Published:Updated:

செர்பியப் படத்திலும் பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள்

செர்பியப் படத்திலும் பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள்
செர்பியப் படத்திலும் பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள்

சென்னை திரைப்பட விழாவின் ஐந்தாம் நாள்.

சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படமான "ஒட்டால்", டூ லைவ்ஸ், ஸ்டான்டிங் டால், த்ரீ விண்டோஸ் அண்ட் ஏ ஹாங்கிங் போன்ற  திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

செர்பியப் படத்திலும் பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள்

காலை, முதல் காட்சியாக திரையிடப்பட்ட "ஒட்டால் (Ottaal)", கேரளாவின் கிராமத்தில் வாத்து மேய்க்கும் சிறுவனுக்கும், அவனுடைய தாத்தாவுக்குமான அன்பை, அழகிய நீரோடைகளின் நடுவே காட்சிப்படுத்திய அற்புதமான திரைப்படம். வாத்து மேய்க்கும் சிறுவனான குட்டப்பா, பள்ளிக்குச் செல்ல விரும்புகிறான். ஆனால், இவ்வுலகில் அவனுக்கு இருக்கும் ஒரே உறவான தாத்தா, வறுமையின் காரணமாக அவனை தன்னுடன் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.

அருகாமையில் இருக்கும் பணக்கார சிறுவனான டிங்கு, பள்ளியில் ப்ராஜெக்ட் செய்யாமல் நின்று கொண்டிருக்கும் போது, குட்டப்பா அவனுக்கு ஜன்னல் வழியாக, பட்டாம்பூச்சிக் குஞ்சுகளை தந்து உதவுகிறான். அன்று முதல் இருவரும் நண்பர் ஆகிறார்கள். மாநில அளவிலான கலைப்போட்டியில், டிங்குவுக்கு, குட்டப்பா செய்து கொடுத்த மண்சிற்பம், முதல் பரிசை பெற்றுத் தருகிறது.

ஒருநாள், தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, அவர் தாம் இறப்பதற்குள், குட்டாப்பாவை, அவன் விரும்பியது போல் பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என நினைக்கிறார். ஒரு இளைஞனிடம் குட்டப்பாவை அழைத்துச் சென்று, படிக்க, வெளியூருக்கு அனுப்பிவைக்கிறார். ஆனால் அங்கு விலைக்கு விற்கப்படும் குட்டப்பா, பட்டாசு ஆலையில், தினமும் கொடுமைப்படுத்தப் படுகிறான். இறுதியாக அவன் தாத்தாவுக்கு எழுதும் கடிதம், பார்வையாளர்களின் நெஞ்சை உருக்குகிறது.

அடுத்து திரையிடப்பட்ட "பனாமா (Panama)" எனும் செர்பியத் திரைப்படம், நவீன உலகத்தின் தொழில்நுட்பங்களால் ஏற்படும் சந்தேகம், ஒரு பெண்ணின் உண்மையான காதலை எப்படி பிரிக்கிறது என்ற கதைக்களத்தில் அமைந்திருந்தது. கல்லூரி முடித்த இளைஞனான யோவான், மாயா எனும் பெண்ணின் மீது காதல் கொள்கிறான்.  காதல் சிறப்பாகச் சென்று கொண்டிருக்க, யோவான் சமூக வலைதளங்களில் மாயாவின் ப்ரோஃபைலை கண்காணித்துக்கொண்டே இருக்கிறான்.

மாயா வெறொரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறாள் என சந்தேகப்படும் யோவான், சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஆராயத் தொடங்குகிறான். அவனுடைய சந்தேகம் முற்றிப்போக, அது தெரிய வரும் மாயா, அவனைவிட்டு பனாமாவுக்கு செல்கிறாள். கடைசியில், யோவான், மாயாவைத் தேடி அலைகிறான். படத்தில், ஆங்காங்கே, பெண்களை கிண்டலடிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

செர்பியப் படத்திலும் பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள்

அடுத்து திரையிடப்பட்ட, த்ரீ விண்டோஸ் அண்ட் ஏ ஹாங்கிங் (Three windows & A hanging) திரைப்படம் பார்வையாளர்களின் கைதட்டல்களை அள்ளியது.

செர்பியாவில் போர் முடிவுக்கு வந்த பின், கொசாவர் எனும் கிராமத்தில், ஒரு பெண்ணை, பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி எடுக்க, அந்தப் பெண், போரின் போது, தன்னிடமும், அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னும் மூன்று பெண்களிடமும், செர்பிய ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் எனக் கூறுகிறார்.

இதைப் பத்திரிக்கையில் பார்க்கும் அந்த கிராம ஆண்கள், அந்த நான்கு பெண்களில் ஒருவர், தங்கள் வீட்டுப் பெண்ணாக இருப்பாரோ என சந்தேகப்படுகின்றனர். இதனால் கிராமத் தலைவரை அந்தப் பெண்கள் யார் என கேட்கின்றனர். பேட்டி கொடுத்தது அந்த கிராம ஆசிரியை தான் என தெரிந்த தலைவர், அதை ஆண்களிடம் கூறுகிறார். இதனால், போரின் போது கணவரை தொலைத்த ஆசிரியையை கிராமமே ஒதுக்குகிறது.

இறுதியில் ஆசிரியையின் கணவர் மீண்டும் கிராமத்துக்கு திரும்ப, உண்மையை அவரிடம் கூறுகிறார் ஆசிரியை, அதன் பின் நடப்பது தான் க்ளைமேக்ஸ். கிராமத்துத் தலைவர் மற்றும் மற்ற ஆண்களின் ஆணாதிக்க மனப்பான்மையை,  காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர்.

    ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)