Published:Updated:

அழகு நிலையம் வைக்கலாம்... அசத்தல் வருமானம் ஈட்டலாம்!

பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து

அழகு நிலையம் வைக்கலாம்... அசத்தல் வருமானம் ஈட்டலாம்!

பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

''முடிவெடுத்தேன்... உடனடியா ஒரு கோர்ஸுல சேர்ந்தேன்... சர்டிஃபிகேட் வாங்கினேன்... இப்ப சாதிச்சுட்டேன்!'' - ஆனந்தியின் குரலில் அத்தனை வெற்றிப் பெருமிதம்! இந்த ஆனந்தி, மதுரை, விளாங்குடியில் இயங்கி வரும் 'ஆன்சிகா பியூட்டி கிளினிக்'கின் உரிமையாளர்!

''நான் படிச்சது பி.பி.ஏ. அதனால எப்பவுமே பிஸினஸ் மைண்ட்டோடவே சுத்திட்டு இருப்பேன். 'ஏதாவது பிஸினஸ் தொடங்கலாம்'னு நெனச்சுட்டு இருந்தப்பதான், பியூட்டி பார்லர் வெச்சு பெண்கள் சாதிச்சுட்டு இருக்காங்கனு கேள்விப்பட்டேன். அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல எனக்கு ஆர்வம் இருந்ததோட, பியூட்டி பார்லர் தொழில், முழுக்க பெண்களுக்குப் பாதுகாப்பானது அப்படினும் உணர்ந்து, இதுல இறங்க முடிவெடுத்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனடியா... பேஸிக், அட்வான்ஸ்டு, அரோமாதெரபினு மூணு கோர்ஸ்களை முறைப்படி படிச்சேன். கொஞ்ச நாள்லயே... இந்த பியூட்டி பார்லரைத் தொடங்கிட்டேன். குடும்பத்துல பெருசா வருமானம் இல்லாம அல்லாடிட்டு இருந்த நேரத்துல, இதுதான் எங்களுக்குக் கைகொடுத்து மேல தூக்கிவிட்டுச்சு'' என்று சொல்லும் ஆனந்தி, பார்லர் ஆரம்பிப்பது பற்றி பேசினார்.

'''ஐ புரோ டிரிம் பண்றது, ப்ளீச் பண்றது, ஃபேஷியல் பண்றது... இது மூணை மட்டும் தெரிஞ்சுகிட்டா போதும், பியூட்டி பார்லர் வெச்சுடலாம்னு ரொம்ப சாதாரணமா சிலர் சொல்லிடுவாங்க. ஆனா, அதெல்லாம் சும்மா. இப்படி ஒரு நினைப்போட பார்லரை நடத்தினா... அது ரொம்ப ரொம்ப தப்பு. கஸ்டமர்ஸை ஏமாத்துற விஷயம். அரசாங்கம் அல்லது அங்கீரிகரிக்கப்பட்ட தனியார் பயிற்சி மையம்னு முறைப்படி பயிற்சியை முடிச்சுதான் பார்லர் நடத்தணும்.

அழகு நிலையம் வைக்கலாம்...  அசத்தல் வருமானம்  ஈட்டலாம்!

இதை ஆரம்பிக்கறதுக்கு... குறைஞ்சது ஒரு லட்ச ரூபாய் இருந்தாலே போதும். ஆனா, இப்ப இருக்குற கஸ்டமர்ஸ்,  இன்ட்டீரியர் டெக்கரேஷன்ஸ்லகூட கவனத்தைச் செலுத்தறாங்க. பார்லர் சுத்தமாவும் காற்றோட்டமாவும் இருக்கணும்ங்கிறதுலயும் கவனமா இருக்காங்க. அதனால 5 லட்ச ரூபாய் முதலீடு போட்டா... இன்ட்டீரியர் தொடங்கி எல்லாத்தையுமே கிராண்டா செய்யலாம். குறைஞ்சது 200 சதுர அடி இடமாவது தேவைப்படும்.

உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவங்களும் பயிற்சி எடுத்துக்கிட்ட வங்களா இருக்கறது முக்கியம். அப்பத்தான் கஸ்டமர்ஸ்கிட்ட நல்ல பேர் வாங்க முடி யும். எப்பவுமே சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்களைத்தான் பயன்படுத்தணும். ஒருத்தருக்கு யூஸ் பண்ணினதை, அப்படியே இன்னொருத்தருக்கு யூஸ் பண்ணினா... கிருமி தொற்று வரும்'' என்று பார்லர் நுணுக்கங்கள் குறித்தும் பேசியவர்,

''நான் பார்லர் ஆரம்பிக்கும்போது ஒரே ஒரு உதவியாளர்தான் இருந்தாங்க. கஸ்டமர் மத்தியில் பிரபலம் ஆனதும்... இப்ப 4 பேர் கூடுதலா வேலை பார்க்கறாங்க. குழந்தைகள், காலேஜ் கேர்ள்ஸ்ல ஆரம்பிச்சு 50 வரை எல்லா வயசுலயும் கஸ்டமர்ஸ் இருக்காங்க. வயதான கஸ்டமர்ஸுக்கு மசாஜ் செய்றதோட... மனம்விட்டுப் பேசி அவங்களோட மனச்சுமையைக் குறைக்கற வேலையையும் சேவையாவே செய்றோம்.

கஸ்டமர்ஸ், தாங்களாகவே 'பேஸ் பேக்கேஜ்' பத்தி தெரிஞ்சுகிட்டு வந்து அதை செய்துவிடச் சொல்லிக் கேட்டா... நாங்க செய்ய மாட்டோம். அவங்களோட ஸ்கின் டைப் பாத்து, எது பொருந்துமோ அதைத்தான் போடுவோம். சிலர் வரும்போதே டென்ஷனோட வருவாங்க. சிலர் 'இது எதுக்கு... அது எதுக்கு?’னு ஆயிரத்தெட்டு கேள்விகளைப் கேட்பாங்க. அவங்க எல்லாருக்குமே வளைஞ்சு கொடுத்து போகணும். அவங்க மனநிலைக்குத் தகுந்த மாதிரி பேசவும் தெரியணும். இந்த தொழில்ல வாய் ஜாலம் ரொம்ப முக்கியம். வெறும் தொழிலா மட்டும் பாக்காம... ஒரு கலையா உள்வாங்கி செய்ய ஆரம்பிக்கணும். கஸ்டமர்ஸோட மனநிலையைப் புரிஞ்சுகிட்டு, முகம் கோணாம நடந்துக்கணும்.

ஒரு பொண்ணு அழகா இருந்தா... அந்தப் பொண்ண பாத்து மத்தப் பொண்ணுங்க பொறாமைப்படுவாங்க. ஆனா, நாங்க ரசிப்போம். ஏன்னா... மத்தப் பொண்ணுங்கள அழகுபடுத்திப் பாக்குறதுதானே எங்களோட வேலையே!  கண்ணு, மூக்கு, தலை வாய்னு ஒவ்வொண்ணையும் இன்ச் பை இன்ச்சா செதுக்குறதுலதான் எங்களோட கலை ஆர்வம் வெளியில தெரியும்'' என்ற ஆனந்தி,

''இந்த நாலைஞ்சு வருஷத்துல மூலைக்கு மூலை பியூட்டி பார்லர் வந்தாச்சு. அதனால இந்தத் தொழில்ல போட்டி அதிகம்தான். ஆனா... சரியான அணுகுமுறை, கனிவான பேச்சு... இதோட தூய்மையான பார்லர்னு இருந்தா, நம்மள அடிச்சுக்க யாருமே இல்ல. செலவெல்லாம் போக... மாசம் 30 ஆயிரம் ரூபாய் கியாரன்டி'' என்று அழகு புன்னகை பூத்தார்!

அகத்தின் அழகு, முகத்தில்! முகத்தின் அழகு, கை மேல் காசாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism