Published:Updated:

என் ஊர்!

மேற்கே போகும் ரயில்!

##~##

ன் சொந்தக் கிராமமான கதிரனாம்பட்டியைப் பற்றி  நெகிழ் வாகப் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல்   எம்.எல்.ஏ பாலபாரதி.

 ''தண்டவாளத்தை ஒட்டி இருப் பதால், எங்க ஊருக்கு ரயில்தான் கடிகாரம்.  காலையிலேயே எங்கள் ஊர்ப் பெண்கள் தங்கள் கணவர் களை, 'ஏழரை மணி ரயிலு மேக்க போயிடுச்சு... இன்னும் கௌம்ப லையா?’ன்னு கௌப்பிவிடுவாங்க. சிறு வயதில் மேற்கே செல்லும் ஏழரை மணி ரயிலின் சத்தம் கேட்ட பிறகுதான் பள்ளிக்குக் கிளம்புவோம். அதேபோல, மாலையில்  கிழக்கு நோக்கி செல் லும் ரயில், ஐந்தரை மணியை உணர்த்தும். நான் ஒட்டன்சத்திரத்தில் ஆறாம் வகுப்பு படித்தபோது, ரயிலில்தான் பள்ளிக்குச் செல் வேன். ஒரு சமயம், நிலக்கரித் தட்டுப்பாட்டால், ஆறு மாசத்துக்கு ரயில் ஓடலை. அதனால், கே.புதுக்கோட்டை பள்ளிக்கூடத்துக்கு நடந்தே போயிட்டு வருவேன். அப்போ என் வாழ்க்கையில் ரயில் தவிர்க்க முடியாத விஷயம். ஊர்ல நிறையத் துவரங்காடுகள் இருந்துச்சு. அந்த துவரங்காட்டுக்குக் கள்ளி மரங்கள்தான் வேலி. அந்த வேலியைத் தாண்டிக் குதிச்சு, கோவைச் செடியில் இருந்து கோவைப் பழங்கள் பறிப்போம். அப்போ பள்ளிக்கூடத்தில்  சத்துணவு ஊழியர்கள் கிடையாது. அதனால், நாங்களே சமைப்போம். கோதுமைச் சோறு ஆக்குறதுக்கு மதியம் வரைக்கும் ஆகிரும். அப்புறம்தான் படிக்கவே ஆரம்பிப்போம்.

என் ஊர்!

மாடு கட்டி தண்ணி இறைக்கிறதுக்கு 'கமலை’னு பேரு. அத னால கிணற்றை எல்லோரும் 'கமலைக்கேணி’னு சொல்லுவாங்க. எங்க ஊர்ல இருக்குற 'கமலைக்கேணி’யிலதான் நான் நீச்சல் கத்துகிட்டேன். அந்த கேணியைச் சுத்தி இருக்கும் பூவரசம் மரத்து இலைகள்ல 'பீப்பீ’ செஞ்சு ஊதுவோம். விளையாடும்போது யாருக்காவது அடிபட்டுருச்சுன்னா, பூவரசம் இலையை அரைச்சு காயத்துக்கு மருந்து போடுவோம்.

இன்னொரு கேணியைத் 'தண்ணிக்கேணி’னு சொல்லுவாங்க. எனக்கு நாலு வயசு இருக்கும்போது, என் அம்மா ஏதோ கோபத்துல என்னைத் தூக்கிட்டு கேணியில் குதிச்சுட்டாங்க.  சத்தம் கேட்டு எங்க சித்தப்பாதான் ஓடி வந்து எங்க ரெண்டுபேரையும் காப்பாத்தினாரு. எங்க ஊரு அம்மன் கோயில் பக்தர்கள் எடுக்கிற அக்னி சட்டி, முளைப்பாரி எல்லாத்தையும் அந்த கேணியிலதான் கொட்டுவாங்க. அதனால 'சாமிதான் எங்களைக் காப்பாத்துச்சு’ன்னு மக்கள் சொன்னாங்க. எனக்குக்  கடவுள் நம்பிக்கை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் என்னைக் காப்பாத்தினது என் சித்தப்பாதான்.

