Published:Updated:

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?
மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

ல ஆயிரம் ஆண்டுகள்  கடந்தாலும், இந்தியர்கள் அன்று முதல் இன்று வரை  நம்பிக்கை கொண்டு மன அமைதிக்கு நாடுவது இரண்டு இடங்களைத்தான்.

ஒன்று கோவில் மற்றொன்று வேதகால மகரிஷிகள் தோற்றுவித்த ஜோதிடம். கோவில் நம் மன வலிமையை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த இடம். ஜோதிடம் மன வலிமைக்கு வரும் சோதனைகளை காலத்தால் கணித்து,  கவனமுடன் செயல்பட வைக்கும் ஒரு வழிகாட்டி.

ஆனால் இன்று தொலைக்காட்சிகளில், ஜோதிடம் என்ற பெயரில் எதிர் மறையான எண்ணத்தை வளர்க்கும் செய்திகள் அதிக அளவில் வருவது ஜோதிடம் மீதான நம்பிக்கையை தகர்த்து வருகிறது. 

டாஸ்மாக் சரக்கடித்து நோயாளியாகிப் போன கணவருக்கு சிறப்பு பூஜை, கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் போக சிறப்பு பூஜை, பரிகாரம்  என ஜோதிடப் பரிகாரங்கள் நம் பணத்தையும் பதம் பார்க்கிறது.

குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வரிசையில் மாமியார் எப்போது ஊருக்கு போவார் என ஜோதிடம் கேட்கும் அளவிற்கு ஜோதிடப் பித்தர்கள் அதிகரித்து விட்டனர் நாட்டில். கிரிக்கெட் வெற்றி, தேர்தல் வெற்றி, கல்யாணம், வேலை  என பல வகைகளில் ஜோதிடம் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் ஜோதிடர்களை தேடி அலைகின்றனர்.

நம்மிடம் உள்ள 24 மணி நேரத்தைப் பற்றி நாம்  நினைக்காமல், இரண்டு நிமிடங்களில் சொல்லும் தினப் பலன்களுக்காக தொலைகாட்சியில் தோன்றும் ஆன்லைன் ஜோதிடர்கள் வாக்கிற்காக காத்துக் கிடப்பதை,  நம் மன வலிமைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் நினைக்க வேண்டும்.

ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கையுடன் இருந்தால் பரிகாரம் என்ற பெயரிலும், கல்வியில் நம்பிக்கை கொண்டிருந்தால் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளையும்,  மருத்துவமனைகள் மீது நம்பிக்கை கொண்டால்  அவர்கள் மாடி வீடு கட்டும் வரை நம்மை வீட்டுக்கு அனுப்புவதில்லை என்ற நிலை நிலவுகிறது இன்று.

தமிழகத்தில், பல ஆயிரம் பெண்கள்  திருமணம் என்ற வாழ்வின் இரண்டாம் கட்டத்தை அடைய முடியாமல் போனதற்கு, ஜாதகத்தில் உள்ள கட்டங்களும் காரணம். செவ்வாய், ராகு, நாக தோஷம், பாவ நட்சத்திரம் என பல வகையில் திருமணத் தடைக்கு காரணம் சொல்லப்பட்டாலும், அவை எல்லாம் தெய்வ பலத்தால் தீர்க்கக் கூடியதே. அதை விடுத்து ஜோதிடர்களே பெண்ணின் ஜாதகத்தை பற்றி தவறாக சொல்வதும், தவிர்ப்பதும் பெண்கள் மீதான ஒரு வகை வன்முறையே. 

திருமணப் பொருத்தம் என்ற பெயரில் ஜோதிடர்கள்  செய்யும் பாவத்திற்கு அவர்கள்  எங்கு போனாலும் பரிகாரம் கிடைக்காது. அந்த அளவிற்கு அவர்கள் பிறந்த நட்சத்திரங்கள் பற்றி தவறான பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து நட்சத்திரங்களும் கடவுளால் படைக்கப்பட்டதாகச் சொல்லும் போது ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் எப்படி குறைவாக மதிப்பிட முடியும்?.

இதர நட்சத்திரத்தில் கல்யாணம் ஆனவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வருவதில்லையா?

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் “சிரஞ்சீவி ராம பக்த  அனுமன்”. அப்படிப்பட்ட பெருமை கொண்ட மூல நட்சத்திரம் கொண்ட பெண்ணை திருமண செய்ய சிலர் தேவையற்ற வீண் பிரசாரம் செய்கின்றனர். அதிலும் ஆண்  மூலம் அரசாளும்(எத்தனை ராஜாக்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்களோ?? ). 'மூலத்து மாமியார் மூலையிலே’ என எதுகை மோனையாக எதையாவது மக்கள் பேசி  மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் திருமண வாழ்வு பற்றி வீண் வதந்தியை பரப்புகின்றனர்.

எல்லா நட்சத்திரங்களும் உயர்வானதுதான் என்பதை ஜோதிடர்கள் சொல்லாமல் இருப்பதும் பெண்கள் வாழ்வை கேள்விக்குரியதாக்கி விடுகிறது.

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

மற்ற நட்சத்திரத்தில் வீட்டுக்கு வந்த மருமகள்கள் எல்லாம் மாமியாரை தாங்கி விடுகிறார்களா, தனிக்குடித்தனம் செல்லாமல் மாமியார், மாமனாருடன்   வாழ்கின்றனரா? அவர்களின் மாமியார், மாமனார் நுாறாண்டு தாண்டி வாழ்கிறார்களா? ஒருவர் பிறக்கும் போதே அவர்களுடைய பூர்வ ஜன்ம பாவ, புண்ணிய அடிப்படையில் நிகழ் கால பலன்கள், ஆயுள் தீர்மானிக்கப்படும் போது வீட்டுக்கு வரும் மருமகள் எப்படி குடும்பத்து உறுப்பினர்களின் ஆயுளை நிர்ணயிக்க முடியும்?

