Published:Updated:

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!
தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

ருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவில் ஏகபோக கதை களங்கள். அண்ணன் தங்கை பாசம், காதல், தாய் தந்தை பாசம், தோழமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம். இப்படி உயிர் கொடுத்த படத்தை வெளியிடுவது தான் இங்கே மிக மிக சிரமம். எந்த நேரம் யார் மனுவுடன் நீதிமன்ற வாசலில் நிற்பார்களோ என தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம்.

2000 வரை கூட வெகு ஜன மக்கள் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாகவே பார்த்தனர் தமிழக மக்கள். 2000-க்கு பிறகு மக்கள் திரைப்படங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர். அதற்கு பிறகுதான் தொடங்கியது தலைவலி. எதை எடுத்தாலும் குற்றம். நல்லது சொன்னாலும் வழக்கு. ஏற்கனவே பலர் சொன்னதை சொன்னாலும் வழக்கு. நின்னா வழக்கு, உட்கார்ந்தா வழக்கு. தும்முனா வழக்கு என எதற்கெடுத்தாலும் வழக்கு.

இதுவரை தமிழ் சினிமாவில் அதிக தடைகளை தாண்டி வெளிவந்த திரைப்படங்கள் குறைந்த எண்ணிக்கைதான் ஆனால் அவை பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. எந்தெந்த படங்கள் அவை என அறிய இணையக் கதவுகளை தட்டினேன். அங்கே சொல்லப்பட்டதோ உலகம் சுற்றும் வாலிபன், விருமாண்டி, துப்பாக்கி, விஸ்வரூபம், தலைவா, கத்தி, கொம்பன், ஜில்லா, புலி என சொற்பமான திரைப்படங்களே. இவை எந்தெந்த வழக்குகளில் சிக்கியது என்பதை அறிவதைக்காட்டிலும் எப்படியான சூழலில் சிக்கியது என்பதுதான் சுவாரஸ்யம்.

உலகம் சுற்றும் வாலிபன் (உ.சு.வா):


1970-களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். உ.சு.வா தான் முதல் வெகுஜன அரசியல் அலையடித்த முதல்படம் எனலாம். எழுபதுகளில் எம்.ஜி.ஆர்தான் உச்சம்.
திமுக-வை விட்டு விலகி எம்.ஜி.ஆர் அதிமுக-வை தொடங்கிய காலம் அது. எம்.ஜி.ஆர் திமுக-வை விட்டு விலகிய பிறகு வெளியான முதல் படம் உ.சு.வா..திமுகவும் தன் பங்குக்கு தன்னால் இயன்ற உபத்திரங்களை செய்தது. சுவரொட்டிகள் மீதான வரியை உயர்த்திது. ஏற்கனவே நிதி நெருக்கடி என்பதால் உ.சு.வா-க்கு எந்தவித  விளம்பர சுவரொட்டிகளும் வேண்டாம் எனக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். 

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

இதற்கிடையில் அதிமுக-வை தொடங்கிய ஆறே மாதங்களில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப் பிரச்னை, கட்சி விவகாரங்கள், தேர்தல் நெருக்கடி என தலைவலிகள் குவியல் குவியலாக வந்து விழுந்தன. இருந்தும் பெருமுயற்சியுடன் எப்படியாவது தேர்தலுக்கு முன் படத்தை ரிலீஸ் செய்வது என அவர் மேற்கொண்ட முயற்சிக்கு பெரும் பலன் கிடைத்தது. சரியாக தேர்தலுக்கு மிக நெருங்கிய நேரத்தில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால், திரையரங்கங்களே திக்குமுக்காடின. வசூல் அள்ளியது. படமும் பக்கா ஃப்ளாக்பஸ்டர். இதன் தாக்கம் தேர்தலில் தெரிந்தது. அதிமுக அமோக வெற்றி. இப்படி வண்டி கணக்கில் பிரச்னைகளை சமாளித்து வெளியான படம் புரட்சித்தலைவரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் வித்திட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதிக தடைகளை மீறி வெற்றி கண்ட படம் இதுவே எனலாம்.

