Published:Updated:

என் ஊர்!

மலையே மெளன சாட்சி!

##~##

தான் வசிக்கும் வந்தவாசி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் அ.வெண்ணிலா.

 ''ஊர் என்பது நிலப்பரப்பா... மனிதர்களா... மனிதர்கள் வழி நிலைபெறும் நிலப்பரப்பா?

எல்லோரையும்போல, என் ஊரின் தெருக்களும், மனிதர்களுமே எனக்கு அறிமுகம். நெடுஞ்சாலைகளால் இணைக்கப்படாத சிறு நகரம். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிப் பார்த்திராத நதி, ஏரிபோல் இருக்கும். ஊருக்கு ஓர் ஒலி அடையாளம் பகலில் தறிச் சத்தம்... இரவில் அடவு! கூத்துப் பாடல்களும், கதைகளும் நாவின் வழியே புனையப்படும் ஊரின் வயது. முதிர்ந்த கிழவிபோல் வெண் குன்றம் மலை.

என் ஊர்!

கால்களால் அளைந்து திரிந்து ஊரை அறிந்துகொள்வது, பெண்களுக்கு வாய்க்கா தது. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களின் மத்தியான நேரப் பேச்சுகளின் வழியே தான், ஊரின் பிம்பம் கட்டமைக்கப்படும். ஊருக்கு வடகோடியில் இருந்த வாமுனி, செம்முனி, கருமுனி - மும்முனிகளின் மன்னார்சாமி தோப்பும், கொள்ளையர்களின் புகலிடமாகக் கூறப்பட்ட எச்சூர்காடும், வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் அடிக்கடி கொலையாகிக் கிடக்கும் வெண்குன்றம் மலையும், ஊரின் எல்லைகளாக நின்று, என்னை நான்கு தெருக்களுக்குள்ளேயே கட்டிப் போட்டு இருந்தது.

வளர்ந்து கதைகளுக்குள் நுழைந்த பிறகு, வாசிக்கும் நிலப்பகுதியை என் ஊருக்குள் தேடுவேன். அகன்ற ஆற்றங்கரையும், அடர்ந்த காடும், பனி பொழியும் மலையும், வாய்க்கால்களும், ஓடையும் இல்லாத ஊர் என்ன ஊராக இருக்க முடியும்? ஊரை நினைத்தாலே, வெறுமை சூழும். மனங் கவர் ஆளுமைகளின் பிறப்பிடங்களைப் பார்க்கும் போது, மனம் வந்தவாசியைத் தேடும், வேலிகாத்தான் மரங்களும், அனல் காற்றும், கனகாம்பரம் பூக்களுமாய், ஊர் எனக்கு என இருந்தது.

என் ஊர்!

எழுத்தாளர் கோணங்கி, சமணம் பற்றிய தேடல் பயணத்தின் தொடர்ச்சியாக, வந்தவாசி வந்தார். சமணத்தின் வேரோடிக் கிடந்த வழித்தடங்களை, அவர் கை பிடித்து, முழுக்கச் சுற்றினேன். புழுதியும், வெட்கையும், தரிசுமாகக் கிடந்த நிலத்தைக் கீறி, புவியின் ஆழ் நீரோட்டம்போல் செழித்துக்கிடந்த சமணத்தை, மண்ணைக் கீறி அறிந்தேன். மாரியம்மன் கூழ் ஊற்றும் திருவிழா, ஆடி வெள்ளி பொங்கல்வைக்கும் திருவிழாக்களுக்கு அடுத்த நாள் தெருக் கூத்து இருக்கும். கூத்து பார்க்கும்போது, தூக்கம் வராமல் இருக்க மஞ்சளும் உப்பும் போட்டு, ஊற வைத்த புளியங்கொட்டையை வறுத்துத் தருவார்கள். புளியங் கொட்டையும் அரிசியும் வறுபடுகிற வாசனை வரும் மாலைப் பொழுது, மிக இனிமையானது. கூத்து பார்த்தல் என்பது எனக்கு அதிகபட்சம் பஃபூன் வரும் நேரம் வரை மட்டுமே! கட்டியங்காரன் வரவே 11 மணியைக் கடந்து விடும் என்பதால், அதற்கு மேல் அனுமதி கிடைக்காது. கூத்து முடிந்த மறுநாள், ஜெகதா பெரியம்மா வரி மாறா மல், கூத்துப் பாட்டை பாடிக் காட்டும். வருடத்தின் இரண்டு நாள் பொழுதுபோக்காக இருந்த தெருக் கூத்தை இம்மண்ணின், மொழியின் அடையாளமாக உணர்ந்தேன். இன்னும் சலங்கை கட்டிய கால்கள் ஊர் எங்கும் உலா வருகின்றன.

கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி, சமய, சமூக, அரசியல் மாற்றங்களுக்கான வழித்தடமாக வந்த வாசி உள்ளது. குந்த குந்தர் என்றழைக்கப்படும் ஹேளாச் சாரியார் தங்கியிருந்த, சமணத்தின் முக்கிய வாத விவா தங்களும், சமண நூல்களும் எழுதப்பட்ட இடம், சோழர் கால முக்கிய ஆட்சிப் பகுதி, சிற்றரசர்களான சம்புவரா யர்களின் ஆட்சிப் பகுதி, சங்க கால மன்னன் காரி துவங்கி, விஜயநகர ஆட்சியாளர்கள் வரையான ஆட்சியாளர்களின் ஆளு கைக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட திரா விட இயக்கத் தலைவர்களின் பாசறை ஆகத் திகழ்ந்து இருக்கிறது.

இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்ற பலப் பரீட்சை வந்தவாசி மண்ணில் நடைபெற்றது. கி.பி 1760-ம் ஆண்டு, நடை பெற்ற அப்போரில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, தங்கள் எல்லையைப் புதுச்சேரியுடன் சுருக்கிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் அந்த முதல் வெற்றிதான் இந்தியாவை அவர்கள் ஆளுகைக்கு உட்படுத்தியது!

என் ஊர்!

கடந்து போன வரலாற்றின் சிதைந்த தடயங்களாக, வந்தவாசிக் கோட்டையும், முள் மண்டிய அகழியும், ஆளரவமற்ற பழைய கோவில்களும், ஊரைச் சுற்றி உள்ளன. வந்தவாசி என்ற பெயருக்கு வந்தவர்களை சுகவாசிகளாக வாழ வைக் கும் ஊர் என்பது பெயர்க்  காரணம். இரு வெளி நாட்டுக் கும்பல், நம்மை ஆள்வதற்குப் பலப் பரீட்சை செய்தபோது இம்மண் வெறும் களமாகவும், கூலிக்கு ஆட்களை அனுப்பிய ஊராகவும் இருந்து இருக்கிறது.

காலந்தோறும் மண்ணின் மைந்தர்கள் வெறும் சாட்சிகளாக இருப்பதை கனத்த மௌனத்துடன் பார்த்தபடி ஊருக்கு வெளியே அமர்ந்திருக்கிறது வெண்குன்றம் மலை!''

படங்கள்:பா.கந்தகுமார்,  மு.தமிழரசு

அடுத்த கட்டுரைக்கு