Published:Updated:

ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்குக: இந்திய செஸ் கூட்டமைப்பு

Vikatan Correspondent
ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்குக: இந்திய செஸ் கூட்டமைப்பு
ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்குக: இந்திய செஸ் கூட்டமைப்பு
ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்குக: இந்திய செஸ் கூட்டமைப்பு

சென்னை: உலகின் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் மத்தியக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

செஸ் விளையாட்டின் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமைகளைச் சேர்த்த விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஏற்கெனவே இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்றவர் என்பது கவனத்துக்குரியது.

இந்தியாவில் பத்ம விபூஷண் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் ஆனந்தையே சாரும். அத்துடன், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் முதன் முதலில் பெற்றவரும் இவரே.

கடந்த 1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது தொடங்கி, பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று, உலகின் முதல்நிலை சாம்பியன் என்ற கெளரவத்தையும் பெற்றவரான ஆனந்த்,  உலக சாம்பியனாக தொடர்கிறார்.

முன்னதாக, பாரத ரத்னா விருதுக்கான விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் இருந்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைகளில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தது.