Published:Updated:

என் ஊர்!

தீவட்டிக் கொள்ளையர்களை அழித்த ஊர்!

என் ஊர்!

தீவட்டிக் கொள்ளையர்களை அழித்த ஊர்!

Published:Updated:
##~##

நாகர்கோவில் அருகே உள்ள தன் சொந்த கிராமமான 'மணிக்கட்டிப் பொட்டல்’ பற்றிய, பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்.

 'அந்தக் காலத்துல ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக் கும். கூரை வீடுகளாக இருந்தாலும், ஒவ்வொண்ணும் தனித் தனி வீடுகளா கம்பீரமா நிற்கும். ஆனா, இன்னிக்கு வீடுகள் ரெம்பவே நெருக்கம் ஆகிடுச்சு. தோட்டம், துரவு எல்லாம் குறைஞ்சுட்டாலும் சுத்திலும் தென்னை, வாழைன்னு  வெள்ளாமை நடக்குறதால இப்பவும் ஜிலுஜிலுன்னு காத்து வீசுற சொர்க்க பூமி மணிக்கட்டிப் பொட்டல்!

என் ஊர்!

சின்ன வயசுல நான் அதிகமாப் பொழுதைக் கழிச் சது எங்க ஊரு குளத்துலதான். தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் குளத்துல பாய்ஞ்சிருவேன். அந்தக் குளத்து தண்ணி எப்பவும் வத்தினதே கிடையாது. குளத்துல குதிச்சு மறுகரையை யார் முதல்ல தொடு றதுன்னு எங்களுக்குள்ள போட்டியே நடக்கும். தண்ணிக்குள்ள முங்கி எழுந்து 'தொட்டு விளையாட்டும்’ விளையாடுவோம்.

எங்க ஊரு 'ஆலடி சாமி’ சுத்து வட்டாரத்துல ரொம்பவே ஃபேமஸ். அந்தக் காலத்தில் எங்க பகுதிக்கு தீவட்டிக் கொள்ளைக்காரங்க அடிக் கடி வருவாங்களாம். 'இன்ன தேதியில, இத் தனை மணிக்கு வருவோம்’னு முன்கூட்டியே தாக்கல் சொல்லிருவாங்க ளாம். ஊர் சனங்க பணம், நகை, சாப்பாடு எல்லாத்தையும் ஊர் எல்லையில் வெச்சிருவாங்களாம். திருடங்க சாப்பாட்டை திருப்தியா சாப்பிட்டுட்டு, நகையை எடுத்துக்கிட்டுப் போயிருவாங்களாம். சாப்பாடு திருப்தியா இல்லைன்னா வீடுகளுக்குத் தீ வெச்சு கொளுத்திருவாங்களாம். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை திட்டம் போட்டு எங்க ஊர் காரங்க சேர்ந்து அழிச்சாங்களாம். அதுக்கு அடையாளமா நிக்குறதுதான் ஆலடி சாமி.

அப்பல்லாம் ஆலடி சாமிக்குப் பக்கத்துல ஒரு உண்டியல் இருக்கும். அதைப் பூட்டு போட்டுப் பூட்டி இருப்பாங்க. நாங்க நாலு பசங்க சேர்ந்து உண்டியல்ல இருந்து காசைத் திருடி மிட்டாய் வாங்கி சாப்பிடுவோம். அப்போ எங்க ஊர்ல பலகாரக் கடைகள் எதுவும் கிடையாது. மிட்டாய் சாப்பிடு றதுக்காகவே நாங்க சைக்கிளை எடுத்துட்டு டவுனுக்குப் போவோம். ஆலடி சாமி கோயில் பக்கத்திலேயே பிரமாண்டமான ஆலமரம் நிக்கும். அதோட விழுதைப் பிடிச்சு ஊஞ்சல் ஆடியது இன்னும் ஞாபகம் இருக்கு. உச்சி வரைக்கும் ஏறுவேன். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் குமரி மாவட்டத்துல உயரமான, பெரிய ஆலமரம் இதுதான்!

என் ஊர்!

1942-ம் வருஷம் சென்னை மாகாண கவர்னரோட கார் ஏலத்துக்கு வந்துச்சு. அதை எங்க ஊரைச் சேர்ந்த பொன்னீலன் வடிவுங்கிற வரு ஏலத்துக்கு எடுத் திருந்தாரு. அந்தக் காரைப் பார்க்குறதுக்காக திருவனந்த புரத்துல இருந்து சாரிசாரியா மக்கள் எங்க ஊருக்கு வந்திருக் காங்க. மணிக்கட்டிப் பொட்டல் மாட்டு வண்டின்னா சுத்து வட்டாரத்துல தனி மரியாதைதான். எங்க வீட்லயும் மாட்டு வண்டி வெச்சிருந்தோம். பள்ளிக்கூடம் படிக்கும்போது, ரோட்ல போற மாட்டு வண்டிக்காரருக்கு காசு கொடுத்து வண்டி ஓட்டிப் பழகுவோம். அப்போ மாட்டு வண்டிகளை ஒதுக்கி ஆயாசப்பட்டுக்கிறதுக்கு 'வண்டிப் பேட்டை’ இருக்கும். ஊர், உலகக் கதைகளை அங்கேதான் பேசிட்டு இருப்பாங்க!

அப்போ இருந்து இப்போ வரை எங்க ஊர் பெட்டிக்கடைதான் எங்களுக்கு பார்லிமென்ட். அங்கேதான் உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசுவோம். இப்பவும் எங்க பகுதிகளில் 'கோகதவு’ வீடுன்னா தனி மரியாதை. 'கோ’ன்னா மன்னன். அந்த வீடுகளில்தான் முந்தைய காலங்களில் ஊர்த் தலைவர்கள் வாழ்ந்தாங்களாம்.

என் ஊர்!

படிப்பு முடிஞ்சு நான் வெளியூர் போனதும் ஊரோடு இருந்த தொடர்பு அறுந்து போச்சு. தேவர்கள் கடைந்த தேன் ருசி எனக்குத் தெரியாது. ஆனா, அதை எல்லாம் விட எங்க ஊரு பலா ரொம்ப ருசியா இருக்கும். அதனால என் ஓய்வுக் காலத்தை கழிக்க எங்க ஊருக்கே திரும்ப வந்துட்டேன்!''  வாத்சல்யமாகச் சிரிக்கிறார் பொன்னீலன்.

சந்திப்பு: என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்