Published:Updated:

என் ஊர்!

நாகாத்தம்மன் டு தாந்தோணி அம்மன்!

என் ஊர்!

நாகாத்தம்மன் டு தாந்தோணி அம்மன்!

Published:Updated:
##~##

ன் 'தாய் மண்’ணான பெரம்பூர் பற்றி மனம் திறக்கிறார் வழக்கறிஞர் சுமதி!

 ''கோடம்பாக்கத்தில்தான் நான் பிறந்தேன். அங்கே உள்ள நாகாத்தம்மன் கோயில்தான் எனது ப்ளே கிரவுண்டாக இருந்தது. பிறகு,  அங்கு இருந்து பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள தாந்தோணி அம்மன் கோயில் அருகே இடம் பெயர்ந்தோம். இந்த இரண்டு கோயில்களுக்கும் இடையில்தான் என் வாழ்க்கை அமைந்து இருக்கிறது.

1968-ம் வருடம். அப்போது பெரம்பூரில் ஒரு கிரவுண்ட் நிலம்   2 ஆயிரம் ரூபாய். சொசைட்டியில் லோன் வாங்கி கிச்சன், ஹால் என்று பகுதி பகுதியாக வீடு கட்டுவார்கள். எங்களது வீட்டில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லோகோ ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் இருக்கும் திருஷ்டிப் பொம்மைகளுக்கு மட்டும்தான் நாங்கள் பயப்படுவோம். அதைக் காட்டியே பயமுறுத்தி  சாப்பிட வைப்பார்கள். தூங்க வைப்பார்கள்.

என் ஊர்!

சாலைகளைவிட வீடுகள் பள்ளமான இடத்தில் இருந்ததால், டிசம்பர் வந்தாலே வீட்டுக்குள் மழைத் தண்ணீர் புகுந்துவிடும். இதனால் டிசம்பர் வந்ததும் கட்டில், மேஜை எல்லாவற்றையும் செங்கல் மேல் தூக்கிவைத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் வரை கூட மழைத் தண்ணீர் தேங்கி நிற்கும். பலசரக்கு  கடைக்குப் பொருள் வாங்க அப்பா, அம்மாவும் சென்றதும்  செயலில் இறங்கி விடுவோம் நாங்கள். பிஸ்கட் டின்களைக் கயிற்றால் கட்டி, மிதக்க விட்டு அகப்பையைத் துடுப்பாக்கி படகு ஓட்டுவோம். பருப்பு டின்களை படகு ஆக்கினால் சும்மாவிடுவார்களா வீட்டில்? எங்களைத் துரத்தித் துரத்தி அடிப்பார்கள். ஆனாலும், சாதித்த சந்தோஷம் எங்களுக்கு!

அப்போது ரயில்வே பள்ளிக்கூடத்தில் படித்தேன். தேங்கிய நீரில் நடந்தால் தொற்றுநோய் வந்துவிடும் என்று கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் என்னை தூக்கிச் சுமந்து பள்ளிக்கு நடப்பார் அம்மா. அப்போது அது ஜாலியாக தெரிந்தது. இப்போதுதான் அம்மாவின் அக்கறை உறைக்கிறது. ஏரியாவில் வீடுகள் பெருகப் பெருக குழந்தைகளின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது. மாலை வேளைகளில் கார்ப்பரேஷன் மைதானத்தில்  கூட்டம் குவிய ஆரம்பித்தது. கில்லி, செவன் ஸ்டோன், முதுகு பஞ்சர், காத்தாடி, ஐஸ்பால், கிரிக்கெட், கேரம் என எந்நேரமும் விளையாடிக்கொண்டே இருப்போம்.

