Published:Updated:

என் ஊர்!

கோபால் கடை பிரியாணியும்... செளண்டம்மன் கோயில் திருவிழாவும்!

என் ஊர்!

கோபால் கடை பிரியாணியும்... செளண்டம்மன் கோயில் திருவிழாவும்!

Published:Updated:
##~##

பாடல் ஆசிரியர் கலைக்குமார். 'ஏதோ ஒரு பாட்டு...’ இது இவரது முதல் பாடல், தொடர்ந்து 'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா...’, 'அழகாய்ப் பூக்குதே... சுகமாய் தாக்குதே...’ போன்ற பாடல்களை எழுதியவர். சினிமாவில் விக்ரமனிடம் உதவி இயக்குநராக நுழைந்து, கவிஞராக மாறி கவிதை வடித்துக்கொண்டு இருப்பவர், தன் ஊரான இளம்பிள்ளை பற்றி இங்கே பேசுகிறார்...

 ''நான் வீட்டுக்கு ஒரே பையன்கிறதால, இளம்பிள்ளையைத் தாண்டி எங்கேயும் போய்விடக் கூடாதுனு அப்பா கவனமா இருந் தார். அவரை ஏமாத்திட்டு, நான் சென்னைக்கு ஓடி வந்துட்டேன். எங்க ஊர்ல இருந்து கூப்பிடு தூரத்துல சித்தர்கள் வாழ்வதாகச் சொல் லப்படும் சித்தர் கோயில்  இருக்குது.  மலை எல்லாம் மூலிகை வாசம். ஒரு முறை அங்கு போயிட்டு வந்தாலே, தீராத நோய் எல்லாம் தீர்ந்து போகும்னு ஐதீகம் உண்டு. மலை அடிவாரத்துல கோயிலுக்குப் பக் கத்துல வற்றாத கிணறு இருக்கு. சுத்து வட்டார மக்களுக்கு இன்னிக்கும் அதுதான் குடிநீர்த் தொட்டி.  ரொம்ப சுவையான மூலிகைத் தண்ணீர். அதைக் குடிச்சா, ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு சொல்வாங்க. ஆனா, எங்க மக்கள் அதுல குளிக்கவும் செய்வாங்க!

என் ஊர்!

பள்ளிக்கூடத்துல படிக்கும்போது விடுமுறை நாட்களில் சாப்பாடு கட்டிக்கிட்டு சித்தர் கோயிலுக்குப் போவோம். செங்குத்தான ஒத்தை அடிப் பாதையில மூணு மலை தாண்டிப் போனா, மலை உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் வரும். அங்கே சாப்பாடு சாப்பிட்டு சுனைத் தண்ணீரைக் குடிச்சிட்டு ஒரு தூக்கத்தைப் போடுவோம். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ராத்திரி நேரத்தில் மலை ஏறி, விடியற்காலை மலை உச்சிக்குப் போய்ச் சேர்வோம்.

என் ஊர்!

சித்தர் கோயிலுக்குப் பக்கத்துலதான் இரும்பாலை இருக்கு. சுத்து வட்டாரத்துல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கும் இடம். உள்ளே ஏராளமான மரங்கள் சூழ்ந்து காட்டுக்குள் உலவுற மாதிரி இருக்கும். இளம் பிள்ளை நடராஜா தியேட்டருக்குப் பக்கத்துல கோண்ட்டிபட்டியான் பணியாரக் கடை இருக்கும். சாயந்திரம் 7 மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி 2 மணி வரைக்கு வியாபாரம் தூள் பறக்கும். அதேபோல, கோபால் கடை பிரியாணி. இங்கே பிரியாணி சாப்பிட, சேலம், ஈரோட்டுல இருந்து எல்லாம் கூட்டம் வரும்.  இப்பவும்ஊருக் குப் போகும்போது பணியாரம், பிரியாணியை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்.

பங்குனி மாசம் சௌண்டம்மன், மாரியம்மன் பண்டிகை நடக்கும். விழாவில் கத்தியை உடம் புல விளாசிக்கிட்டே ரத்தம் சொட்டச் சொட்ட நடந்து வருவாங்க. அதேபோல, வீரமுட்டி வேஷம் கட்டி, வாயில எலுமிச்சைப் பழத்தைக் கடிச்சுக்கிட்டு மிரட்டுவாங்க. நாங்க பள்ளிக் கூடம் படிக்கிறப்போ, சிந்தனை மன்றம் தொடங்கினோம். ஊருக்கு நடுவுல இருந்த பஜனைக் கோயில்ல கூட்டம் நடத்துவோம். நாங்களே பாட்டு எழுதி, மெட்டுப் போட்டுப் பாடுவோம்.

எங்க ஊரைச் சுத்தி இருக்கும் இடங்கணசாலை, ஏழுமாத்தானூர், நல்லணம்பட்டி கிராமங்களில் விவசாயம்தான் பிரதானம். கட லைக் காய் பிடுங்குற சீஸன் வந் துட்டா, பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுட்டு கடலை பொறுக்க ஓடிடுவோம். வெள்ளிக் கிழமை ஊர் சந்தை. தறி ஓட்டுறவங்களுக்கும் அன்னிக்குத்தான் வாரக் கூலி கொடுப்பாங்க. எல்லோர் கையிலும் காசு புரளும். சந்தையும் சினிமா தியேட்டரும் நிரம்பி வழியும். எனக்கும் வீட்டுல நாலணா, எட்டணா தருவாங்க. சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சோளக் கதிர், மாங்காய்னு அந்தக் காசை செலவழிக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.

சென்னைதான் வாழ்க்கைன்னு ஆன பிறகு, ஆறு மாசத்துக்கு ஒரு தடவைதான் ஊர்ப் பக்கம் எட்டிப் பார்க்க முடியுது. ஆனா, ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போயிட்டுத் திரும்பும்போது, கோடை விடு முறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கூடத்துக்குப் போற பையன் மாதிரி சோகமாத்தான் கிளம்புவேன். சென்னையில் கால் பதிக்கும் வரை மனசு பாரமா இருக்கும். ஆனா, வந்ததும் சென்னை பரபரப்புல எல் லாமே காணாமல் போயிடும்.

என் ஊர்!

இருந்தாலும் பேப்பர்லயோ, இன்டர்நெட்டுலயோ 'இளம்பிள்ளை’ன்னு பார்த்தா மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... அது ஊருக்கு திரும்பக் கிளம்பச் சொல்லி உசுப்பேத்தும்!''

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: பொன்.காசிராஜன், க.தனசேகரன்