விருமாண்டி

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

கமலின் அற்புத அவதாரங்களுள் இதுவும் ஒன்று. மரண தண்டனையை எதிர்த்து சமூக விழிப்புணர்வோடு வெளியான படம். சுய பரிசோதனைகளும் பிரச்னைகளும் கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. முதலில் இப்படத்துக்கு சண்டியர் என்றுதான் பெயரிடப்பட்டது. பிறகுதான் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. இப்படம் சாதியின் பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இப்படம் வெளியானால் தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலையும் எனக் கூறி ஒரு அரசியல் கட்சித்தலைவர் போராட்டம் மேற்கொண்டார்.

பின் கமல் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து படப்பிடிப்புக்கு பாதுகாப்பு வழங்க கோரினார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்டது. உடனே கமல், தமிழக முதல்வரை சந்தித்து சண்டியர்,  சாதி சமூகத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதல்ல என விளக்கினார். அதன் பின் படத்தின் பெயர் விருமாண்டி என மாற்றப்படுவதாக அறிவித்த பிறகே, மேலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டது. பிறகு 2014-ல் அதே சண்டியர் என்ற பெயரில் புதுமுக நடிகர் நடித்து,  ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கொம்பன்

விருமாண்டிக்கு தடை கோரிய அதே அரசியல் கட்சித்தலைவர்தான் கொம்பனுக்கும் தடை கோரினார். அதே பழைய காரணம். பிறகு படத்தை திரையிட்டு காட்டிய பிறகே வெளியிட தடை நீக்கப்பட்டது.

துப்பாக்கி

விஜயின் கலை வாழ்கையில் துப்பாக்கி ஒரு மைல்கல் திரைப்படம். துப்பாக்கிக்கும் கள்ளத்துப்பாக்கிக்கும் நடந்த சட்டப் போரில், துப்பாக்கியை வெளியிட  தடை விதிக்கப்பட்டது. இறுதியில் துப்பாக்கிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஏன் இதற்கு முதலில் இருந்தே வழக்கு தொடுக்காமல் இருந்திருக்கலாமே? எதற்கு வழக்கு போட்டு வாபஸ் பெற வேண்டும்? வாபஸ் வாங்க என்ன காரணம்? அது திரையுலகில் சகஜமான ஒன்று.

தலைவா

ஹிந்தியில் வெளியான சர்க்கார், தமிழில் வெளியான நாயகன் போன்ற சாயல் என தலைவா விமர்சிக்கப்பட்டாலும், இதன் ரிலீஸ் கதையை கேட்டால் கண்ணீர் வரும். அப்படி ஓர் பெரும் போராட்டம்.

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

தலைவா பிரச்னைக்கு ஆயிரம் சொத்தை காரணங்கள் சொல்லபட்டாலும், உள்நோக்கம் என்னமோ அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். ஆளுங்கட்சியே அத்தனை பிரச்னைக்கும் மறைமுக காரணங்கள் என சொல்லப்பட்டது. தலைப்பு தான் தலைவலி. ஆரம்பத்தில் பிரச்னைக்கு முன்பு தலைவா என்ற தலைப்புக்கு கீழ் “டைம் டு லீட்” என்ற வாசகம் இருந்தது. இதற்கு “தலைமை ஏற்க இதுவே நேரம்” என்று பொருள். போதாதா பிரச்னை கிளப்ப...

தொடக்கத்தில் இருந்தே தெளிவு இல்லாத ஒரு பிரச்னை. என்ன பிரச்னை என்று யாரை கேட்டாலும் “படத்த ரிலீஸ் பண்ணா தியேட்டர்ல பாம் வச்சிடுவோம்னு மிரட்டல் வந்துருக்கு” என்ற பதில் மட்டும்தான். தலைவா ரிலீசுக்கு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல திரையரங்குக்கு வந்த மொட்டை கடுதாசிதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம். பட ரிலீசுக்கு பாமா? என அனைவரும் வாயை பிளக்க, இன்னொரு பக்கம் யார் பாம் வெப்பா?ஏன் வெப்பாங்க? என்ன காரணம் என்ற எந்த கேள்விக்கும் பதில் கிடையாது.

இதை கேட்ட தயாரிப்பு தரப்புக்கு மண்டை காய்ந்தது. என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்க. ரிலீசுக்கு முந்தைய இரவு (வியாழன் இரவு) படம் நாளை வெளியாகாது என தயாரிப்பு தரப்பு அறிவிக்க, முதல் நாள் முதல் காட்சி என ஆரவாரத்தில் இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. மறுநாள் (வெள்ளிக்கிழமை) தியேட்டர் வாசலில் கூடிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே. சரி சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது,

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!