என் ஊர்!

கோடை விடுமுறையில் வேப்பம்பழத்தைப் பொறுக்கி, கொட்டையைத் தனியா எடுத்துக் காயவைப்போம். அதை வாங்கி றதுக்காக வியாபாரி வருவாரு.  படிக்கு அஞ்சு பைசா குடுப்பாரு. அப்போ அதுதான் எங்களுக்குத் தின்பண்டக் காசு!

அப்பல்லாம் எங்க ஊர்ல, ஒவ்வொருத்தர் வீட்டுலயும் ஒரு  சண்டை  சேவல் வளர்ப்பாங்க.  பூலான்வளசுங்கிற ஊர்ல நடக்கும் சேவல் சண்டையில எங்க ஊரு சேவல் கலந்துக்கும். நிறையப் பரிசு வாங்கும். தோத்த சேவலைக் கொண்டுவந்து குழம்பு வெச்சிச் சாப்பிடுவோம். ஊர் மத்தியில் இருக் கும் ஆலமரத்தடியில நாடகக்காரங்க  டென்ட் அடிச்சு  தங்கி இருப்பாங்க. தினமும் ராத்திரி அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல நாடகம் போடுவாங்க. அந்த ஒரு வாரமும் எங்க ஊருக் குத்  திருவிழாதான்.

எங்க ஊர்ல விளையுறதை மாட்டு வண்டியில்  எடுத்துட்டு 'விருப்பாச்சி’ சந்தைக்குப் போவாங்க. அதே மாதிரி  புதன் கிழமை நடக்கும் ரெட்டி யார்சத்திரம் சந்தைக்கும் போவாங்க. சந்தைக்கு மாட்டு வண்டியில் போறதுக்கு பசங்களுக்குள்ள பெரிய  போட்டியே நடக்கும். ஏன்னா சந்தைக் குப் போனா பெரியவங்க குச்சி ஐஸும் சர்பத் தும் வாங்கித் தருவாங்க. 77-ல் பஞ்சம் வந் தப்போ, எங்க மக்கள்லாம் 'மகிழம்பூ’ விதையை எடுத்துப் பக்குவமாக் கிளறிச் சாப்பிட்டுட்டு, பிறகு நாலு சக்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிட்டுட்டுதான் 'சாமசோறு’ சாப்பிடுவோம், அப்பதான் கொஞ்சமாச் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்

என் ஊர்!

அப்போ எங்க ஊர்ல நிறைய மோசமான விஷயங்கள் மக்கள்கிட்ட இருந்துச்சு. குறிப்பா, குழந்தைத் திருமணம் முடிச்சுவெச்சிருவாங்க. படிக்கவைக்காம சிறுவர்களை வேலைக்கு அனுப்பிருவாங்க. கல்வி, பொருளாதாரம் ரெண்டிலும் பின்தங்கி இருந்ததால் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.

எதுக்கு கஷ்டப்படுறோம்னு காரணமே தெரியாமல் இருந்த எங்க மக்களையும் அவங்களோட வாழ்க்கை முறையையும் பார்த்து, அவங்களுக்கு ஏதாவது செய்ய ணும்னு உத்வேகம் ஏற்பட்டுச்சு.  என்னோட இடைநிலைப் பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் சார் எனக்கு நம்ம சமூகத்தைப்பத்தியும் மக்களோட வாழ்க்கைமுறையைப்பத்தியும் எடுத்துச் சொன்னார். இது எல்லாம்தான் என்னை கம்யூனிஸத்துக்கு அழைச் சிட்டுப் போச்சு.  அந்த வகையில் நான் கம்யூனிஸ்ட் ஆனதுக்கும், மக்கள் சேவை செய்றதுக்கும் என் கிராமமே முக்கியக் காரணம்!''

உ.அருண்குமார், படங்கள்:வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு