Published:Updated:

நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?

Vikatan Correspondent
நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?
நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?
நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?

வெள்ளத்தால் மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றன தமிழகத்தின் பல பகுதிகள். செய்வதறியாது விழிப் பிதுங்கி நிற்கும் வாகனங்கள், வீட்டினுள் புகுந்த தண்ணீரில் மிதந்தவாறே டிவி-யில் வெள்ள அபாய எச்சரிக்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்... என ரைமிங் மைமிங் பேசுவதற்கு ஏதுவாக இருந்தாலும், சூழ்நிலை சற்றுக் கவலைக்கிடம்தான்.

2004-ம் ஆண்டு தமிழகத்தை நிலைகுலைய வைத்த சுனாமிக்குப் பிறகு, தண்ணீரைப் பார்த்து மக்கள் பயந்தது அநேகமாக இந்த பேய் மழைக்குத்தான்.

'போதுமடா சாமி' எனச் சொல்லும் அளவுக்குக் கொட்டித் தீர்த்துவிட்ட ஐப்பசி மழை. இன்னமும் பயமுறுத்தியபடியேதான் இருக்கிறது. இத்தகைய சூழலில்... 'இத்தனை மழை பெய்து என்ன பிரயோஜனம்... இதைச் சேமித்து வைக்காமல் வீணாக கடலுக்குத் தாரைவார்த்து விட்டார்களே' என்று மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவேதான், இங்கிலாந்தின் ' நீர் உறிஞ்சும் ரோடு (Permeable Pavement) குறித்த  தகவலுடன், 'ஒரு நிமிஷத்தில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சித் தள்ளும்...இந்த ரோடு இருந்தால் தண்ணீர் சேமிப்புக்கு கவலையே இல்லை' என்ற அக்கறையுடன்  சமூகவலைத் தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வலம்வந்து கொண்டிருக்கிறது ஒரு வீடியோ.

ஆம்! இப்படி ஒரு சாலையை வடிவமைக்கும் ஐடியாவை இங்கிலாந்து நாட்டின் ‘டா(ர்)மாக்’ (TARMAC) நிறுவனம் TOPMIX PERMEABLE  என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்டுபிடிப்பு என்னவோ ஐம்பது வருஷப் பழசுதான். சில பல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்களுடன் புதுசாக களம் இறங்கியுள்ளது இந்த நிறுவனம். அதற்குத்தான் உலகம் முழுக்க அத்தனை ஆச்சர்ய லைக்குகள்.

கெமிக்கல் கலந்த கான்கிரீட்டை மேல்தளமாகக் கொண்டு கட்டப்படும் இந்த ரோட்டின் கீழ்பாகம், தண்ணீரை வடிகட்டும் ஜல்லியால் மூடப்பட்டது. இதனால் பெருமளவு தூசு இங்கேயே வடிகட்டப்படுகிறது. இதையடுத்து வரும் பாகம், மண் தரை. இதுதான் தண்ணீரை உள்வாங்கி, கீழே அமைக்கப்பட்டிருக்கும் குழாய் அல்லது தண்ணீர் எடுத்துச்செல்லும் பாதை மூலமாக கடலிலோ அல்லது தண்ணீர் தேவைப்படும் பெரிய தொழிற்சாலைகளுக்கோ எடுத்துச் செல்கிறது. இந்த அதிசய ரோடுதான், நிமிடத்துக்கு நான்காயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சித் தள்ளக்கூடியது என்கிறார்கள்.

நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?

இந்த தொழில்நுட்பத்தை தமிழகத்தில் அமைத்துவிட்டால்... சகதி கலந்த நீருக்கும், அதனால் உருவாகும் கொசுவுக்கும் குட்பை சொல்லி விடலாம். இன்னும் கேளுங்க... கோடை காலத்தில் ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் நீரை ஆவியாக்கி குளுகுளுவென மாற்றித் தரும் தன்மையும் இதற்கு உள்ளதாம். குளிர் காலத்தில் பனிப்பொழிவைப் பொறுத்து சிலசமயம் இந்த ரோட்டில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், நம்ம ஊரில் ஐஸ் மழைக்கு சாத்தியங்கள் இல்லை என்பதால் நமக்கு பாதகங்கள் கிடையாது.

"இந்த முறையில் சேமிக்கும் தண்ணீரை, கோடைக்காலத்தில் சுத்திகரிப்பின் மூலம் குடிநீராகக் கூட உபயோகிக்கலாம். இதற்கு ஆகும் செலவு பட்ஜெட்டுக்கு ஏற்றதே" என்கிறது டா(ர்)மாக்’ (TARMAC) நிறுவனம்.

நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?

நடைபாதை, சப்-வே, விளையாட்டு மைதானம், கார் பார்க்கிங், பைக் செல்லும் பாதை, வீட்டின் முன்புறம் என்று பல இடங்களில் இந்த முறையில் சாலை அல்லது தளத்தை அமைக்கலாம். ஆனால், இப்போதைக்கு பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல ஏதுவாக இந்த ரோடு இல்லை. அதேசமயம், சாலை தவிர மேற்சொன்ன மற்ற இடங்களில் எல்லாம் இந்த முறையில் சாலை மற்றும் தளங்களை அமைத்தால் தமிழகத்தின் பெருமளவு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட முடியும்.

இந்த சாலை குறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் கேட்டபோது, “ இது பிளாஸ்டிக் தரைவிரிப்பு போன்றதொரு அமைப்பு. இந்த பிளாஸ்டிக் தரை விரிப்பு பாலியுரித்தேன், பிட்டுமீன் என்ற வேதிக் கலவையால் ஆனது.

நீர் உறிஞ்சும் ரோடு தமிழகத்திற்கு சாத்தியமா?

சொல்லப்போனால் நம் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தரை விரிப்பு போன்றதுதான். ஒரே வித்தியாசம். இது நீளமாக பெரியளவில் இருக்கும். இந்த பிளாஸ்டிக் சாலை அமைப்புக்கு அடிப்பகுதியில் பக்காவான வடிகால் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் வெளியேறும்.

மேற்பகுதி, அடிப்பகுதி கூம்பு போன்றும், இடைப்பகுதி சிறிய அளவில் நீண்டும் இருக்கும். மேற்பகுதியின் கூம்பு வழியே நுழையும் தண்ணீர், சிறு குழாய் போன்ற அமைப்பின் வழியாக வந்து அடிப்பகுதி கூம்பு வழியே வெளியேறுகிறது. இந்த பிளாஸ்டிக் சாலை விரிப்புக்கு கீழே தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதிகள் கண்டிப்பாக அவசியம்.

இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. அந்த நாட்டிலேயே இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்படி பயன் பாட்டுக்கு வந்தாலும், வீடு, அலுவலகங்களில் செயல்படும் பார்க்கிங் போன்ற சிறிய இடங்களில்தான் இப்போதைக்குப் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட எடைக்கு மேல் வாகனங்களை நிறுத்தினாலோ, ஓட்டினாலோ இந்த அமைப்பின் தாங்குதிறன் குறையும். ஆய்வுகள் முற்றுப்பெற்று இந்தத் தொழில்நுட்பம் சிறப்பானதுதான் என்கிற முடிவுகள் வரும்போதுதான் பொதுப் பயன்பாட்டுக்கு இதைக் கொண்டுவர முடியும்” என்றார்.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அரசு மக்களின் துயரத்தை போக்க வழிகாண வேண்டும்.

- த.ஜெயகுமார், இ.ரா.ப்ரீத்தி

இந்த நவீன தொழில்நுட்பம் குறித்த வீடியோ இங்கே...