ஆனால் அன்றும் இல்லை. சரியாக பத்து நாள் கழித்து படம் வெளியானது. அதற்குள் தமிழ்நாட்டில் பாதி பேர் திருட்டு விசிடி மூலம் படத்தை பார்த்துவிட்டிருந்தனர். இந்த பத்து நாளில் மாறிய ஒரே விஷயம், தலைவா என்ற தலைப்புக்கு கீழ் இருந்த “டைம் டு லீட்” என்ற வாசகம் நீக்கப்பட்டது மட்டும்தான். வேறு எந்த மாற்றமும் இல்லை.

விஸ்வரூபம் படமும் இதே வகையறாதான் என்பது நாம் அறிந்ததே. இதற்கு முன்பு சினிமா வரலாற்றில் இதுபோல சம்பவம் எதுவும் பதிவானதாக சுவடில்லை. எந்த ஆளுங்கட்சியும் படத்தை அரசியல் நோக்கோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்க்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவம் தான் 1987-ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை. அந்த காலகட்டங்களில் ஒரு கட்சியை தாக்கி நேரடி வசனங்கள் எழுதுவதெல்லாம் சர்வ சாதாரணம். இப்படி ஒரு நிலையில்தான் நீதிக்கு தண்டனைக்கு உருவானது.

சிறையில் இருந்த கருணாநிதியை சந்தித்த எஸ்.ஏ.சி,தான் நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தை தான் இயக்கவிருப்பதாகவும், அது கலைஞரின் கைவண்ணத்தில் உருவாக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கருணாநிதியும் சிறையில் இருந்தபடியே நீதிக்கு தண்டனைக்கு கதை எழுதி கொடுத்தார். அதில் எதிர்க்கட்சியை தாக்கிய வசனங்களும் அடங்கும்.

கத்தி

படத்தின் பாடல்கள், தலைப்பு என வணிக நோக்கம் இருந்தாலும் விஷயம் சொல்லப்பட்ட விதம் இருநூறு சதவீதம் நேர்மை. மற்ற படங்களுக்கு கூட வெளியீட்டின்போதுதான் பிரச்னையை சந்திக்கும். ஆனால் கத்திக்கு பூஜை போட்ட நாள் முதலே பிரச்னைக்கும் சேர்த்து பூஜை போடப்பட்டது போல. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே லைக்கா நிறுவனம் பற்றிய வதந்திகள் வரத்தொடங்கின. நிலைமை மோசமாகவே முருகதாசும், கருணாகரனும் (ஐயங்கரன் இன்டர்நேஷனல்ஸ்) இணைந்து திருமாவளவன், பழ.நெடுமாறன் என தலைவர்களை சந்தித்து லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்த வணிக தொடர்பும் இல்லை என விளக்கினர்.

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

இருந்தும் பிரச்னை முடிந்த பாடில்லை. தொடர்ந்து சர்ச்சை நீடிக்கவே, பொறுக்க முடியாத தயாரிப்பு தரப்பு,  தங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதாரங்களை காண்பித்தனர். தோண்ட தோண்ட சுரக்கும் கேணி என்பது போல தீர்க்க தீர்க்க வளர்ந்து கொண்டே போனது. பின் 65 தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி (உண்மையில் தமிழகத்தில் அத்தனை அமைப்புகள் உள்ளன என்பது அன்றைக்குதான் எனக்கு தெரியும் உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை) கத்தி மீது வழக்கு தொடுத்தனர். 

தயாரிப்பு முனையில் இருந்து என்ன சமாதானம் கூறினாலும் அவர்கள் தொடர்ந்து இரு கோரிக்கைகளையே முன் வைத்தனர். ஒன்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாற்றப்பட வேண்டும் அல்லது லைக்கா என்ற பெயர் நீக்கப்பட வேண்டும். விஜய் தரப்பு இந்த கோரிக்கைகளை ஏற்றாலும், லைக்கா தரப்பு ஏற்பதாக இல்லை. தீபாவளி நெருங்கியது, படமும் வெளியிட தயாரானது. வெளியீட்டுக்கு முந்தைய நாள் கத்தி படத்தின் ரிலீசை எதிர்த்து, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கங்கள் இரண்டின்  மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 

இதுவரை எந்த தமிழ் படத்துக்கும், ஏன் இந்திய வரலாற்றில் எந்த படத்துக்கும் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு நவீன ரக எதிர்ப்பு கிளம்பியதில்லை. உடனே தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் முன் பதிவு நிறுத்தப்பட்டது. தமிழ் திரைப்பிரபலங்கள் பலர் இச்சம்பவத்தை சமூக வலைதளங்களில் வன்மையாக கண்டித்தனர். கண்டித்ததோடு நிறுத்திக் கொண்டனர்.

