்லை.

எழுதிக்கொண்டே போகலாம். நானே விகடன்காரியாக இருப்பதால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது!''