Published:Updated:

என் ஊர்!

ஊரின்றி அமையாது வாழ்வு!

என் ஊர்!

ஊரின்றி அமையாது வாழ்வு!

Published:Updated:
##~##

'' 'காசா மலையின்
குன்றுகள்
என் நெஞ்சில் இருக்கின்றன.
அதன்
புல்வெளிகள்
என் இமைப்பீலிகளாய் உள்ளன!’

- பாலஸ்தீனத்தின் புகழ்பெற்ற கவிஞன் மகமது தார்விஷின் இந்தக் கவிதையைப் படித்தபோது என் ஊர்தான் மனதில் சித்திரமாக எழுந்தது. பிறகு, எப்போது எல்லாம் இக்கவிதை என் நினைவில் வருகிறதோ அப்போது எல்லாம் என் ஊரின் மீதான காதல், குன்றென என் மனதில் எழும்!'' கவிதை சொல்லி, தன் ஊர் குறித்த நினைவுகளை ரசனையாகப் பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.  

என் ஊர்!

''எங்கள் ஊர் பேர்ணாம்பட்டின் எந்த மூலையில் நின்றாலும் மலை முகடுகளைத் தரிசிக்கலாம். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எங்களைச் சூழ்ந்து இருக்கின்றன. இயற்கையின் உள்ளங்கை எப்போதும் எம்மை ஏந்தியிருப்பது போன்றதொரு உணர்வு. இப்படி பேரரண்களால் சூழப்பட்டு இருப்பதால்தான் ஊரின் பெயர் 'பேர்ணாம்பட்டு’ ஆகியிருக்கிறதோ என நான் நினைப்பேன். 'பெரியண்ணன் பட்டு’தான் இப்படி மருவிவிட்டது என்பார் சிலர். தமிழை யும் உருதுவையும் பேசும் மக்கள் இரண்டறக் கலந்து இருப்பதால் பேர்-நாம்-பட்டு, பேர்ணாம்பட்டு ஆனது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஊர்ப் பெயரின் காரணத்தை அறிவது... ரகசியம் அறிவதன் இன்பம் பயப்பது!

1953-ல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது எங்கள் ஊர் ஆந்திராவுக்குப் போயிருக்க வேண் டியது. ஆந்திராவின் கோரிக்கையைத் தமிழகம் மறுத்ததால் தப்பினோம். எங்கள் ஊரில் நிறைய மசூதிகளும் தர்காக்களும் உண்டு. நகரின் கிழக்கு மூலையில் இருக்கும் நவாப்கான் மசூதி பழமையும் கலைநயமும்கொண்டது. ஒளரங்கசீப் தந்த நிதி உதவியால் ஆர்க்காடு நவாப்புகளில் ஒருவர் அதைக் கட்டியிருக்கிறார். திப்பு சுல்தானும், ஹைதர் அலியும், அன்வர்-உத்-தீனும் படை நடத்திப் போரிட்ட எங்கள் ஊரின் சாலைகளில் நடக்கிறபோது போர்க் களத்தின் மேல் நடக்கும் புராதான உணர்வு வரும். சங்ஜி.கீக்ளே, சங்.பெர்ட்ரம், சங்.எம்.கோல்ட் போன்ற புகழ் பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகள் கட்டிய பள்ளிகள் நூற்றாண்டைக் கடந்து நிற்கின்றன. மரீத் ஹாஜி இஸ்மாயீல் சாகீப் என்பவர் பல பள்ளிகளை 1928-ல் நிறுவி உள்ளார்.