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!


பிறகு பேச்சுவார்த்தைக்கு இறங்கிய தயாரிப்பு தரப்பு, இறுதியில் லைக்கா என்ற பெயரை நீக்குவதாக ஒப்புக்கொண்டது. “அப்பாடா ஒரு வழியா படத்த ரிலீஸ் பண்ணியாச்சு “ என படக்குழு மனதில் பெருமூச்சுவிட்டது வெளியில் யாருக்கோ கேட்டது போல. உடனே கத்தி என்னுடைய கதை என ஒருவர் வானத்தில் இருந்து குதித்தார். நல்லவேளை விஜய் வெளிநாடு போகிறேன் என சொல்லவில்லை. பிரச்னையை ஒருவாறு முடித்தார் தயாரிப்பாளர்.  

புலி

படம் தொடங்கியது முதல் முடித்த வரை எந்த பிரச்னையும் இல்லை; எல்லாம் சுமூகம்தான். பட ரிலீசுக்கு முந்தைய நாள்தான் பிரச்னை ஆரம்பித்தது. யாரோ சொல்லி வைத்து அனுப்பினார்போல் ரிலீசுக்கு முந்தைய நாள் புலி படக்குழுவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினர். புலி படக்குழுவினர் வீடுகளில் மட்டும் ஏன் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்காக,  சினிமா பிரபலங்கள் சிலரையும் சேர்த்து கொண்டார்கள் போலும். மறுநாள் “காலை காட்சிகள் ரத்து” என தியேட்டர்களில் கரும்பலகைகள் தொங்கவிடப்பட்டன. ரசிகனும் எத்தனை நாள் பொறுப்பான்? 

இங்கே கவனிக்கப்பட வேண்டியது ரிலீசுக்கு முந்தைய நாள் வருமான வரித்துறை சோதனை நடத்த என்ன காரணம்? ஆனால் விஜயின் முந்தய படங்கள் போல் இந்த படத்துக்கு சட்ட ரீதியான தடை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இரவு பதினோரு மணிக்கு மேல்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை வெளியே செல்ல அனுமதித்தாகவும், இதனால் ரிலீஸ் வேலைகள் முடங்கி போனதால் வேறு வழியின்றி காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டது.

மேற்சொன்ன சொற்ப படங்களில் விருமாண்டியும் கொம்பனும் ஒரே விதமான சாதி பிரச்னைகளைதான் சந்தித்தது. சாதி என்ற பெயரில் இரண்டுமே உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக நசுக்கப்பட்டன. படம் பார்த்த நமக்கே புரியும், இவை சாதி சமூகங்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டவை அல்ல என்பது. ஆனால் அரசியல்வாதிகள் எப்படி வெறும் தலைப்பை மட்டும் வைத்து படத்தின் கதை களத்தை முடிவு செய்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான ஒன்று. கலாச்சார கடலில் மூழ்கி, நாகரீக கடலில் திளைத்த நமக்கு அறிவு என்னும் வாள் மழுங்கிவிட்டதுபோலும்.இதற்கு காரணம் அறிவோ கலாச்சாரமோ அல்ல. இங்கே சரியான அங்கீகாரத்துக்கு தன்னை உட்படுத்திக் கொள்பவரைக் காட்டிலும் விளம்பரத்துக்காக தன்னையே விற்பவர்கள்தான் அதிகம்.

மேலே சொன்ன அத்தனை வழக்குகளையும் சற்று உற்றுப் பார்த்தால், உங்களுக்கே  உரித்தான சில கேள்விகள் எழும்.

1. சண்டியர் என்ற பெயர் சூட்டியாதால் 2004-ம் ஆண்டு வெளியான விருமாண்டியை தடுத்தவர் அதே பெயரில் 2014-ம் ஆண்டு ஒரு புதுமுக நடிகர் நடித்து வெளியான சண்டியரை ஏன் எதிர்க்கவில்லை?