மக்களின் அறியாமையே இத்தகைய மூட நம்பிக்கைக்கு காரணம். இந்தியாவில் சாலை விபத்தில் ஆண்டுக்கு பல லட்சம் பேர் சாகின்றனர். விமான விபத்தில் கொத்து  கொத்தாக மரணிக்கின்றனர். அவர்கள்  மனைவியர் நட்சத்திரம் எல்லாம்  ஒன்றா?

திருமணமே ஆகாத பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்  இளைஞிகள் இறப்பிற்கு யார் காரணம்?
 
இதேபோல் பூராடம் நட்சத்திரம் கணவனின் ஆயுள் பாவம் பற்றி சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கணவனின் ஆயுள்பாவம்  கணவனின் ஜாதகத்தைப் பொறுத்தே தவிர மனைவியின் ஜாதகத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு சாவை எதிர்நோக்கும் குடிகாரர்களின்   மனைவியர் எல்லாம் பூராட நட்சத்திரமா, அல்லது மனைவியின் ஜாதகம் தான் இவர்களை டாஸ்மாக் கடைக்கு போகச் சொல்கிறதா?

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை மாமனார் இல்லாத  வீட்டில்  தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆயில்யம்  நட்சத்திரம் இல்லாத பெண்கள் வீட்டில் மாமனாருக்கு சாவே கிடையாதா?

பிறப்பும், இறப்பும் இயற்கையான ஒன்று. இருக்கும் வரை உடல்,மன வலிமையுடன் வாழ்வதை விட்டுவிட்டு பெண்களது நட்சத்திரங்களை குறை சொல்வது தேவை அற்றது.  

திருமணம் மட்டுமல்ல வீடு வாங்க, வேலைக்குச் சேர்வதில் கூட சிலர் ஜோதிடம் ஆன்லைன் மூலம் கேட்பதும் ஜோதிடர் எதிர்மறையாக சொல்வதும் மக்களின் உழைப்பை கெடுக்கும் வழியாகும். என்னதான் ஜோதிடம் என்றால் நல்லது கேட்டது சொல்ல வேண்டும் என்றாலும் அவரவர் பிறந்த நேரப்படி சொல்லுவதை விட்டு விட்டு பொதுப்பலனில் மக்களை குழப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. 

பரணி தரணியாளும்  (எத்தனை பேர் தான் நாட்டை ஆளுவார்கள்??) என்றும், அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் வீட்டில் தவிட்டு பானையில் கூட பொன்னை சேர்த்து வைப்பார்கள் (இப்ப தவிடே பார்க்க முடிவதில்லை) என்று .எதுகை மோனையாக பேசி  தவறான விளக்கங்கள் மூலம்  பெண்களின் எதிர்கால திருமண வாழ்வை பாழாக்குவதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம் ஜோதிடமா?

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணமாக நானும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ரஜினி அவர்களின் புகழும், பணமும் எங்கே? என் நிலை எங்கே?

ரஜினியின் பூர்வ ஜென்ம பாவ புண்ணிய அடிப்படையில் அவருக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்துள்ளன. என்னதான் கணவன்-மனைவி, மருமகள்- மாமியார்  ஊமையாகவே இருந்தாலும் அவர்களுக்குள்  ஊமை பாஷையிலாவது சண்டை போட்டுக்கொள்வார்களே தவிர சண்டை போடாமல் இருக்கப்போவதில்லை. மாமியார் மருமகள் சண்டை என்பது குறிப்பிட்ட ஆணின் மீதான அதீத பாச உணர்ச்சியின் வெளிப்பாடு. இதில் நட்சத்திரமும் ஜாதகமும் என்ன செய்யும்?

பிறப்பு இருந்தால் இறப்பும் நிச்சயமே. கஷ்டம் இருந்தால் சந்தோஷமும் இருக்கத்தான் செய்யும். கடவுளின் அனுக்கிரஹத்தால் கிடைத்த மானுடப் பிறவியை பூமியில் உள்ள வரை நிம்மதியுடன், சந்தோஷத்துடன் வாழ்வது நம் கையில் தான் உள்ளது.

ஜோதிடம் சோதனையை தகர்த்து நம்பிக்கை கொடுப்பதற்கு பதில் ஜோதிடம் என்ற பெயரில் பெண்களுக்கு சோதனைகள் ஏற்படுவது ஜோதிட சாஸ்திரம்  விரும்பாத ஒன்றாகும். மக்களுக்கு காலத்தின்  வழிகாட்டியாக இருப்பதற்கு பதிலாக  நட்சத்திரம் பற்றிய தவறான கருத்தால் பெண்களை கஷ்டப்படுத்தும் ஆதாரமற்ற பொய் பிரச்சாரத்தை தடுக்க வேண்டியது ஜோதிடர்களின்  முக்கியப் பணியாகும். இதை செய்யாவிட்டால் ஜோதிடமும் கூடவே ஜோதிடர்களும் காணாமல் போக நேரிடும்.

ஜோதிடம் மக்களை வாழவைக்கவே தோன்றியது; அழ வைப்பதற்கு அல்ல  என்பதே உண்மை. 

- எஸ். அசோக்

அடுத்த கட்டுரைக்கு