Published:Updated:

'காஞ்சிக் குடில்!'

புத்தேரித் தெரு ஆச்சர்யம்

##~##

கால எந்திரம், கற்பனைதான். ஆனால் 'காஞ்சிக் குடில்’ நிஜம். காஞ்சிபுரம் புத்தேரித் தெருவில் அமைந்துள்ள காஞ்சிக்குடில் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தோடு நம்மை 20-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

 காஞ்சிபுரத்தில் சி.எம்.சுப்புராய முதலியாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெரும் செல்வந்தரான அவர் பொதுப் பணிகளில் பங்கெடுத்தவர். அவர் வாழ்ந்து மறைந்த இல்லம்தான் இன்று 'காஞ்சிக் குடில்’ என்ற பெயரோடு காஞ்சியின் கலாசாரம், பாரம்பரியத்துக்கு உயிருள்ள சாட்சியமாக நிற்கிறது. துளிகூட சிமென்ட் கலக்காமல் கட்டி இருப்பதால் அறை எங்கும் அவ்வளவு குளுமை! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனித் தனி அறைகள், கலைநயம் மிக்க டைனிங் டேபிள், கிராமபோன், பல்லாங்குழி, பாய்லர் என்று திரும்பும் இடங்கள் எல்லாம் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.

'காஞ்சிக் குடில்!'

காஞ்சிக் குடிலை நிர்வகிக்கும் சென்னை அண்ணா நகர் சந்திரா அம்மாளிடம் பேசினோம். ''சுப்புராய முதலியார் எனது மாமா முறை. காஞ்சி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற வர். அவர் 1938-ம் ஆண்டு தன் 60-வது வயதில் இறந்தார். அவரைத் தொடர்ந்து என் அத்தை யும் அவரின் மனைவியுமான ஆண்டாள், கடந்த 1992-ல் மறைந்தார். வாரிசுகள் இல் லாததால், சகோதரர்களின் வாரிசுகளுக்குச் சொத்துகள் பகிர்ந்துஅளிக்கப்பட்டன. அந்த வகையில் இந்த வீடு எனக்கு வந்தது. பழமை மாறாமல் இருந்த இந்த வீடு எனக்கு பிரமிப்பைத் தந்தது. ஒரு சமயம் காஞ்சி யில் நான் சந்தித்த வெளி நாட்டுப் பயணி ஒருவர், 'இங்கு பட்டுச் சேலை, கோவில் தவிர வேறு என்ன இருக்கிறது?’ என்று குறைபட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. அப் போது உதித்ததுதான் 'காஞ்சிக் குடில்’ யோசனை. 'நகரின் முக்கியப்பகுதி என்பதால், வீட்டை இடித்து காம்ப்ளெக்ஸ் கட்டினால் லாபகரமாக இருக்குமே’ என்று பலரும் யோசனை சொன்னார்கள். ஆனால், நான் விடாப்பிடியாக மறுத்துவிட்டேன்.

'காஞ்சிக் குடில்!'

காஞ்சிக் குடில் 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. காஞ்சி மக்களிடம் வரவேற்பு இருக்குமா என ஆரம்பத்தில் சந்தேகப்பட்டேன். நாளடைவில், வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குறையாத ஆர்வத்துடன் உள்ளூர் மக்களும் வந்து 'காஞ்சிக் குடிலை’ப் பார்த்து செல்கின்றனர். வீட்டைப் பராமரிக்க என்றே மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய்  வசூலிக்கிறோம். சுற்றுலாப் பயணிகள் விரும்பினால், அவர் களுக்காக வீட்டின் பின்பகுதியிலேயே சமைத் தும் தரப்படுகிறது'' என்று சந்திரா விவரிக்க, நமக்குள் ஆச்சர்ய அலைகள்!

சபாஷ் சந்திரா!

- எஸ்.கிருபாகரன்

'காஞ்சிக் குடில்!'
அடுத்த கட்டுரைக்கு