2.அதே போல் ஜில்லா 2013-ம் ஆண்டு நவம்பரில் இருந்தே அதே பெயரில் எடுக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் திடீரென படம் வெளியாக ஒரு நாள் முன்பு படத்தின் பெயர் என்னுடையது என ஒருவர் வழக்கு தொடுக்க என்ன காரணம்?

தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்!

கடைசி நேரத்தில் கழுத்தை பிடித்தால் கையில் அள்ளி தருவார்கள் என்றா? சத்தியமாக இதுதான் காரணம். இப்படி ரிலீஸ் நேரத்தில் வழக்கு தொடுத்து தடை பிறப்பிப்பதால் குறித்த நேரத்தில் வெளியிட முடியாத அவஸ்தைகள்.அண்டை நாடுகளில் ஒரு நாள் முன்பே படம் வெளியாகிவிடும் என்பதால் படத்தின் பிரதிகள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டு விடும். தமிழ் நாட்டில் தடை விதித்தாலும் அங்கே வெளியிடப்படும். அங்கேயும் திருட்டு விசிடி சமாச்சாரங்கள் உண்டு. படம் வெளியான அடுத்த சில மணிகளில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். தமிழ் நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டால் அதற்கு பின் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் தான் பூதாகரம்.

3. பத்து நாள் தாமதமாக வெளியான தலைவா படத்துக்கு “டைம் டு லீட்” என்ற வாசகம்தான் பிரச்னையா?

4. கத்தி பிரச்னையின்போது தமிழர்களின் வாழ்வுக்காக போராடும் கட்சிகள் என தங்களை கூறிக்கொண்ட அந்த 65 தமிழ் அமைப்புகளும்  ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது எங்கே தொலைந்து போனார்கள்?

சென்னையும் கடலூரும் வெள்ளத்தால் தத்தளித்தபோது கூட அந்த 65 தமிழ் அமைப்புகள், எந்த வெள்ள நிவாரண செயல்களிலும் ஈடுபட்டதாக கேள்விப்படவில்லை. நேற்று கத்தியை வெளியிட்ட அதே லைக்கா தான் இன்று நானும் ரௌடிதான் படத்தை வெளியிட்டது, விசாரணை படத்தை வெளியிட உள்ளது, எந்திரன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளது. இப்போது எங்கே போனார்கள் அவர்கள்? இப்போது என் கேள்வி இன்று லைக் செய்யப்படும் அதே லைக்கா, அன்று அன்லைக் (unlike) செய்யப்பட்டதன் காரணம் என்ன? விஜய் என்ற தனி நபருக்குக்காகவா?

என்னை கேட்டால் இவர்களை திடீர் தமிழர்கள் என்பேன். தமிழ், தமிழன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் இவர்கள்,  தமிழனுக்கு ஏற்படும் துயரை துடைக்க வரமாட்டார்கள்.  ஒரு பிரச்னை என்றால் களத்தில் நிற்கமாட்டார்கள். ஆனால் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் என்றால் வரிந்துகட்டி போராடுவார்கள்.

இந்த சிக்கல்களிலிருந்து தமிழ்சினிமாக்கள் விடுபட என்னதான் தீர்வு? சட்டம்தான் இதற்கு ஒரே தீர்வு. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். ஒரு படத்தின் வெளியீடு மீது தடை கோர விரும்பினால், குறைந்தது படத்தின் வெளியீட்டுக்கு பத்து நாட்கள் முன்பே நீதிமன்றத்தில் தடை கோர மனு சமர்பிக்கப்பட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் மட்டுமே நீதிமன்றம் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில் தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இதனால் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படும் பிரதிகள் முன்பே நிறுத்தி வைக்கபட்டுவிடும். குறைந்தது 50 சதவீத திருட்டு விசிடி நஷ்டத்தில் இருந்தாவது மீளும். இப்படி சமூக நலனோடு ஒரு சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே தமிழ் சினிமாவை நம்பியுள்ள பல நூறு குடும்பங்களின் அவஸ்தைகள் தீரும். சட்டம் இதற்கு செவி சாய்க்குமா?

-  ஈ.ப.பாஸ்கர்
 

அடுத்த கட்டுரைக்கு