சமூக மாற்றத்துக்கான வேலைகளிலும், பண்பாட்டுச் செயல்களிலும் எங்கள் ஊர் குறை வைத்தது இல்லை. தென்னாட்டு அம்பேத்கர் எனப் புகழப்பட்ட பள்ளிகொண்டா கிருஷ்ண சாமியின் தளபதிகள் பி.பெருமாள், ஜெ.ஜெ.தாஸ் ஆகியோர் வாழ்ந்த ஊர். ஜெ.ஜெ.தாஸ், எங்கள் ஊரில் பெருகி இருக்கும் நூறாண்டுகள் பழமையான தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் முதல் தொழிற்சங்கத் தலைவர். 1948-ல் உதயசூரியன் என்ற பத்திரிகையை நடத்தியவர். இரட்டை மலை சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட 'பட்டியல் இனத்தோர் கூட்டமைப்பு’ அப்போது எங்கள் ஊரில் பலம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. விடுதலைக்கு முன்பே பறையடித்தலை ஒழித்த கதையை, இரட்டைக் குவளைகளை அழித்த கதையை, 'பம்பாய் ஷோ’ போன்ற சூதாட்டங்களைத் தடுத்த கதையை, செருப்பு போட்டு நடந்த கதையை, எங்களூர்ப் பெரியவர்களைக் கேட்டால் சொல்வார்கள். 1965-ல் கிளர்ந்த இந்தி எதிர்ப்புப் போரில் எங்கள் ஊரில் துப்பாக்கி குண்டு வாங்கி வீரமரணம் எய்தியவர்கள் நால்வர். அ.ஜான், சி.முருகேசன், சி.பாகிமுல்லா, அ.வீரன் ஆகியோர். கைதாகி சிறையில் இருந்தோர் 97 பேர். வேலூர் மாவட்டத் திலேயே இதில் முதலிடம் எங்கள் ஊர்தான். மொழிக்காக உயிர் ஈந்த உரம்கொண்டது எங்கள் ஊர்.

என் ஊர்!

பண்டிகை காலத்தில் பார்க்க வேண்டும் எங்கள் ஊரை. எல்லா பண்டிகைகளுமே எல்லாருக்குமானதாக இருக்கும். ஈகைத் திருநாள் நோன்பின் இறுதி யில் வரும் மிட்டாய்ப் பண்டிகையில் இனிப்புகளை ஊரே தின்னும். பக்ரீத் கறிக்கும் அந்த நிலைமைதான். ரஷ்யர்களைப்போல் அளவுக்கு அதிகமாகத் தேநீர் குடித்துக்கொண்டும் மேற்கத்திய நாட்டினர்போல் அசைவ உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டும் உலவும் எம் ஊர் மக்கள், கடும் உழைப்பாளிகள். எங்கள் ஊர் பீப் பிரியாணிக் கடைகள்அ.மார்க்ஸின் கட்டுரையில் இடம் பிடித்தவை.

நானும், கோணங்கியும், கம்பீரனும், யாழன் ஆதி யும், ஸ்ரீநேசனும், ராணி திலக்கும், பொன் சுதாவும் பேசித் திரிந்த எங்கள் ஊர்ச் சாலைகளில் இன்று பல ஊர்களில் இருந்து வரும் இளம்படைப்பாளித் தம்பிகள் என்னோடு சேர்ந்துகொள்கிறார்கள். பன்முகக் கலாசாரம்கொண்ட என் ஊரின் ஆன்மாவுடன் அவர்கள் பேசத் துடிக்கிறார்கள். பீடி வேலை, தோல் பதனிடுதல், வேளாண்மை, காலணி தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடும் எமது உழைக்கும் மக்களைப் படிக்கிறார்கள். தோல் கழிவுகளால் கெட்டுப்போன சில பகுதிகளைக் கடக்கிறபோது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அருமையை உணர்கிறார்கள்.

பழக் காலங்களில் நீங்கள் எங்களூருக்கு வந்தால், எமது ஊரின் தனித்த சுவைகொண்ட சீத்தாப்பழங் களையும், மாம்பழங்களையும் வாங்கிச் செல்லலாம். அடை மழைக் காலத்தில் வருவீராயின் காட்டோ டைகளின் பளிங்கு நீரைக்கொண்ட மசிகம் ஆற்றில் குளிக்கலாம்.

ஊர், மனித உயிர் வாழும் ஊடகம்; பல மனங்கள் சேர்ந்து உருவாகும் தாய்! நீரின்றி அமையாது உலகு... ஊரின்றி அமையாது வாழ்வு. இதை நீங்கள் எப்படியும் பொருள்கொள்ள லாம்!''

படங்கள்: ச.தேவராஜன்