Published:Updated:

ருக்கு எங்கள் செல்லம்!

##~##

திருவண்ணாமலை கோயில் பக்தர்களின் செல்லக் குழந்தை... ருக்கு. இது டொண்டாய்ங் டொண்டாய்ங்  கோயில் யானை!

 23 வயது ருக்குவை 17 வருடங்களாக  வளர்த்துப் பராமரித்து வரும் யானைப் பாகன் சிங்காரம்தான், ருக்குவுக்கு எல்லாமே. சிங்காரம் அருகில் இல்லை என்றால், ருக்குவுக்கு ஒரு கவளம் சோறுகூட இறங்காது.  இதனாலேயே திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர்வது இல்லை சிங்காரம்!

ருக்குவின் அம்மா பாமா, முதுமலையில் ஓய்வில் இருக்கி றது. 17 வருடக் கோயில் பணியில் ஜெயலலிதா தொடங்கி உள்ளூர் அமைச்சர் எ.வ.வேலு வரை, இளையராஜா தொடங்கி சினேகா வரை ருக்கு தும்பிக்கையால் தொட்டு ஆசீர்வதித்த அரசியல், சினிமா பிரபலங்கள் அநேகம்.

ருக்கு எங்கள் செல்லம்!

பொதுவாக கூட்டத்தைப் பார்த்தால் யானைகள் மிரளும். ஆனால், ருக்குவுக்குக் குஷி பிறப்பதே மனிதர்களைப் பார்த்தால்தான். அதிலும் சாமி வீதி உலா செல்ல வேண்டும் என்றால் குஷி ஆகிவிடும். மனிதர்களோடு பழகிப் பழகி பிஸ்கட், சாக்லேட் என்று எதைக் கொடுத்தாலும் வெளுத்துக் கட்டுகிறது ருக்கு. ஆனால், 'என் கையால் கொடுத்தால்தான் சாப்பிடும். மற்றவர்கள் என்ன தந்தாலும், நான் சொல்லாமல் சாப்பிடவே சாப்பிடாது’ என்பது சிங்காரத்தின் பெருமிதம்.  

ருக்கு எங்கள் செல்லம்!

கோயில் மணி அடிப்பது, பிரகாரத்தைச் சுற்றி வந்து பிளிறு வது என்று சின்சியர் பக்திப் பழம் ருக்கு. தினமும் காலை கோயிலை மூன்று முறை சுற்றி முடித்து ருக்கு எக்சர்சைஸ் செய்வதைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் கூடும். கால்களை அங்கும் இங்கும் ஆட்டி, தலையை அசைத்து, உடம்பை முறுக்கி என்று ஒரு மினி சர்க்கஸ் செய்வாள். ஆனால், அதைப் புதிதாகப் பார்ப்பவர்கள் 'யானையை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்?’ என்று சிங்காரத்தை வறுத்து எடுத்துவிடுகிறார்களாம். ''இப்படி உடலுக்குப் பயிற்சி கொடுத்தால்தான் அதுக்குச் செரிக்கும்!'' என்று ஒவ்வொரு வருக்கும் பதில் சொல்வதற்குள், ருக்குவைவிட அதிகமாக களைத்துவிடுகிறார் சிங்காரம்.

12 முதல் 4 மணி வரை ருக்குவுக்கு ஓய்வு நேரம். மாலை 4 மணிக்கு டியூட்டிக்கு வந்தால், 6 மணி வரை ஆசீர்வாத நேரம்.  இரண்டு முறை ஒருவரைப் பார்த்தால், அவரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமாம்.  திருவண் ணாமலை கலெக்டர் ராஜேந் திரன், ருக்குவின் 'நண்பேன்டா’! அவரைத் தூரத்தில் பார்த்தாலே, பிளிறி குதூகலத்தை ஆரம்பித்து விடும்.  திருச்சூர் அல்லது சென்னையில் இருந்து தயாரித்துத் தருவிக்கப்பட்ட பட்டாடையை விழாக் காலத்தில் ருக்குவுக்கு அணிவிக்கிறார்கள். கோடைக் காலம் என்றால் தினமும் மூன்று முறையும் மற்ற நேரங்களில் ஒருநாளுக்கு ஒரு முறையும் ருக்குவுக்கு  குளியல் அவசியம். மாதம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனையும் உண்டு. கோயில் என்றால் ருக்கு; ருக்கு என்றால் கோயில் என்று பழகிவிட்டது திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டம்!

ருக்கு எங்கள் செல்லம்!

- யா.நபீசா