Published:Updated:

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!
நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அண்ணா செல்கிறார். அப்போது நிருபர்களுடனான கலந்துரையாடலில், அண்ணாவிடம் கேட்கிறார்கள், ‘ஏன் காங்கிரஸ் தோற்றது?’ என்று. அதற்கு சற்றும் யோசிக்காமல், “நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததால்...” என்று பளிச்சென்று பதில் சொல்கிறார்.

ஆம். அவர்தான் அண்ணா. “எந்த கட்சியும் பத்தாண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது. அதுதான் சரி. பதவியில் இருக்க இருக்க அதிகார போதை ஏறிவிடுகிறது. நான் அதைதான் வேண்டிக் கொள்கிறேன். அதிகார போதை  என் மண்டையில் ஏறாமல் இருக்க வேண்டும்” என்ற நிதர்சனத்தை பேசியவர். இப்போது அதிகார போதை ஏறிய எந்த தலைவருக்காவது  இந்த உண்மையை பேச தைரியம் இருக்கிறதா...?

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க என்ற புதிய கட்சி தோன்றியபோது பெரியார், “சோம்பேறிகள், செயலற்ற சிறுவர் கூட்டம், உழைக்க தெரியாதவர்கள். திராவிடர் கழகத்தின் கொள்கை அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ, தேர்தலில் நிற்பதோ கிடையாது. ஆனால், அண்ணாதுரைக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் வெளியேறிவிட்டார். அதுதான் உண்மையான காரணம்” என்று குற்றம் சுமத்தினார்.

ஆனால் அதற்கு அண்ணாவின் எதிர்வினை எப்படி இருந்தது தெரியுமா, “இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், நான் ஏற்றுக் கொண்ட தலைவர் பெரியார். வேறு தலைவரின் தலைமையை நான் எண்ணிக்கூட பார்க்க முடியாது. எனவே, தி.மு.கவிற்குத் தலைவர் என்ற பதவியே வேண்டாம்” என்கிறார்.

ஆம்.  அண்ணா இறுதிவரை அப்படிதான் இருந்தார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து, தி.மு.கவையும், அண்ணாவையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த பெரியாரிடம்தான், அந்த தேர்தலில் 137 இடங்களை வென்று  ஆட்சியைப் பிடித்தபோது தன்னுடன் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பவர்களுடன் அண்ணா ஆசி வாங்க சென்றார்.

“காமராஜரின் தோல்வியை கொண்டாடாதீர்கள். அது கொண்டாட கூடியதல்ல. காமராஜர் போன்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்” என்று சொல்லிய அண்ணாவிடம், இந்த பண்பை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

அதே அண்ணா,  பெரியார் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார். ஆம். ஜூலை 13, 1949-ல், விடுதலை தலையங்கத்தில் பெரியார் தன்னை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று அண்ணாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தபோது, தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை போக்க  தம் தலைவர் பெரியாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அண்ணா.

காங்கிரஸை தீவிரமாக அரசியல் களத்தில் எதிர்த்துக் கொண்டே, வேலூரில் காந்தி சிலையை திறக்க சென்றவர்.  தாம் 1967-ல் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றபோது பக்தவச்சலத்திடம், 'நல்லாட்சி செய்ய யோசனை சொல்லுங்கள்' என்றவர், காமராஜரை நேரில் சந்தித்து ஆசி கேட்டுப் பெற்றவர்.  ஆம். எதிர் கட்சி என்பதற்காக அவர்,  அவர்களை இப்போது இருப்பது போல் எதிரி கட்சியாக என்றுமே பார்த்ததில்லை. ஆனால், அவரின் இந்த அரசியல் பண்பு அவரை தலைவராக ஏற்றுக்  கொண்ட எந்த திராவிட கட்சிகளிடமாவது இன்று இருக்கிறதா...?

அது போல் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமது குடும்பத்தினருக்கு என்று எந்த சிறப்பு அனுமதி சீட்டும் வழங்க அனுமதிக்கவில்லை. அவரது மனைவியை தவிர,  மற்றவர்கள் பொது மக்களோடு சேர்ந்து நின்றுதான் பதவியேற்பு விழாவை கண்டனர். இதை படிக்கும் போது சமகால திராவிட தலைவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் உங்கள் நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...

அறுபதுகளில் பாராளுமன்றத்தில், இளம் வயது எம்.பி க்கள் யாரையாவது பார்த்தால், நிச்சயம் அவர்கள் தி.மு.க எம்.பிக்களாகதான் இருப்பார்கள் என்று வட இந்திய தலைவர்கள் சொல்வார்களாம். ஆம். இளைஞர்களை அடையாளம் கண்டு சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர் அண்ணா. ஆனால், இன்றைய தலைவர்கள் இப்போதுதான் பேச துவங்கி இருக்கிறார்கள், இளைஞர்களுக்கு பதவி தர வேண்டுமென்று.

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

அண்ணா ஆட்சியில் இருந்தபோது சில மாநிலங்கள் நிதி நிலைமையை காரணம் காட்டி மதுவிலக்கு கொள்கையை கைவிட்டன. ஆனால், அண்ணா தமிழ்நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் மதுவிலக்கை தளர்த்தவோ, நீக்கவோ இல்லை. குடிப்பழக்கம் சமூக அமைதியை கெடுத்துவிடும் என்று 1968-ல் மது விலக்கு மாநாட்டை நடத்தியவர் அண்ணா. இப்போதும் உங்களுக்கு ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகள் நினைவிற்கு வந்தால், நான் பொறுப்பல்ல...

1967-ல் அண்ணா தேர்தல் பிரச்சாரத்திற்காக விழுப்புரம் சென்ற போது, இரவு தங்க அரசு விருந்தினர் மாளிகையில் இடமில்லை என்று சொல்லி விட்டனர். அது குறித்து சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் காரிலேயே படுத்து தூங்கியவர்  அண்ணா. இந்த எளிமை இன்றைய எந்த அரசியல் கட்சிகளிடமாவது இருக்கிறதா...?

ஆம். நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை. அவருடம் சேர்த்து அனைத்து அரசியல் பண்புகளையும் புதைத்துவிட்டோம்.

(இன்று அண்ணா நினைவு நாள்)

- மு. நியாஸ் அகமது

அடுத்த கட்டுரைக்கு