Published:Updated:

என் ஊர்!

கோவையில் சுவிஸ்..!

##~##

க்ரஹாரம், ஆலமரத்தடி போன்றவற்றையே சுற்றிக்கொண்டு இருந்த தமிழ் நாவல் களத்தை, லாஸ் ஏஞ்சலீஸ், பென்டகன் என்று விமானம் ஏற்றிவிட்ட மிகச் சிலரில் முக்கியமானவர் ராஜேஷ்குமார். விஷ§வல் காட்சிகளில் மட்டுமே திகில் காட்சிகளை உணர முடியும் என்ற மாயையைத் தகர்த்து, எழுத்திலும் அது சாத்தியம் என்று உணர்த்தியவர். தனது மனதுக்கு நெருக்கமான வடவள்ளி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்!

என் ஊர்!

''நான் பிறந்து வளர்ந்தது கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதி என்றாலும், என் வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பது வடவள்ளிதான். சர்வலட்சணம் பொருந்திய ஊர். 1989-ல் நான் இங்கே நிலம் வாங்க முடிவு செய்தபோது, 'இங்கே போர் போட்டா புகை தான் வரும்’ என்று பயமுறுத்தினார்கள். ஆனாலும், வடவள்ளி மீது இருந்த நம்பிக்கையில், நிலம் வாங்கி வீடு கட்டினேன். அப்போது எல்லாம் மாலை இருட்டிவிட்டால், டார்ச் லைட் இல்லாமல் வெளியே வர முடியாது. சர்வ சாதாரணமாக பாம்புகள் படம் எடுத்து நம்மை வழி மறிக்கும். ஆனால், 'சில வருடங்களில் வட வள்ளி எங்கேயோ போகப்போகிறது!’ என்று என் மனதுக்குள் ஒரு குருவி சொல்லிக்கொண்டே இருந்தது. குருவி வாக்கு இன்று பலித்தும்விட்டது!

இப்போது வடவள்ளி காலத்துக்கு ஏற்றாற்போல் நாகரிகமாக மாறிவிட்டது. காலனிகள் பெருகிவிட்டன. பங்களாக்களும் அபார்ட்மென்ட்டுகளும் ஆச்சர்யம் ஊட்டுகின்றன. ஷாப்பிங் மால்கள் சென்னையுடன் போட்டி போடுகின்றன. டிரைவ் இன் பார்ட்டிகளுக்கு மஞ்சூரியனும் கிடைக்கிறது; நடுத்தர மக்களுக்கு இட்லியுடன் ஆறு வகைச் சட்னியும் கிடைக்கிறது. மாலை வேளையில் பாரதியார் பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் சென்றால், ஒரு பக்கம் சுடச் சுட மீன் வறுவலும் சில்லி சிக்கனும் கமகமக்கும். இன்னொரு பக்கம் பானி பூரியும் பேல் பூரியும் சப்புக் கொட்டவைக்கும்!  

என் ஊர்!

அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்புக்கே கோவை செல்ல வேண்டி இருந்தது. இன்று ப்ளே ஸ்கூலில் ஆரம்பித்து பி.ஹெச்டி. வரை இங்கேயே முடித்துவிடலாம். பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்துகிடக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம். கூடவே, சட்டக் கல்லூரியும். முருகனின் ஏழாம் படை வீடான மருத மலை இங்கு இருந்து ரொம்பப் பக்கம். சஷ்டி காலங்களில், 'அரோகரா’ கோஷங்களும் தைப் பூச வேளையில், 'வேல்... வேல்... வெற்றிவேல்’ கோஷங்களும் ஏரியாவில் ஆன்மிக மணம் பரப்பும்!

இவ்வளவு அம்சங்களைத் தாண்டியும் வட வள்ளிக்கு என்று தனிச் சிறப்பு ஒன்று இருக்கிறது. அது தூசியும் புகையும் இல்லாத தூய்மையான 'நோ பொல்யூஷன் பாயின்ட்’ அந்தஸ்து! மருத மலையுடன் சாலை வசதி முடிந்துவிடுவதால் லாரி, பஸ் போக்குவரத்து வெகு குறைவு. அதிகாலை நடைப் பயிற்சியின்போது, நுரையீரல் நிரப்பும் காற்று சர்க்கரையாக இனிக்கும். ஒரு மழை அடித்தாலே, ஊர் பசுமையாகிவிடும். அதனால்தான் வடவள்ளியைக் 'கோவையின் சுவிஸ்’ என்று செல்லமாக அழைக்கிறோம். இங்கே கோடை காலம் இரு மாதங்கள் மட்டுமே. மே மாதம் பாதிக்கு மேல் மருதமலையின் பின்புறம் கேரளா எல் லையில் மழை துவங்கிவிட்டால், ஊருக்கே ஓசியில் 'ஏசி’ போட்டது போல் இருக்கும். அதனால்தான் என்னவோ மக்களும் எப்போதும் மாறாத புன்னகையுடன் இருக்கிறார்கள்!''

சந்திப்பு: எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்

என் ஊர்!
அடுத்த கட்டுரைக்கு