Published:Updated:

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!
வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!
வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

நிராகரிப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு நம்மோடு இயைந்தும் சினந்தும் ஆயிரமாயிரம் வளங்களை அள்ளிக் கொடுக்கிறது இயற்கை.

வெளிநாட்டு வியாபார தந்திரத்தால் 'உப்பு இருக்கா…….கரி இருக்கா……..இதைச்சாப்பிடாதீர்கள்... அதைச் சாப்பிடாதீர்கள்!'  என மிரட்டும் விளம்பரங்களோடு, கலர் கலர் பேக்கிங்குகளாக களமிறக்கப்படுகின்றன விதவிதமான நொறுக்குத் தீனிகளும் இன்ன பிற உணவுகளும்...!

அப்படி தவறான புரிதலோடு, நம் மண்ணில் பல்வேறு இயற்கை உணவுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. அதில் ஒரு வகைதான் நிலக்கடலை.

வேர்க்கடலை, நிலக்கடலை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவை கொட்டை வகையைச் (Nuts) சேர்ந்தது. மத்திய அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. எண்ணெய் வித்துக்காக சீனா அதிக அளவில் பயிரிட்டு வருகின்றன. நிலக்கடலை நம் நாட்டில், பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான காரணம் எத்தரப்பினரும் வாங்கும் நிலையில் உள்ளது என்பதும், அதில் அடங்கியிருக்கும் சத்துக்களுமே ஆகும்.

100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்,  நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரதம், ட்ரிப்டோபென், திரியோனின், ஐசோலூசின், லூசின், லைசின், குலுட்டாமிக் ஆசிட், கிளைசின்,  விட்டமின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகச் சத்து, தண்ணீர்ச்சத்து ஆகியவற்றுடன் ஃபோலிக் ஆசிட் சத்தும் நிறைந்துள்ளன.

அதெல்லாம் சரி. இத்தனை சத்துக்கள் அடங்கிய 'நிலக்கடலையை உண்ணக்கூடாது... அப்படி உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு போன்ற இதயநோய்  வரக்கூடும்' என்று ஒரு தகவலை சிலர் மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள்.

இந்த கூற்று உண்மைதானா என தெரிந்துகொள்ள சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு மருத்துவர் சர். இராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,

"நிலக்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, இதயநோய் வரும் என்பது தவறான கருத்து. சொல்லப்போனால், அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. நிலக்கடலையில் உள்ள காப்பர் சத்து மற்றும் அதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் பொருட்களில் மோனோ அன் சாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன.

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

இவைகள் கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரைகிளிசரைட்ஸ் போன்றவை களைக் குறைத்து, நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, சர்க்கரை வியாதியால் உண்டாகக் கூடிய சீரற்ற கொழுப்பு மற்றும் செரிமான மாற்றங்களை கட்டுக்குள் வைக்கின்றன. இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன” என்றார்.

அவென்டிஸ்ட் ஹெல்த் ஸ்டடி (Aventist Health Study), லோவா வுமன்ஸ் ஹெல்த் ஸ்டடி (Lowa Women’s Health Study), நர்சஸ் ஹெல்த் ஸ்டடி (Nursus Health Study), மற்றும் பிசிஷியன்ஸ் ஹெல்த் ஸ்டடி (physicians Health study) போன்றவைகள் நிலக்கடலை குறித்த பல்வேறு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றன. அதில், நிலக்கடலையில் இருக்கும் ஃபோலேட் (Folate) என்கிற விட்டமின், பெண்களின் கருத்தரிப்புத் (Fertility) தன்மையை ஊக்குவிக்கின்றன எனவும், தாய்மைப்பேறு அடைவதற்கு முன்பாகவோ அல்லது ஆரம்பகாலத்திலோ 400 மைக்ரோ கிராம் நிலக்கடலை சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 70% மூளைத் தண்டுவட குறைபாடு வருவது தடுக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும்  சூழலில், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் பாதிப்பது மனஅழுத்தம். 'நான் உற்சாகமாகத்தான் இருக்கிறேன். எனக்கு எப்படி மனச்சோர்வு?' என்று தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில்தான், இன்றைய வாழ்க்கை நம்மை வைத்திருக்கிறது. நிலக்கடலையில் உள்ள அமினோ ஆசிட்டுகள், மூளையின் இயல்பு ஊக்கத்திற்கு தேவையான செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. இதனால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.

மேலும், இதில் உள்ள வைட்டமின் பி.3 மூளையின் நினைவாற்றலை துரிதப்படுத்துகிறது. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஓர் ஆராய்ச்சியில், தினமும் ஒரு அவுன்ஸ் நிலக்கடலை எடுத்துக்கொண்டால் 25% பித்தப்பையில் கல் (GallStone) உருவாவது தடுக்கப்படுவதாகவும், உடல் பருமன் குறைக்கப்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் ரத்தக் கொழுப்பும், சர்க்கரை நோயும் இரட்டைக் குழந்தைகள்போல மக்களை வாட்டி வதைக்கின்றன. இதை வியாபாரமாக்க முனையும் ஒருசிலர், 'கொழுப்பைக் குறைக்கிறோம்...  சர்க்கரையை குறைக்கிறோம்...!'  எனக் கூவிக் கூவி ஆயிரம், லட்சம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலங்களில் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல் பயிரிடப்பட்ட இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்களைக் கொண்டு, உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தன. இன்றைக்கு உடலுக்கு எதிரான மருந்தாக உணவு மாறிவிட்டது.

இதய நோயை அண்டவிடாத தன்மையைக் கொண்டுள்ள நிலக்கடலை சற்று ஆறுதலாக இருந்தபோதும், "ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?" என்று தஞ்சையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் குருமூர்த்தியை அணுகியதில்,

“வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். தற்போதைய உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நிரூபித்திருக்கின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு,  இன்டெக்ஸ் (Index) (அதாவது, G - 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால், பச்சைப்பட்டாணி, வாழைப்பழம்,  புழுங்கல் அரிசி, அவித்த உருளைக் கிழங்கு போன்றவற்றில் G-1 அதிகமாக இருக்கிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்.

ஆனால், வேர்க்கடலையில் G-1 குறைவாக இருப்பதால்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. அத்துடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. ஏறக்குறைய GLP-1 என்ற ஹார்மோன் போன்று வேலை செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி  அளவு (1 ½ oz அல்லது 50 to 75 grms ) வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது,  சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்” என்றார்.

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

இப்படி நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எனப் பழகிவந்த நாம், அனைத்து சத்துக்களும் உறிஞ்சி எடுக்கப்பட்ட தெளிந்த எண்ணெயை உபயோகப்படுத்தி வருகிறோம். கடலை எண்ணெய் அதிக ஆற்றல் கொண்டது. அதிகப்படியான ‘லிப்பிடுகள்’ இருப்பதால் கெட்ட கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது. ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ என்னும் துணை ரசாயனப் பொருள் கெட்ட கொழுப்பை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. ‘ரெசவராடல்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள், கடலை எண்ணெயில் அதிகம் இருக்கிறது. இது புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது.

இதில் உள்ள வைட்டமின் இ சத்து, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். இவை செல்சவ்வுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பல்வேறு பன்னாட்டு உணவு உற்பத்தி நிறுவனங்களின் போட்டா போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல்,  சத்துக்கள் நிறைந்த உணவுப் பயிர்கள் உருத்தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நிலக்கடலையும் இந்த வால்மார்ட் அரசியலுக்குத் தப்பவில்லை. பிறநாடுகளைவிட இந்தியாவில் அதிகம் பயிரிட்டு வரும் நிலக்கடலையை, மக்கள் மத்தியில் உடலுக்கு ஒவ்வாத பொருளாகத் திட்டமிட்டு பெரிய பிம்பத்தை உருவாக்கி,  தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து கொள்வதாக இணையச் செய்திகள் முன்வைக்கின்றன.

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

நம் மூதாதையர் வழிகாட்டுதலில் தட்பவெட்பத்திற்கு ஏற்ப நமக்காக, நம் மண்ணில் பாவுகிற காய்கறிகள், தானியங்கள், பயறுவகைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதை மீட்டெடுக்கும் விதமாக,  மீண்டும் மரபுவழி உணவு குறித்த தெளிவை நோக்கி  நாம் பயணப்பட வேண்டும். யாராவது இருவர் பேசிக்கொண்டிருந்தால் 'என்ன கடலையா'... என்கிற நக்கலான பேச்சை விடுத்து, இனியேனும் கடலையின் மகத்துவத்தை கவனியுங்கள்.

எது எப்படியோ, "நிலக்கடலை மிகுந்த ஆரோக்கியமான உணவுப்பொருள். எந்தவித பயமும் இன்றி, கடலைமிட்டாயாகவோ, வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். பயப்படத் தேவையில்லை. இதனால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்!"  என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எதிர்மறை விளைவுகள் இருப்பதுபோல் உணவுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. இதை மனதில் கொண்டு, இனியாவது கையளவுக் கடலையில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் துவங்கலாமே…!

 - அகிலா கிருஷ்ணமூர்த்தி