Published:Updated:

மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்

Vikatan Correspondent
மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்
மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்

சென்னை திரைப்பட விழாவின் ஏழாம் நாள், கோரஸ், ஹவ் டு வின் தி செக்கர்ஸ், ஃபீனிக்ஸ், மேஜிகல் கேர்ள், க்ரானிக், அன்வர் கா அஜாப் கிஸ்ஸா போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

முதல் காட்சியாக கேஸினோ திரையரங்கில் திரையிடப்பட்டது க்ரானிக். டேவிட் எனும் ஆண் செவிலியர் மற்றும் அவர் சந்திக்கும் நோயாளிகளைப் பற்றிய கதை. நூற்றுக்கும் குறைவான ஷாட்களை கொண்ட இந்த 93 நிமிட திரைப்படத்தில் ஒவ்வொரு ஷாட்டும் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை நீள்கிறது. மிகப் பொறுமையாக படம் நகர்ந்ததால், பலர் திரையரங்கை விட்டு நகர்ந்தாலும், டேவிட் சந்திக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரின் நிலையையும், முழுமையாகக் காட்டுகிறது இத்திரைப்படம்.

மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்

மிகக்குறைந்த ஷாட்கள் இருந்தாலும், படத்தின் திரைக்கதை, நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலே, இப்படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது. கடைசி ஷாட் வரை இழுத்துக் கொண்டே போன படம், ஒரே ஃப்ரேமில் திரையரங்கையே கதிகலங்கச் செய்துவிட்டது.

அடுத்த படம், பழம்பெரும் இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தாவின் இயக்கத்தில் உருவான அன்வர் கா அஜாப் கிஸ்ஸா. இந்தித் திரைப்படமான இதன் ஹீரோ நவாசுதீன் சித்திகி, அறிமுகக் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறுகிறார். அவருடைய சிறப்பான நடிப்பு க்ளைமேக்ஸ் வரை குறையவில்லை. துப்பறிபவராக வரும் நவாசுதீன், தனக்காக வாழ நினைக்கிறார். தான் தொலைத்த காதல், தன் பழைய வீடு, குழந்தையாக இருக்கையில் தான் பாட்டு கேட்ட கிராமஃபோன் என அனைத்தையும் மீண்டும் காண நினைக்கிறார்.

மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்

தான் வளர்க்கும் லாலு எனும் நாயைத் தவிர, சொந்தங்கள் யாரும் இல்லா நகர வாழ்க்கையை விட்டு, மீண்டும் கிராமத்துக்குச் செல்ல விரும்புகிறார். அங்கு செல்லும் அவருக்கு, அவருடைய கற்பனைகள் அனைத்தும், கண் முன் தெரிகின்றன. மறைந்த அவருடைய பெற்றோர், அவருடைய காதலி என அனைவரும் அவரின் கண்களுக்குத் தெரிகிறார்கள். இறுதியில் கிராமஃபோனில் பாடல் ஒலிக்க, அவருடைய தாய் நடனம் ஆடி அவரைத்  தூங்க வைப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

அடுத்து திரையிடப்பட்ட ஜெர்மானியத் திரைப்படமான ஃபீனிக்ஸ், ஹிட்லரால், யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில், முகத்தில் காயம் ஏற்பட்டு, முகமாற்று சிகிச்சை செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் கதை. சிகிச்சைக்குப் பின் பழைய முகத்தைப் போல் இல்லாமல் போவதால், தன்னுடைய கணவன் தன்னை ஏற்றுக்கொள்வானா என்ற தயக்கத்துடன், தனது கணவனான ஜானியை தேடிச் செல்கிறாள் நெல்லி.

மனைவியையே மனைவியாக நடிக்க வைத்த ஜெர்மானியத் திரைப்படம்

ஒரு கிளப்பில் வேலை செய்யும், ஜானி, நெல்லியை காண்கிறான். தனது மனைவி இறந்துவிட்டாள் என நினைக்கும் ஜானி, நெல்லியைக் கண்டவுடன், அவள் தனது மனைவியைப் போலவே இருப்பதை உணர்கிறான். நெல்லியும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் தன்னை எஸ்தர் எனும் பெயரால் அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனது மனைவி மூலம் கிடைக்க வேண்டிய நிலத்தை, எஸ்தரை, நெல்லி போல் நடிக்க வைத்து பெற்று விடலாம் என ஜானி முடிவு செய்கிறான்.

எஸ்தரும் இதற்குச் சம்மதிக்க, நெல்லியைப் போன்றே அவளுக்கு உடையணிவித்து, அவளை நெல்லியின் பெற்றோரிடம் கூட்டிச் செல்கிறான். அவர்களுடன் சேர்ந்து இவனும் நெல்லியை முதல் முறை காண்பது போல் நடிக்கிறான். இறுதியில் நெல்லி, பழைய பாடல் ஒன்றைப் பாட, நெல்லியின் கையில் பச்சை குத்தப் பட்டிருப்பதைக் கண்டு, அவளை அடையாளம் காண்கிறான். விறுவிறுப்பாகச் செல்லும் திரைக்கதை பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றது.

ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிகையாளர்)