Published:Updated:

கோர்ட், லேம்ப் - சென்னை திரைப்படவிழாவில் அரங்கை நிறைத்த படங்கள்

கோர்ட், லேம்ப் - சென்னை திரைப்படவிழாவில் அரங்கை நிறைத்த படங்கள்
கோர்ட், லேம்ப் - சென்னை திரைப்படவிழாவில் அரங்கை நிறைத்த படங்கள்

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் இரண்டாம் நாள், தேசிய விருது பெற்ற மராத்தி திரைப்படமான "கோர்ட்", பெர்லின் திரைப்பட விழாவில் சில்வர் பேர் விருது பெற்ற "ஏஃபரிம்", "பாரடைஸ் சூட்", "ஃபேக்டரி பாஸ்", "டூ லைவ்ஸ்", "லேம்ப்" போன்ற சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

ஐந்து மணிக்கு திரையிடப்பட்ட "கோர்ட் (Court)" திரைப்படத்திற்கு, பார்வையாளர்கள் நாலரை மணி முதலே சீட் பிடிக்க ஆரம்பிக்க, சில நிமிடங்களில் உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கமே நிரம்பி வழிந்தது. 
தான் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படத்திற்கே தேசிய விருதைப் பெற்ற சைதன்யா தாமனே, கோர்ட் படத்தின் வாயிலாக, இந்திய நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும் குற்றமற்ற போராளிகளின் அவல நிலையையும், அவர்களுக்கு ஜாமீன் பெற, வழக்கறிஞர்கள் படும் பாடுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளார்.

சாக்கடைக்குள் இறங்கிக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் சேரிவாழ் மனிதனின் மரணத்திற்கு, மும்பை நகரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, தம் பாடல்கள் வழியாகப் போராடும், நாராயண் காம்ப்லே எனும் முதியவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, அவரைக் கைது செய்கிறது போலீஸ்.
மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் வழக்கறிஞரான வினய், காம்ப்லேவுக்கு, பிணை வாங்க மாதக்கணக்கில் போராடுகிறார். பொய் சாட்சி, அரசு வழக்கறிஞரின் திசை திருப்பும் வாதங்கள், காவல் துறை ஆய்வாளரின் பொய்யான ஆதாரங்கள் என ஒவ்வொரு முறையும், நீதிபதி வழக்கை தள்ளிப்போட, தொடர்ந்து போராடுகிறார் வினய்.

கோர்ட், லேம்ப் - சென்னை திரைப்படவிழாவில் அரங்கை நிறைத்த படங்கள்

முக்கால்வாசி திரைக்கதை நீதிமன்ற அறைக்குள்ளேயே நகர்ந்தாலும், அங்கு நடக்கும் கேலிக்கூத்தான காட்சிகள் நம் நீதிமன்றங்களை கலாய்த்து தள்ளுகின்றன. இறுதிக் காட்சியில், தவறு செய்த சிறுவர்களை விட்டுவிட்டு, தவறே செய்யாத அப்பாவி சிறுவனை நீதிபதி அடிப்பது, நம் நாட்டில், குற்றமற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மிக எளிமையாக உணர்த்திச் செல்கிறது. 

இன்று பார்வையாளர்களின் கைதட்டல்களை அள்ளிய மற்றொரு திரைப்படம், "ஃபேக்டரி பாஸ் (Factory Boss)". சீன மொழித் திரைப்படமான இது, சீனாவின் தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களையும், அதற்கான காரணங்களையும், தொழிலாளர்கள் மற்றும் முதலாளி என இரு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருந்து, பார்வையாளர்களுக்கு விளக்கியது.     
பொம்மை தொழிற்சாலையில், சம்பளம் தராமல் இழுத்தடிப்பதோடு, கூடுதல் நேரம் பணி செய்யக் கட்டளையிடும் முதலாளியை எதிர்த்து, தொழிலாளர்கள் போராட, தொழிற்சங்கத் தலைவருக்குப் பணம் கொடுத்து, அவர்களை அடக்க முயல்கிறார் முதலாளி. ஆனால், அவரின் யுக்திகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.

அமெரிக்கக் குழந்தைகள் விளையாடுவதற்காக சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த பணத்தையும், குறைவான நேரத்தையும் அளிப்பதால் தான், உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைக் கூடத் தராமல், முதலாளிகள் சுயநலவாதிகளாக மாறுகின்றனர் என்பதை இறுதிக்காட்சியாக்கி முடித்துள்ளார் இயக்குனர் ஜாங்க் வே.

சென்னை திரைப்பட விழாவில் இடம் பெற்ற ஒரே எத்தியோப்பிய திரைப்படம், "லேம்ப் (Lamb)". சென்ற ஆண்டு திரைப்பட விழாவில் கலக்கிய, எத்தியோப்பியா நாட்டின் மிகச்சிறந்த சமூகத் திரைப்படமான "டிஃப்ரெட்" போலவே, இதுவும் மிகச்சிறப்பாக இருந்தது. எத்தியோப்பிய மக்களின், கலாச்சாரம், ஏழ்மை, மூடநம்பிக்கை என அனைத்தையும், அழகிய மலைகளின் நடுவே காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் யாரெட் ஜெலேக்.

தாயை இழந்த சிறுவனான, இப்ராஹிமை, அவனது தந்தை தன் உறவினர் வீட்டில் விட்டுச் செல்கிறார். தன் செல்லப்பிராணியான செம்மறி ஆட்டுடன், தன் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல நினைக்கும் இப்ராஹிம், அதற்காகப் பணம் சேர்க்கிறான். ஆனால், அவனுடைய மாமாவோ, விடுமுறை அன்று,  ஆட்டை வெட்டி உண்ண முடிவு செய்கிறார். ஆட்டைக் காப்பாற்றவும், ஊருக்குச் செல்லவும் இப்ராஹிம் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் கதை.

மலைகள், மக்கள், சந்தை என எத்தியோப்பியாவுக்கே சென்று வந்த உணர்வைத் தருகிறது இந்தத்திரைப்படம்.

இன்னும் ஆறு நாட்கள் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில், விருதுகளை வென்ற பல சிறந்த உலகப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)