எங்களது பள்ளியில் காமர்ஸ் வாத்தியாராக இருந்த ராஜேந்திரன் சார்தான் எங்களைச் செதுக்கி உருவாக்கினார். ஒவ்வொரு வகுப்பும் ஓர் இதழ் தயாரிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர், பொறுப்பாசிரியர்களை மாணவர்களிடம் இருந்து தேர்ந்தெடுப்பார். அந்தப் போட்டியில் பங்கு பெற விண்ணப்பிக்க வேண்டும். இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு படி நிலையையும் சொல்லிக் கொடுத்து எங்களை உருவாக்கினார். போட்டிகளுக்கு வெளியூர் சென்றால் தனியேதான் அனுப்பிவைப்பார்கள். சிறு வயதிலேயே 'நம்மால் சமாளிக்க முடியும்’ என்கிற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கியவர் அவர்.

ஆங்கிலோ இந்திய டீச்சர்கள் இந்தியக் குழந் தைகளுக்குக் கற்று கொடுத்ததைப்போல வேறு யாரும் செய்து இருக்க முடியாது. வகுப்பு முடி வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், டெஸ்க்கில் தலை சாய்த்து கண் மூடச் சொல்லி ரெஸ்ட் கொடுப்பார்கள். அடுத்த வகுப்புக்கான மணி அடித்ததும் 'சிட், ஸ்டேண்ட்’ என்று மாற்றி மாற்றிச் சொல்லி குழந்தைகளை உற்சாக மன நிலைக்குள் கொண்டுவந்து அடுத்த ஆசிரியரி டம் ஒப்படைப்பார்கள். ஒழுக்கம், நேரம் தவறாமை, மொழி உச்சரிப்பு, கையெழுத்து என ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக, அழகாகக் கற்றுக் கொடுத்தார்கள்.

என் ஊர்!

அப்போது எல்லாம் பீச் மட்டுமே எங்கள் ஒரே பொழுதுபோக்கு. சென்ட்ரல் வரை ரயிலில் வந்து, அங்கு இருந்து கடற்கரைக்கு நடந்தே செல்வோம். மீண்டும் என்னை நடக்க வைப்ப தற்காக கடலை வாங்கித் தருவதாகச் சொல்வான் என் அண்ணன். அந்தக் கடலைக்கு ஆசைப்பட்டு நடந்தே செல்வேன். தூக்கமும், பசியும், அசதியுமாக வீடு போய் சேருவேன். தயிர்ச் சாதமோ புளி சாதமோ சாப்பிட்டுவிட்டு தூங்கும்போது கடல் என் கனவில் வரும். அதில் நான் அலுப்பே தெரியாமல் விளையாடுவேன். இன்று வரை அந்த சந்தோஷத்துக்கு இணையாக வேறு சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை!

நான் படித்த பிணீsளீஷீtமீ சிணீனீஜீ ஷிவீtமீ என்கிற ஸ்கவுட் பள்ளியின் ஸ்லோகன் 'எப்போதும் தயாராக இரு’ என்பதுதான். அங்கு ஐந்து நிமிடத்தில் டென்ட் அடித்து, கொடியேற்றித் தயாராகிவிடுவோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் ராணுவ வீரர் ஒருவருக் காகக் காத்திருப்போம். அவரை ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். ராணுவ உடை, முதுகில் பேக், கையில் துப்பாக்கியோடு கம்பீரமாக நடந்து வருவார். எங்களுக்காக மார்ச் ஃபாஸ்ட் செய்வார். தரையில் காலை ஓங்கி அடித்து பின்புறமாகச் சாய்ந்து விழுவார். மீண்டும் அதேபோல விறைப்பாக எழுவார். துப்பாக்கியைக் கையில் சுற்றி விறைப்பான சல்யூட் அடிப்பார். நாங்கள் கொடுக்கும் ஐந்து, பத்து பைசாக்களைப் பெறும்போது மட்டும் கம்பீரம் தொலைந்து அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியும். இன்று வரை என் கனவில் வந்து கொண்டே இருக்கிறது அந்தப் பச்சை உடை உருவம்!''

- எஸ்.கலீல்ராஜா, படங்கள்: வி.செந்தில்குமார்